Published : 22 Aug 2019 11:50 AM
Last Updated : 22 Aug 2019 11:50 AM
டேவிட் பொன்னுசாமி
பல நாட்களுக்குத் தொடர்ந்து உபவாசமிருத்தல் என்பது இறை நம்பிக்கையில் ஆழ்ந்தவர்களுக்குக்கூடக் கடினமானதே. அத்தகைய சவால் மிகுந்த விரதத்துக்குப் புதிய விளக்கம் தந்தவர் புனித சிமியோன். சொல்லப்போனால் துறவறத்துக்கே புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் அவர். சிரியாவின் வட எல்லைப் பகுதியை ஒட்டிய சிசன் நகரத்தில் கி.பி. 388-ம் ஆண்டில் பிறந்தார் புனித சிமியோன். ஆடு மேய்ப்பவனாகச் சிறுபிராயத்தைக் கழித்தார். 16 வயதை எட்டுவதற்கு முன்பே இறைவழிபாட்டில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். கிறிஸ்தவ இறையியல் மடத்தில் இணைந்தார்.
எடுத்த எடுப்பிலேயே தீவிரமான தவ வாழ்க்கையில் ஈடுபடலானார். தவக்காலம் முழுவதும் அன்னமோ நீராகாரமோ இன்றி உபவாசமிருந்தார். உண்மையாகவே இவ்வளவு தீவிரமாக உபவாசமிருக்க முடியும் என்பதை அன்று அவருடன் இருந்தவர்கள்கூட நம்பவில்லை. அவர் ஏமாற்றுவதாக நினைத்து மடத்தில் இருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விரதத்தின் மீது தான் கொண்டிருந்த பற்றை நிரூபிக்க உண்ணாவிரதத்துடன் நெடுநேரம் கால்கடுக்க நிற்பது என்ற பழக்கத்தையும் இணைத்துக்கொண்டார். எதையும் ஊன்றாமல் நின்றபடி உபவாச நாட்களைக் கழிக்கும் புதிய வழக்கத்தை நாளடைவில் ஏற்படுத்திக்கொண்டார்.
ஒருகட்டத்தில், ஆள் அரவமில்லாத பாலைவனமொன்றில் 40 முழத்துக்கும் குறைவான பரப்பளவு கொண்ட குடிசைக்குள் தன்னைத்தானே மூன்றாண்டுகளுக்குச் சிறைப்படுத்திக்கொண்டார். உணவு, நீரின்றின்றிக் தவக்கால நாட்கள் முழுவதுமாக நின்றபடி கழித்தார். வெளி உலகத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டாலும் அவருடைய தவக்கோலம் குறித்து அறிந்த பொது மக்கள் அந்தக் குடிசையை முற்றுகையிட்டனர். புனித சிமியோன் வெளிவந்து காட்சியளித்துத் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டினர்.
இதனால் காலப்போக்கில் தன்னுடைய இறை பக்திக்கான நேரம் குறைந்துகொண்டுவருவதைக் கலக்கத்துடன் எதிர்கொண்டார் புனித சிமியோன். தன்னுடைய தவத்துக்கும் மக்களின் வேண்டுகோளுக்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்கினார். ஒரு தூணை நட்டு அதன் மேல் ஒரு பலகை அளவுக்கான பரப்பை ஏற்படுத்தி அதையே தன்னுடைய உறைவிடமாக மாற்றினார்.
மரணம் தன்னைத் தழுவும்வரையில் அதன் மீதே வீற்றிருக்க முடிவுசெய்தார். ஆரம்பத்தில் 9 அடிக்கு எழுப்பப்பட்ட தூணில் வீற்றிருந்தார். நாட்கள் உருண்டோடத் தன்னுடைய இறுதி நாட்களில் 50 அடி உயர் தூண் மீது வீற்றிருந்தார். அதிலிருந்தபடியே மக்களுக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் பிரசங்கம் செய்தார். 36 ஆண்டுகள் தூணின் மேல் கழித்தவர் 2 செப்டம்பர் கி.பி. 459-ல் இயற்கை எய்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT