Published : 22 Aug 2019 10:28 AM
Last Updated : 22 Aug 2019 10:28 AM

உட்பொருள் அறிவோம் 27: அனந்தசயனபுரி

சிந்துகுமாரன்

எல்லைகள் எவையுமற்ற திருப்பாற்கடல். அதில் வளைந்து சுழன்று மிதக்கும் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன். அதன்மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள். காலடியில் திருமகள். பெருமாளின் நாபியிலிருந்து வளர்ந்து மேலெழும் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மன். இதுதான் அனந்தசயனம். இது பிரபஞ்சம் பற்றிய மிகவும் முக்கியமானதொரு குறியீடு.

அனைத்து மதங்களின் நூல்களி லும் நாம் காணும் கதைகளும் குறியீடுகளும் சொற்களால் நேரடியாகச் சொல்லிவிட முடியாத உண்மைகளைக் குறிக்கின்றன. அடையாளங்கள், குறியீடுகள், இரண்டும் தன்மையளவில் வேறானவை. மொழியும் மொழியின் சொற்களும் குறியீடுகளல்ல; அடையாளங்கள். அடையாளம் என்பது ஒரு தெரிந்த பொருளைக் குறிப்பது. கிளி என்னும் பெயர் ஓர் அடையாளம்.

தெரிந்த ஒரு பொருள். ஆனால், குறியீடு என்பது நாம் அறியாத, மனத்தளவில் நேரடியாக அனுபவம் கொள்ள முடியாத விஷயத்தைக் குறிக்கிறது. தாமரை மலரின்மீது அமர்ந்திருக்கும் பிரம்மன் என்பது ஒரு குறியீடு. உண்மையில் அவ்வாறு யாருமில்லை. ஆழமான ஒரு உண்மையை அது விளக்க முற்படுகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மன், கிருஷ்ணன், அம்பிகை, என்றெல்லாம் சொல்லும்போது மனத்தால் நேரடியாக அறிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறோம். இவையெல்லாம் குறியீடுகள். கடவுள் என்னும் சொல்லே ஒரு குறியீடுதான்.

பிரபஞ்சத் தளங்கள்

அனந்தசயனம் என்னும் பிம்பம் ஆழமான ஒரு குறியீடு. அந்தப் பிம்பத்தை மூன்று தளங்களாகப் பிரிக்கலாம்: கீழே திருப்பாற்கடல், நடுவில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் நாராயணன்; காலடியில் திருமகள்; மேலே தாமரை மலரின் மீது பிரம்மன். ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு பிரபஞ்சத் தளத்தைக் குறிக்கிறது.

திருப்பாற்கடல் என்பது பிரபஞ்சம் உருக்கொள்வதற்கு முன்னால் உள்ள நிலை. உருவமும் உள்ளடக்கமுமற்ற பரவெளி. பரவெளியைக் கடல் என்று ஏன் சொல்ல வேண்டும்? வெளி என்னும் சொல் வெறுமை என்று பொருள் தந்துவிடக்கூடும். பரவெளி வெறுமையல்ல; முழுமை; நிறைவு. அதனால் கடல் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அனைத்தும் இந்தக் கடலின் நீராலானது. சிருஷ்டிக்கு முன்னாலும் அப்பாலும் விரிந்திருக்கும் முழுமை இது.

பிரளயத்தின்போது, அனைத்தும் அழிந்த பின்னரும் தான் நிலைத்திருக்கும் ஆதி சிவம். இதுவே பிரபஞ்சத்தின்தோற்றுவாய். எல்லாம் இதிலிருந்து உருவாகிப்பின் கடைசியில் இதிலேயே கரைந்துபோகின்றன. இது வேறெந்த வஸ்துவாலும் ஆனதல்ல. இதுவே பரவஸ்து. ஆகையால், இது அழிவற்றது; முதலும் முடிவுமற்றது. இந்த நிலையில் உயிர்சக்தியானது, அடிவயிற்றில், நாபிக்குக் கீழே வேர்கொண்டிருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தின்போது இந்தத் தளத்தில்தான் உயிருணர்வு போய் அடங்குகிறது.

இரண்டாம் நிலை, ஆதிசேஷனின் மேல் சயனத்திருக்கும் நாராயணன்; அவன் காலடியில் திருமகள். சேஷம் என்பது மிச்சம்; அனைத்தும் அழியும்போது எஞ்சுவது. இந்த மிச்சத்தை வைத்துத்தான் அடுத்த பிரபஞ்சம் உருவாகிறது. இது பிரபஞ்ச நினைவின் சாரம். சிருஷ்டி முழுவதும் பிரளயத்தின்போது அழிந்து போகும்போது, இது மட்டும் மிஞ்சுகிறது. பிரளய நீர், பிரளய வெள்ளம் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள்.

புதிய அமைப்பு

பிரளயம் என்றால் பௌதிக உலகமே அழிந்துபோகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உலகம் ஒரு ஆழ்மன அமைப்பு. புதிய உண்மைகள் வெளிப்படும்போது ஒரு அமைப்பு மறைந்து, இன்னொரு அமைப்பு உருவாக முடியும். இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்று சினங்கொள்கிறார் வள்ளுவர். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,’ என்று முழங்குகிறார் பாரதியார். உலகு, ஜகம் என்று இவர்கள் சொல்வது இயற்கைத் தளம் இல்லை; மரம் செடிகொடிகள், மலைகள் இல்லை.

இது மனித இனத்தின் கூட்டுமனத்தில் அமைந்திருக்கும் ‘உலகம்’ என்னும் அமைப்பு. மனத்தால் கட்டப்பட்டது; மாறக்கூடியது; மாற்றப்படக்கூடியது. சொல்லப்போனால் இப்போது பூமியின்மேல் பெரும் மாற்றம் தொடங்கியுள்ளது. பழைய அமைப்பு கலைந்து, புதியதொரு உலக அமைப்பு உருக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. பழைய நம்பிக்கைகள் உதிர்ந்து போய்ப் புதிய பார்வைகள் வெளிப் படத் தொடங்கியுள்ளன. இன்னும் ஒரு நூற்றாண்டுக்குமேல் இந்த மாற்றத்தின் விளைவுகளை நாம் காண முடியும்.

எஞ்சுவதே சேஷம்

பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் முடிந்து புதியதொரு கட்டம் வெளிப்படும்போதும் இவ்வாறே முந்தைய கட்டத்தின் அடிப்படைகளைப் பிரக்ஞை தக்கவைத்துக்கொள்கிறது. இவ்வாறு எஞ்சுவதுதான் சேஷம். அதிலிருந்துதான் புதிய பிரக்ஞை - ஒரு புதிய உலகம் - வெளிப்படுகிறது. நாராயணன் என்பது ‘நான்’ என்னும் அடிப்படை உணர்வு. ஆனால், இந்த ‘நான்’ உலகத்தில் இயக்கம் கொள்ளும் நான் அல்ல. இது அனைத்து உயிர்களின் உள்மையத்தில் பொதிந்து உயிருணர்வாக வெளிப்படும் தன்னறிவு. ‘விஷ்ணு ஒருவனே அகிலத்தின் ஆன்மா,’ என்கிறார் அன்னமாச்சாரியார். இந்த ‘நான்’, இந்த ஆன்மா தன்னளவில் காலாதீதமானதாக இருப்பினும், எப்போதும் கடந்து சென்றதன் அடிப்படையில்தான் உலகில் இயக்கம் கொள்கிறது. அதுவே முதல் உலகத்தின் எச்சம்; ஆதிசேஷன்; அனந்தன் என்பதும் அவனுக்கு இன்னொரு பெயர்.

முடிவில்லாதவன் என்று பொருள். ஒன்று பலவாக வெளிப்படுவது அந்த எச்சத்திலிருந்துதான் நடக்கிறது. அனந்தனின் உடலிலிருந்து பிரியும் ஆயிரம் தலைகள் இதைத்தான் குறிக்கின்றன. இதே தளத்தில்தான் உயிருணர்வு ஆண்மை-பெண்மை என இரண்டாகப் பிரிவு கொள்கிறது. அதனால்தான் இந்தத் தளத்தில் நாராயணனுடன் திருமகளும் இருக்கிறாள். கிடந்த திருக்கோலத்தில் நாராயணன் இருக்கும் அனந்தசயனத்தில் காலடியில் இருக்கும் திருமகள். நின்ற திருக்கோலத்தில் இருக்கும்போது அவன் இதயத்தில் குடிகொள்கிறாள். நம் நெஞ்சுப் பகுதியில்தான் ‘நான்‘ உணர்வு உறைந்திருக்கிறது என்னும் உண்மையை இது குறிக்கிறது. இந்த ‘நான்’ உணர்வு பெண்மையின் அம்சம். அதனால்தான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார்.

நாராயணனின் நாபியிலிருந்து மேலெழும் தாமரை மலரின்மேல் பிரம்மன் அமர்ந்திருக்கிறான். பிரம்மன் என்பது உலகில் தனி உயிராகத் தன்னை உணரும் ‘நான்’ என்னும் சுயவுணர்வு. இது நெற்றியில் இரண்டு புருவங்களுக்கும் இடையில் இருந்து அறிவுணர்வின் ஒளியாக வெளிப்படுகிறது. இங்கிருந்துதான் நாம் புறவுலகைப் பார்க்கிறோம். நாபியிலிருந்து நெஞ்சத்தின் வழியாகப் புருவமத்தியை அகவய மாக இணைக்கும் சக்தியின் மெல்லிய இழைதான் தாமரைத் தண்டு.

நாபிக்கு நான்கு விரற்கடை கீழே ஒரு தளம்; நெஞ்சின் நடுவில் இரண்டாம் தளம்; புருவ மத்தியில் மூன்றாம் தளம். இந்த மூன்று தளங்களும் சேர்ந்துதான் மனிதப் பிரக்ஞை - மனித அனுபவத் தளம் - கட்டமைக்கப்படுகிறது. அடித்தளம் அடிப்படை இருப்புணர்வு நிலைகொண்ட தளம். சுத்த இருப்புணர்வு அது. அடித்தளத்தி லிருந்து மேலெழும் சக்தி, நெஞ்சுப் பகுதியில் ‘நான்’ என்னும் சுய உணர் வாக விகாசம் பெறுகிறது. மேலே புருவங்களின் நடுவில் தனிச்சுய அறிவுணர்வின் ஒளியாக உயிர்சக்தி மலர்கிறது. மனித உயிரின் உள்ளமைப்பை விளக்குவதுதான் அனந்தசயனம் என்னும் பிம்பம். தனக்குள்ளே விரிந்தி ருக்கும் பிரபஞ்சத்தில் அகவயமாக நிலைத்திருக்கிறது நாராயணனின் கவனம். இதுதான் அறிதுயில்.

(அறிவது தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x