Published : 15 Aug 2019 12:51 PM
Last Updated : 15 Aug 2019 12:51 PM
மேக்ஸ் எர்மான்
‘டேசிடராட்ட’(Desiderata) என்னும் வசனகவிதை, அமெரிக்க எழுத்தாளர் மேக்ஸ் எர்மானால் 1920-ல் எழுதப்பட்டது. ‘டேசிடராட்ட’ வாழ்க்கையை, உலகத்தை, சகமனிதர்களை கடினமான சோதனைகளையும் மீறி எப்படி நேசிக்க வேண்டுமென்று கூறும் கவிதை. பிறரிடம் மட்டுமல்ல தன்னிடமும் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையை இந்த வசனகவிதை போதிக்கிறது.
இரைச்சல் நெருக்கடிக்கிடையே அமைதியாகப் போய்க் கொண்டிரு; எங்கே அமைதி இருக்கிறதோ அங்கேதான் சமாதானம் இருக்குமென்பதையும் ஞாபகத்தில் கொள். முடிந்தவரை, சரணடையாமலேயே, எல்லா நபர்களிடமும் நல்லுறவில் இரு. உனது உண்மையை தெளிவாகவும் இதமாகவும் சொல்; அத்துடன் மந்தமாகவும் அறியாமையுள்ளவர்களாகத் தெரிபவர்களுக்கும்கூட செவிகொடுங்கள்; அவர்களுக்கும் சொல்ல ஒரு கதை இருக்கலாம். உரக்கப் பேசி ஆத்திரப்படும் நபர்களைத் தவிர்; அவர்கள் ஆன்மாவுக்கு நோவு தருபவர்கள்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டால், நீங்கள் கசப்பும் சலிப்புமாக ஆவீர்கள். உங்களைவிட மகத்தான மனிதர்களும் உங்களைவிடச் சின்ன மனிதர்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்; உங்களது திட்டங்களைப் போன்றே உங்களது வெற்றிகளையும் அனுபவியுங்கள். உங்களுடையது எத்தனை சிறிய வேலையாக இருந்தாலும் அதில் ஈடுபட்டுச் செய்யுங்கள்; மாறும் காலச்சூழல்களில் அதுவே உங்களது நிஜமான உடைமை.
உங்களது வர்த்தக விவகாரங்களில் ஜாக்கிரதையாக இருங்கள்; உலகம் போலிகளால் நிறைந்தது.
ஆனால், அதுவே நன்னெறியின் வழியைக் காணவிடாமல் உங்களைக் குருடாக்கிவிடக் கூடாது. நிறைய மனிதர்கள் உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்; எங்கெங்கு காணினும் வாழ்க்கை வீரார்த்தத்துடன் திகழ்கிறது. நீ, நீயாக இரு. நேசத்தைப் பாவித்து நடிக்க வேண்டாம். நேசம் குறித்த அவநம்பிக்கையும் வேண்டாம். அனைத்து வறட்சியிலும் ஏமாற்றத்திலும் புல்லைப் போல நீடித்திரு. கடந்துபோன வருடங்களின் இனிய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு, இளமையின் வேகத்தை ஒப்படைத்துவிட்டு அருளோடு கூடிய அமைதியைக் கொள். ஆன்ம வலுவைப் போஷித்துக்கொள்; அது உன்னை திடீர் துரதிர்ஷ்டங்களிலிருந்து பாதுகாக்கும்.
ஆனால், இருள்சூழ்ந்த கற்பனைகளால் உன்னை நொம்பலப்படுத்திக் கொள்ளாதே. களைப்பு, தனிமை உணர்விலிருந்து எத்தனையோ அச்சங்கள் பிறக்கின்றன. முற்றுமுழுமையான ஒழுங்குக்கு அப்பால், உன்னிடம் நீ மென்மையாக இரு. நீ இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை; மரங்கள், நட்சத்திரங்களுக்கு இணையான படைப்பு நீ. இங்கே நீ இருப்பதற்கு உரிமைப்பட்டவன். அது உனக்குத் தெரிந்தாலும் தெரியாமல்போனாலும், பிரபஞ்சம் உன் முன்னர் திறப்பதைத் திறந்துகாட்டவே செய்யும்.
கடவுளை நீ எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டாலும், அவரிடம் சமாதானமாக இரு. சந்தடிமிக்க வாழ்வின் குழப்பத்துக்கிடையே உனது வேலைகள் உனது அபிலாஷைகள் எதுவாக இருப்பினும் உனது ஆன்மாவில் அமைதியைப் பேணு. பாசாங்குகள், மட்டுமீறிய உழைப்பு, உடைந்த கனவுகள் எல்லாவற்றுக்கிடையிலும் இன்னும் அழகானது பூமி. நீ உற்சாகத்துடன் இரு. சந்தோஷமாக இருக்க முனைந்துகொண்டே இரு.
(தமிழில்: ஷங்கர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT