Published : 08 Aug 2019 07:59 AM
Last Updated : 08 Aug 2019 07:59 AM
சிந்துகுமாரன்
நமக்குத் தெரிந்த வரையில் இவை மூன்றும் ஊர்களின் பெயர்கள். முதலாவது காவிரிக்கரையில், திருச்சிராப்பள்ளியருகே திருவரங்கம் என்னும் அரங்கநாதப் பெருமானின் கோயிலைக் குறிக்கிறது. இரண்டாவதும் மூன்றாவதும் சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலைக் குறிக்கும் பெயர்கள். அரங்கம், சபை, அம்பலம் என்னும் சொற்கள் மூன்றுமே வெளியை (Space)க் குறிக்கின்றன.
‘சித்’ என்றால் பிரக்ஞை(Consciousness); உணர்வுநிலை. பரம்பொருளின் தன்மையாகச் சொல்லப்படும் `சத் - சித் - ஆனந்தம்` என்னும் மூன்றில் நடுவில் இருப்பது. சித்-சபை இரண்டும் சேர்ந்து சிற்சபையாகிறது. சித்-அம்பலம் இரண்டின் கூட்டு சிற்றம்பலம். ‘திரு’ என்பதும் அறிவுணர்வின் ஒளியையே குறிக்கிறது. திரு-அரங்கம் இரண்டும் சேர்ந்து திருவரங்கம் என்றாகிறது. இவை ஆழமான உணர்வுநிலைகள்.
அனுபவம் எங்கே நடைபெறுகிறது
இது என்ன? இது ஏன் முக்கியமானது? நாம் ஒரு மலைப்பாங்கான இடத்தில் அமர்ந்திருக்கிறோம். மாலை நேரம். சுற்றிலும் மரங்கள், மலைகள். காற்று மெல்ல வீசிக்கொண்டிருக்கிறது. மேகங்கள் மலைகளின் மீது மிதந்து செல்கின்றன. வானம் விரிந்திருக்கிறது. பறவைகளின் கூவல்கள் கேட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம் ரம்மியமாக இருக்கிறது. இந்த அனுபவம் எங்கே நடக்கிறது?
நாம் அந்த இடத்தில் இருப்பதனால், அவற்றை எல்லாம் பார்ப்பதனால்தான் அந்த அனுபவம் நிகழ்கிறது. நாம் புலன்களின் வழியாக எல்லாவற்றையும் அறிகிறோம். மனத்தின் வழியாகப் பொருள்களை அடையாளம் கண்டுகொள்கிறோம். நம் அறிவுணர்வின் விளைவாகவே அந்த அனுபவம் நமக்குக் கிட்டுகிறது.
அந்தக் கணம், அந்த அனுபவம் நிகழ்வது நம் உணர்வுவெளியில்தான். அந்த உணர்வுதான் ‘சித்’, அல்லது ‘திரு’. அந்த வெளிதான் அம்பலம், அரங்கம், சபை. ஆக, அந்த உணர்வுவெளியைத்தான் சிற்றம்பலம், சிற்சபை, திருவரங்கம் என்கிறோம். உணர்வுவெளியில்தான் உலகம் இருக்கிறது. உலகம் ஒரு இடமில்லை. அது ஓர் அனுபவம். நாம் உலகத்தில் இருக்கிறோம் என்று நம்புகிறோம். ஆனால் உலகம்தான் நமக்குள் இருக்கிறது. நம் உணர்வுவெளியில் உலகம் எழுகிறது, இருக்கிறது, விழுகிறது. உணர்வுவெளி எப்போதும் இருக்கிறது. உள்ளீடு இருந்தாலும் இல்லாமல் போனாலும் உணர்வுவெளி இருந்துகொண்டிருக்கிறது.
முதலும் முடிவுமற்ற பரப்பிரம்மம்
இந்த உணர்வுவெளியைத்தான் சிதாகாசம் என்று சொல்கிறார்கள். மகாகாசம், சிதாகாசம், பிரேமாகாசம், பரமாகாசம் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மகாகாசம் என்பது ஐம்பூதங்களாலான பௌதிக உலகம். சிதாகாசம் என்பது உணர்வுவெளி. பிரேமாகாசம் என்பது அன்பின் எல்லையற்ற விரிவு. பரமாகாசம் என்பது அனைத்தையும் கடந்த, அனைத்தையும் தன்னுள் அடக்கிய முதலும் முடிவுமற்ற பரப்பிரம்மம்.
தனி உயிரின் தளங்களாக ஐந்து கோசங்களைக் கூறுகிறார்கள்: அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம். இந்த ஐந்து தளங்களுக்கு அப்பால், தனி உயிர் என்னும் தன்மை கடந்து, பேரண்டத்தின் தன்மைகளாக இருக்கும் தளங்கள் சித், சத், இரண்டும் உள்ளன. ‘சித்’ என்பது உணர்வு நிலை. ‘சத்’ என்பது ‘உள்ளது’. ஆக மொத்தம் ஏழு தளங்கள்.
அன்னமய கோசம் என்பது ஸ்தூல உடல். நாம் உட்கொள்ளும் உணவு, செரிமான முறைப்பாட்டினால் நம் உடலின் செல்களாகவும் திசுக்களாகவும் உருக்கொள்கின்றன. மீண்டும் அவை உருவமழிந்து உடலின் செயல்பாட்டுக்கான சக்தியாக வெளிப்படுகின்றன. அதனால்தான் உண்ணாவிரதம் இருந்தாலோ, அல்லது பட்டினியாலோ உடல் இளைத்துப் போகிறது. உடல் அழிந்துகொண்டே இருக்கிறது. அதே நேரம், உணவு உட்கொள்வதால் தொடர்ந்து உடல் புதிதாக உருக்கொண்டே இருக்கிறது. உடல் உணவாலானது.
பிராணமய கோசம், நம் சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது, காற்றுடன் உயிர்ச்சக்தியும்(பிராணன்) சேர்ந்து உள்ளே போய், நம் நாடி நரம்புகளில் ஓடுகிறது. நம் உடலின் உள்ளியக்கங்களை இந்தச் சக்தி ஒழுங்குபடுத்துகிறது. மனோமய கோசம், மனம் என்று நாம் அழைக்கும் இயக்கங் களின் தொகுப்பு: நினைவு, ஞாபகப் படுத்துதல், சிந்தனை, உணர்ச்சிகள், கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலம் குறித்த திட்டங்களை அமைத்துச் செயல்படுத்துவது, இவையெல்லாம்.
விஞ்ஞானமய கோசம் என்பது `உயர்மனம்` என்று சொல்லலாம். இதுதான் வாழ்க்கை பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்பி, நம்மைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியுமான உண்மையை நோக்கிய தேடலில் நம்மை வழிநடத்திச் செல்வது. இதுதான் கவனத்தை ஒழுங்கில் கொண்டுவந்து, சீரிய நோக்கங்களின் பாதையில் நம்மை வழிநடத்துவது. மனோமய கோசம் நடைமுறை வாழ்க்கையைச் சீராக நடத்துவதற்கு உதவிகரமாக இருப்பது.
விஞ்ஞானமய கோசம், நம் இருப்பின் நோக்கம், வாழ்வின் குறிக்கோள், இவை குறித்த தீவிரக் கவனம், இவற்றை முறைப்படுத்துவது. ஆனந்தமய கோசம் தனி உயிரும் பேருண்மையும் சந்திக்கும் எல்லையில் உள்ளது. ஒருபுறத்தில் விஞ்ஞானமய கோசமும் மறுபுறம் சிதாகாசமும் விரிந்திருக்க அதன் சந்திப்பில் எழும் ஆனந்தம் இந்தப் பரிமாணத்தில் விகசிக்கிறது. சிதாகாசத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலும் ஆனந்தமய கோசம் தனி உயிரின் எல்லைக்குள் அடங்கியதுதான்.
சக்தியின் நடனம்
‘சித்’ என்னும் உணர்வு வெளியில்தான் பிரபஞ்சம் என்னும் அனுபவம் இருப்புக் கொள்கிறது. நடப்பவையனைத்தும் இந்த வெளியில்தான் நடக்கின்றன. இங்குதான் ‘அறிதல்’ நிகழ்கிறது. எல்லாம் அறியும் அறிவு இது. இதை அறிவதுதான் இருப்பின் நோக்கமென்றே சொல்லலாம். இதைப் பற்றித்தான்,
எல்லாம் அறியும் அறிவுதனைவிட்டு
எல்லாம் அறிந்தும் லாபமிங்கில்லை
எல்லாம் அறியும் அறிவை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையெனலாமே
என்கிறார் திருமூலர். இங்குதான் சக்தியின் நடனம் நடக்கிறது. அதனால்தான் `சித்ரூபிணி` என்று பிரபஞ்சத்தின் தாயாகக் கொள்ளப் படும் தெய்வத்தைக் குறிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் ஆனந்தக் கூத்து நடக்கும் அரங்கம் இது.
கடைசியாக, `சத்` என்னும் ஆதார ஸ்தலம். இதுவே `உள்ளது`.
எது இருந்தாலும் போனாலும் என்றும் எப்போதும் உள்ளது இதுவே. இதுதான் பரம்பொருள். அறிவதற்கு ஏதும் இல்லாமல் போகும்போது, அனைத்தையும் அறியும் `சித்` என்னும் சுத்தப் பிரக்ஞையும் `சத்` என்னும் ஆதாரத்தில் அடங்கிவிடுகிறது. திருவரங்கம், சிற்றம்பலம், சிற்சபை என்பது அனுபவம் நிகழும் காலமற்ற பெருவெளி. அனுபவிப்பவன், அனுபவம், அனுபவித்தல் என்னும் மூன்று நிலைகளைக் கடந்த அகண்டா காரம் அது.
நான் துய்ப்பவன் இல்லை
துய்க்கப்படும் பொருள் இல்லை
துய்ப்பும் அல்ல
நான் விழிப்பு
நான் உணர்வின் பேரின்ப உருவம்
நானே சிவம் நானே சிவம்
என்று தன் ஆத்மஸ்வரூபத்தைப் பற்றி ஆதிசங்கரர் நிர்வாண சடகத்தில் சொல்கிறார்.
உடலையே தானெனக் கொண்டு, தன் பிற பரிமாணங்களைப் பற்றிய அறிதலில்லாமல் மனத்தின் அனுபவச் சேற்றில் சிக்கித் தவித்துத் துன்பமே வாழ்க்கையென வாழும் நம்மை விழிப்புக்கு அழைத்துச் செல்வது, `சித்` என்னும் `திரு` நடனமாடும் உணர்வுவெளிதான். இந்த அம்பலத்தில், இந்த அரங்கத்தில், இந்தச் சபையில்தான் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.
(விழிப்போம்…)
கட்டுரையாளர், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT