Published : 25 Jul 2019 09:40 AM
Last Updated : 25 Jul 2019 09:40 AM

81 ரத்தினங்கள் 10: மூன்றெழுத்து சொன்னேனோ சத்ர பந்துவைப் போலே


உஷாதேவி

க்ஷத்ரபந்து ஒரு அரச குமாரன்; மிகவும் கொடுங்கோல் குணம் கொண்டவன். மக்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டதால், மக்கள் அவன் மீது புகார் சொல்ல, அரசன் அவனைக் காட்டுக்கு விரட்டிவிட்டார். காட்டிலும் அவன் குணம் மாறவில்லை. அவ்வழியாக வருபவர், போவோரைத் துன்புறுத்தத் தொடங்கினான். வனத்தில் வாழும் ரிஷிகளைக் கொன்றான். க்ஷத்ரபந்துவின் துர்குணம் மாறவேயில்லை.

ஒரு நாள் அவ்வழியாக வந்த ரிஷி ஒருவருக்குத் தாகம் எடுத்தது. வழியில் ஒரு குளத்தில் நீர் அருந்தியபோது கால் வழுக்கிக் குளத்தில் விழுந்தார். தன்னைக் காப்பாற்ற வேண்டி ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கதறினார். அங்கு வந்த க்ஷத்ரபந்து, கயிற்றைக் கொண்டு ரிஷியைக் காப்பாற்றினான். கோவிந்த நாமம் கேட்டதால், கெட்டவனையும் (க்ஷத்ரபந்து) நல்லது செய்ய வைத்தது.

கரைக்கு வந்த ரிஷி க்ஷத்ரபந்துவுக்கு நன்றி கூறினார். பிறகு அவனையும் கோவிந்த நாமம் சொல்லச் சொன்னார். சம்ஸ்கிருதத்தில் கோவித என்றால் கோவிந்தா என்று பொருள். இந்த மூன்றெழுத்து நாமம் சொன்னால் நன்மை கிட்டும் என்றும் ஆண்டாளுக்குப் பிடித்தது; திரௌபதிக்குப் புடவை சுரந்தது எல்லாம் இந்த கோவி்ந்த நாமம்தான் என்று ரிஷி அவனிடம் கூறினார்.

க்ஷத்ரபந்து, ரிஷியிடம், ‘நான் அனைவரையும் துன்புறுத்துபவன், என்னவோ தெரியவில்லை; உங்களைக் காப்பாற்றிவிட்டேன். இங்கிருந்து சென்றுவிடுங்கள். எப்போதும் பாவச் செயல்களைச் செய்வதுதான் என் வேலை; அதனாலேயே காட்டுக்குத் துரத்தப்பட்டவன் எனக்கு எந்த நாமமும் தெரியாது’ என்றான். ரிஷி அவனைப் பார்த்து, ‘நீ எந்த வேலை செய்தாலும் கோவிந்த நாமத்தைக் கூறிக்கொண்டே செய்.

மூச்சுவிடுவதைப் போலச் சொல்லிக் கொண்டிரு. உனக்குள்ளேயும் நல்லவர் உண்டு. உலகில் தவறு செய்யாதவர்கள் யாருமில்லை. நாம் சொல்வதையெல்லாம், நம் மனம் கேட்க வேண்டும். நான் கோவிந்த நாமம் சொல்லி அழைத்தேன். அந்த நாமத்தால்தான் நீ வந்து என்னைக் காப்பாற்றினாய். நீயும் கோவிந்த நாமத்தை இடைவிடாது சொல் உனக்கும் நல்லது நடக்கும்’ என்றார்.

‘சரி சொல்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டான் க்ஷத்ரபந்து. அன்றிலிருந்து கோவிந்த நாமத்தை இடைவிடாது சொல்லிக்கொண்டே வந்தான். பாவம் செய்யும் ஆசையைவிட்டு கோவிந்த நாமம் சொல்லி நல்ல கதியை அடைந்தான். அடுத்த ஜென்மம் அழகாக எடுத்து நல்ல பக்திமானாய் பிறந்து மோட்சத்தை அடைந்தான்.
‘நான் க்ஷத்ரபந்துவைப் போல் மூன்றெழுத்து நாமத்தைத் தொடர்ந்து சொல்லவில்லையே சுவாமி’ என்று ராமானுஜரிடம் வருத்தப்பட்டாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x