Published : 18 Jul 2019 12:27 PM
Last Updated : 18 Jul 2019 12:27 PM
ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ‘ஏரண்டம்' என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ‘விளக்கெண்ணெய் சாமியார்' என்று அர்த்தம். மகான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள்.
போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரிகாசப் பெயர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுககு ஒன்றுதான்.
கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில், சுவாமிமலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்? ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ தீட்சை செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் ‘கொட்டை கட்டி'என்பார்கள். இந்தக் கொட்டை, மனத்தில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.
இன்னொரு கொட்டை, வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. அதிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய், வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேகாரோக்கியத்துக்குப் பிரயோஜனப்படும். வயிறு லேசாகி, தேகம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனமும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே.
இந்திரிய ருசி விஷய வாசனைகள்
லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாசனையும்தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாவத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும்போது மகான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளக்கெண்ணெய்யாகத்தான் தோன்றும். ஆனால், அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். 'கொட்டையூர் என்று சொன்னேனே, அது ரொம்பவும் பூர்வ காலத்தில் ஊராகவே இல்லாமல் ஆமணக்கங் காடாகத்தான் இருந்ததாம்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அங்கே ஒரு கொட்டைமுத்துச் செடியின் கீழ் பரமேஸ்வரன் லிங்கமாக ஆவிர்பவித்தார். அப்புறம், காடு ஊராயிற்று. புண்ணியத் தலமானது. ஆமணக்கின் கீழ் இருந்து சுவாமி வந்ததால் அதற்குக் கொட்டையூர் என்றே பெயர் ஏற்பட்டது. இப்போதும் அங்கே ஸ்தல விருக்ஷம் ஆமணக்குத்தான்.
அதனால் ‘கொட்டையூர்க்காரர்’ என்றே அர்த்தம் தருகிற ‘ஏரண்டகர்' என்ற பெயரை அவருக்கு ஜனங்கள் வைத்து விட்டார்கள்.
அவர் இருந்த காலத்தில் காவேரி தமிழ்நாட்டுப் பக்கமாகப் பாயவே இல்லை. குடகில் உற்பத்தியாகிற காவிரி அப்போது வேறே ஏதோ வழியில் ஓடி, கொஞ்சம் தூரத்திலேயே ‘அரபியன் ஸீ'என்கிற மேற்கு சமுத்திரத்தில் விழுந்து கொண்டிருந்ததாம். தலைக்காவிரி, மெர்க்காராவில் எவ்வளவோ மழை பெய்த போதிலும் காவேரி பிரவாகம் விஸ்தாரமாக ஓடி உலகத்துக்கு விசேஷமாகப் பிரயோஜனப்படாமல் சிற்றாறாக ஓடி வீணாக மேற்கு சமுத்திரத்தில் விழுந்து வந்ததாம்.
நதி என்னும் தேவதை
அந்த சமயத்தில் சோழ தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ராஜா, “நம்முடைய சீமைக்குக் காவேரி பாயும்படி பண்ணிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?"என்று நினைத்தார்.
உடனே தலைக்காவேரிக்குப் போய் அங்கே தபஸ் பண்ணிக் கொண்டிருந்த அகஸ்திய மகரிஷிக்கு நமஸ்காரம் பண்ணினார். பூர்வத்தில் அகஸ்தியருக்குப் பத்தினியான லோபாமுத்திரையைத்தான் பிற்பாடு அவர் காவிரியாகக் கமண்டலத்தில் கொண்டு வந்திருந்தார்.
அந்தக் கமண்டலத்தைப் பிள்ளையார், காக்காய் ரூபத்திலே வந்து கவிழ்த்துவிட்டு, காவேரியை நதியாக ஓடும்படி செய்திருந்தார். நதி என்றால் அது ஏதோ அசேதன ஜலப்பிரவாஹமில்லை. அது ஒரு தேவதா சொரூபமே. காவிரி தேவி, பதியின் மனத்தை அறிந்தே அவரை விட்டு ரொம்ப தூரம் ஓடிவிடக் கூடாதென்று, தான் தன் கதியை ஒருவிதமாக அமைத்துக்கொண்டு சிற்றாறாக இருந்தாள்.
அகஸ்தியரைப் பிரார்த்தனை செய்தால் அவர் கருணை கொண்டு காவேரியைச் சோழ மண்டலத்துக்கு அனுப்பிவைப்பார் என்று ராஜா நினைத்தார். அதனால் அகஸ்தியரிடம் போய்ப் பிரார்த்தித்தார். அவருக்குப் பணிவிடை செய்து, அதனால் அவர் மனம் குளிர்ந்திருந்தபோது, “ஒரு வரம் தரவேண்டும்''என்று யாசித்தார்.'' காவேரி விஸ்தாரமாகப் பாய்ந்தால் எத்தனையோ வறண்ட சீமைகள் பச்சுப் பச்சென்றாகும். எத்தனையோ ஜனங்களுக்குக் குடிநீரும், பயிருக்கு நீரும் கிடைக்கும். இதற்கெல்லாம் மேலாக அவள் தெய்வத் தன்மை உடையவளாதலால் அவள் தன்னில் ஸ்நானம் செய்கிறவர்களின் பாபங்களைப் போக்குவாள். அவளுடைய கரையைத் தொட்டுக்கொண்டு அநேக புண்ணிய க்ஷேத்திரங்கள் உண்டாகி ஜனங்களுக்கு ஈச்வர க்ருபையை வாங்கிக் கொடுக்கும்'' என்றெல்லாம் கோரினார்.
மகா பதிவிரதையான லோபாமுத்ரையிடம் அகஸ்தியருக்கு இருந்த அன்பு அளவில்லாதது. அதனால்தான் அவர் அவள் அந்த சரீரத்தை விட்டுத் தீர்த்த ரூபம் எடுத்த பிறகும் தம்மை விட்டுப் போகாமல் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்தார். அவளால் லோகத்துக்குக் கிடைக்கக்கூடிய பிரயோஜனம் வீணாகப் போகக் கூடாதென்றே பிள்ளையார் காகமாக வந்து அதைக் கவிழ்த்து விட்டது. ஆனாலும், பதிக்குத் தன்னிடமிருந்த பிரியத்தை அவள் அறிந்திருந்ததால் அவளோ அவரை விட்டு அதிக தூரம் ஓடாமல் சிறிய நதியாகவே ஓடினாள்.
இப்போது சோழ நாட்டு அரசர் வந்து அகஸ்தியரை ரொம்பவும் பய பக்தியுடன் வேண்டிக்கொண்டவுடன் அவருக்கு மனமிரங்கிவிட்டது. ராஜா பணிவோடு எடுத்துச் சொன்னதும் லோகோபகாரமாக எவ்வளவோ செய்யக்கூடிய காவேரியைத் தாம் ஸ்வய பாசத்தால் தடுத்துவைப்பது சரியில்லை என்று புரிந்துகொண்டார். அவளை மனசாரத் தியாகம் செய்தார். பகீரதனின் பின்னால் கங்கை போன மாதிரி சோழ ராஜாவுக்குப் பின்னால் காவேரி போனாள் - அதாவது நம்முடைய தமிழ் நாட்டுக்கு வந்து சோழ மண்டலத்தில் விசாலமாகப் பாய்ந்தாள்.
காவேரி இல்லாத சோழ தேசத்தை இப்போது நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி இந்தச் சீமையின் மஹா பெரிய கலாசாரத்துக்கே காரணமானவள் இங்கே வந்து சேர்ந்த கதை இதுதான்.
(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT