Last Updated : 24 Apr, 2025 08:44 PM

 

Published : 24 Apr 2025 08:44 PM
Last Updated : 24 Apr 2025 08:44 PM

நம்பிக்கை இல்லாவிட்டாலும் கைவிடாத நாராயணன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 37 

படம்: மெட்டா ஏஐ

தான் நம்பும் இறைவனாகிய திருமால் ஏன் உயர்ந்தவன் என்பதை முதல் ஆறு பாசுரங்களிலும், தான் சார்ந்திருக்கும் வைணவ சித்தாந்தத்தின் சிறப்புகளைப் பற்றி ஏழு மற்றும் எட்டாம் பாசுரங்களிலும் பாடிய நம்மாழ்வார், தன் பேரிறைவனாகிய ஸ்ரீ மந்நாராயணன் பற்றிய சில பேருண்மைகளை ஒன்பதாம் பாசுரத்தில் எடுத்துரைக்கிறார். இவற்றை இறை வழிபாடு பற்றிய சில பொதுவான உண்மைகள் எனவும் கருதலாம்.

உளன்எனில் உளன்அவன் உருவம்இவ் வுருவுகள்
உளன்அலன் எனில்அவன் அருவம்இவ் வருவுகள்
உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன்இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே.

'இருக்கிறான் என நம்பினால் இறைவன் இருக்கிறான். எனில் உருவத்தோடு இருக்கும் பொருள்கள் அனைத்தும் அவனது தூல சரீரமாகும். இல்லை எனக் கருதினாலும் இறைவன் இருக்கிறான். எனில் உருவமில்லாப் பொருள்கள் அனைத்தும் அவனது சூட்சும சரீரமாகும். உண்மை, இன்மை என்னும் இரு தன்மைகள் கொண்டவனாய் இருப்பதால் தூல வடிவிலும் சூட்சும வடிவிலும் எல்லாக் காலத்தும் எல்லா இடத்திலும் அவன் பரந்திருக்கிறான்.' - இது இந்தப் பாசுரத்தின் பொருள்.

உளன் அலன் என்றாலும் அவன் உளன் என்று நம்மாழ்வார் சொல்வது எப்படி என்றொரு கேள்வி எழலாம். ஒரு பொருளை இல்லை என்று மறுத்தால் தர்க்க சாஸ்திரத்தின்படி 'எங்கே இல்லை எப்போது இல்லை' என்று தெரிவிக்க வேண்டும். நமக்கிருக்கும் புலனறிவின் மூலம் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் என்ன இருக்கிறது என்று காண நம்மால் இயலாது. அதனால் எங்கும் இறைவன் இல்லை என்று நாம் சொல்ல முடியாது.

அதேபோல எந்தக் காலத்திலும் இறைவன் இருந்ததில்லை என்றும் கூற முடியாது. இந்தக் கணம் இறைவன் இல்லை என்று கருதினாலும் நாம் பிறந்ததற்கு முன் அவன் இருந்திருக்கலாம். நாம் இறந்ததற்குப் பின்னும் அவன் இருக்கலாம். இந்த அடிப்படையில் தான் 'உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்' என்று நம்மாழ்வார் எழுதுகிறார்.

மேலும் 'இறைவனும் பொய் இந்த உலகமும் பொய்' என்று வாதிட்ட தரப்புக்கு நம்மாழ்வார் தந்த பதிலடி இந்தப் பாசுரம் என்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆனால் நமக்கு அது முக்கியமன்று. அவரின் பெருங்கருணையே நாம் சிந்திக்க வேண்டியது.

பிரபஞ்சத்துக்கான மூலப்பொருள், பிரபஞ்சத்தின் படைப்பாளி, பிரபஞ்சம் என்னும் மூன்றுமாகவே திருமாலே இருப்பதால் அவனை பரபரன் என்பார் நம்மாழ்வார். அப்படி பெரிதினும் பெரிதாய் அவன் இருந்தாலும் தன்னை நம்பாத மனிதர்களை அவன் மிரட்டி வணங்க வைப்பதில்லை. அவன் சர்வாதிகாரி தான். ஆயினும் எதிர்மறைச் செயல்களுக்காகத் தனது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த நாராயணன் ஒன்றும் நரன் அன்று.

அவன் கண்களுக்கு வேண்டுவோர் வேண்டாதோர் என எவரும் இல்லை. அஞ்ஞானத்தில் இருப்போர், அஞ்ஞானத்தில் இல்லாதோர் என இரண்டே தரப்பு தான். அவரவர் கர்ம வினைப்பலன்களுக்கு ஏற்ப அஞ்ஞானம் விலகும் கால அவகாசம் மாறுபடுகிறது. அஞ்ஞானம் நீங்கி நம்பிக்கையுற்றிருப்பவர்களுக்கு அவன் இந்த உலகமாய், மெய்யாய் இருக்கிறான். அஞ்ஞானம் நீங்காமல் நம்பிக்கையற்றிருப்பவர்களுக்கு அவன் ஒரு சூனியமாய், பொய்யாய் இருக்கிறான்.

தன்னை ஏற்போரையும் ஏற்காதோரையும் அவன் ஒரே மாதிரி தான் நடத்துவான். நம்பியவர்களைக் கைவிடாதிருப்பதைப் போல நம்பாதவர்களையும் அவன் கைவிடுவதில்லை. நம்பிக்கை அற்றவர்களையும் கைவிடாதிருத்தல் தானே உண்மையான கருணையின் அடையாளம்.

முந்தைய அத்தியாயம் > நான்கு வரிகள்... மூன்று தத்துவங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 36

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x