Published : 21 Apr 2025 04:38 PM
Last Updated : 21 Apr 2025 04:38 PM
இறைவன் ஏன் பெரியவன் என்பதை முதல் ஆறு பாசுரங்களில் பாடிய நம்மாழ்வார் ஏழாம் பாசுரத்தில் (1.1.7) ஒரு முக்கியமான பாய்ச்சலை நிகழ்த்துகிறார்.
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.
‘பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தையும் அழித்து விடும் இறைவன், உறுதியாயிருக்கின்ற ஆகாயம்,நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எல்லாப் பொருள்களுமாகி, அந்தந்த பொருட்களில், உடலுக்குள் உயிர் இருப்பது போல மறைந்தும் பரந்தும் விளங்கி, ஒளி மிக்க வேதங்களின் உட்பொருளாய் இருக்கின்றான்’ என்பது இந்தப் பாசுரத்தின் பொருள். ஆனால், இந்த பொதுப் பொருளுக்குள் பல நுட்பமான உட்பொருள்கள் பொதிந்திருக்கின்றன.
திடம் என்பதற்கு உறுதி என்பதோடு உண்மையான, நிலையான ஆகிய அர்த்தங்களும் உண்டு. 'திட' என்னும் சிறப்படையை ஐந்து பூதங்களுக்கும் பொருத்தலாம். அப்படிப் பொருத்தினால் மற்ற பொருள்களை விட ஐந்து பூதங்கள் இன்னும் சிறிது காலம் நிலைத்து நிற்கும் என்று பொருள் வரும். அவ்வாறின்றி ஆகாய பூதத்துக்கு மட்டும் கூட 'திட' என்பதைப் பொருத்தலாம். அப்படிச் செய்தால் மற்ற பூதங்களோடு ஒப்பிடுகையில் ஆகாய பூதம் இன்னும் அதிக காலம் நிலைக்கும் என்று பொருள் கிடைக்கும்.
முழுமுதற்கடவுளாகிய ஸ்ரீ மந்நாராயணனிடமிருந்து முதலில் தோன்றிய பூதம் என்பதால் ஆகாயத்துக்கு முதன்மைத்துவம் கொடுக்கிறார் நம்மாழ்வார். வைணவத்தை பொறுத்தவரை ஆகாயம் கூட ஒரு பூதம் தான் என்பதை இந்தப் பாசுரத்தின் ஊடே நம்மாழ்வார் உறுதிப்படுத்துகிறார் என்பது உரையாசிரியர்களின் கருத்து.
வைணவ சித்தாந்தத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் மூலப்பொருளை மூலப் பிரகிருதி என்பர். மகாவிஷ்ணுவின் திருமேனி தான் அந்த மூலப் பிரகிருதியாக நுண் வடிவத்தில் இருக்கிறது என்பதும் அது படிப்படியாக மலர்ந்து விரிந்து இந்த பிரபஞ்சமாக உருவெடுக்கிறது என்பதும் வைணவ சித்தாந்தத்தின் அடிப்படையான கோட்பாடு. வைணவத்தின் பார்வையில் வையகம் ஒரு மாயை கிடையாது.
'பஹுஸ்யாம் ப்ரஜாயேய' என்பது சாந்தோக்ய உபநிடதத்தில் வரக்கூடிய ஒரு வரி. 'உலகின் எல்லா உயிர்களையும் உடலாகக் கொண்டிருக்கிற நான் அந்தந்த உயிர்களின் உயிராய் இருந்து, சர்வ அந்தர்யாமியாய் திகழ்ந்து அவற்றுக்குப் பெயர்களையும் உருவங்களையும் உருவாக்குகிறேன்' என்பது இந்த வரியின் பொருள். இது தான் 'திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப் படர்பொருள் முழுவதும் ஆய்' என உருமாற்றம் பெற்றிருக்கிறது.
'உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்' என்பதற்கு உயிர்ப்பொருள் உயிரல் பொருள் அனைத்திற்கும் எம்பெருமானாகிய திருமால் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் இருக்கிறான் என்று உரையாசிரியர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளனர். தாரகன் என்றால் தரித்துக் கொண்டிருப்பவன். நியாமகன் என்றால் வழிநடத்துபவன். சேஷி என்றால் தனக்கு உரித்தானவற்றை விருப்பம் போல் பயன்படுத்துபவன். இந்த அறிதல்களுக்கெல்லாம் அழியாத ஆதாரமாய் இருப்பவை வேதங்கள் என்பதால் தான் 'சுடர்மிகு சுருதியுள் உளன்' என நம்மாழ்வார் பாடுகிறார்.
சர்வேஸ்வரனாகிய திருமால் பிரபஞ்சம் உண்டாவதற்கு முன்னும் இருந்தான். பிரபஞ்சம் அழிந்த பின்னாலும் அவன் இருப்பான். நடுவில் பிரபஞ்சம் உண்டாகி உயிர்ப்பொருள்கள் சடப்பொருள்கள் தோன்றிய பிறகு அவற்றுள் அந்தர்யாமியாகவும் அவன் இருப்பான். இறைவன் இவ்வாறு தனித்தும் சேர்ந்தும் கலந்தும் இருக்கிறான் என்பது தான் விசிட்டாத்வைதத்தின் சாரம்.
இராமானுஜ மகாசாரியர் முன்னெடுத்த இந்த தத்துவம் இப்பாசுரத்தில் சிறப்பாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டிருப்பதால், முதற்பத்தை இந்த ஒற்றைப் பாசுரம் முத்தான பத்தாக்குகிறது என்பது ஆசாரியர்களின் ஒருமித்த முடிபு.
முந்தைய அத்தியாயம் > செயலும் அவனே... செயலின்மையும் அவனே | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 35
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT