Published : 07 Apr 2025 03:12 PM
Last Updated : 07 Apr 2025 03:12 PM
உயர் பதவியில் இருப்பவர்களை அணுகிக் குறைகளை முறையிடுவது சாமானியர்களுக்கு அத்துணை எளிதாய் இருப்பதில்லை. என்றால், ஐந்து பொறிகளுக்கு அகப்படாதவனாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகவும் விளங்குகின்ற ஸ்ரீமந்நாராயணனை எளிதாக அணுக முடியுமா?
இலன்அது உடையன்இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.
இந்த உலகம் உயிர்ப்பொருள்களாலும் உயிர் அல் பொருள்களாலும் ஆனது. இதில் இந்தப் பொருள் என ஏதோ ஒரு பொருளை மட்டும் தேர்ந்தெடுத்து அது பெருமாளின் சொத்து இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் எல்லாப் பொருட்களும் அவனுடையவை. அதே காரணத்தால் இந்த ஒரு பொருள் மட்டும் பெருமாளின் சொத்து என்றும் கூறிவிட முடியாது. இந்த இரு தன்மைகளால் நம் நினைப்புக்குக் கூட சிக்காதவன் அந்தத் திருமால் என்கிறார் நம்மாழ்வார்.
அடுத்த வரியில் அந்தத் திருமாலின் சொத்துப் பட்டியலை அவர் வெளியிடுகிறார். பூலோகம் , பாதாள லோகம், மேல் லோகம் ஆகிய மூன்று இடங்களிலும் உள்ள உயிர்ப்பொருள்களும் சடப்பொருள்களும் உடையவன் அந்த நாரணன் என்கிறார். வைணவ தத்துவத்தின் படி இங்கே 'உரு' என்பது அசித்து. அசித்து எனில் அறிவில்லாத சடப்பொருள்கள். அரு என்றால் ஆத்மாக்கள். இவை அறிவுடைப்பொருள்கள். வைணவம் இவற்றை 'சித்து' என்கிறது. இவ்விரண்டு பொருள்களையும் தன் சரீரமாக உடையவன் அந்தப் பெருமாள் என்பதைத் தான் 'உருவினன்', 'அருவினன்' ஆகிய சொற்கள் உணர்த்துகின்றன.
நமது புலன்களுக்குப் புலப்படுகின்ற எல்லாப் பொருள்களாயும் அந்த நாராயணமூர்த்தியே இருக்கிறான். ஆனால், அந்தப் பொருட்களுக்குரிய குணங்களும் குற்றங்களும் அவனைப் பாதிப்பதில்லை.
'பரமான்மா, சீவான்மா ஆகிய இருவரும் ‘உடையவன், உடைமை’ என்ற உறவை உடையவர்களாய், சரீரமான ஒரே மரத்தினைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதில் சீவான்மா, இருவினைப் பயன்களை நுகர்ந்து கொண்டிருக்கிறது. பரமான்மா, அப்பயனை நுகராத ஒன்றாய் விளங்கிக்கொண்டிருக்கிறது' என இருக்கு (ரிக்) வேதம் கூறுகின்றது. இதை 'புலனொடு புலன் அலன்' என்னும் மூன்று வார்த்தைகளில் அநாயாசமாகச் சொல்லிவிடுகிறார் நம்மாழ்வார். அவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனக் கூறுவது இதனால் தான். முதல் 'புலனு'க்கு காணப்படும் பொருள் எனப் பொருள். இரண்டாவது 'புலனு'க்கு காணப்படும் பொருளின் தன்மைகள் எனப் பொருள்.
இப்பெரும் தகைமைகள் கொண்ட அந்த ஸ்ரீ ஹரி மிச்சம் மீதியின்றிப் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். ஆதலால் அவன் 'பரந்த ஒழிவிலன்'.
ஆனால், இந்த சொத்துகள் எல்லாம் அவனுக்குப் பெருமை சேர்ப்பதில்லை. அவன் அபகரிக்க ஆசைப்படுவது ஒரே ஒரு சொத்தைத் தான். அது தூய பக்தி கொண்ட ஓர் அடியவரின் நெஞ்சம். அந்த நெஞ்சம் உண்மையான அன்போடு தன்னைக் காண விரும்பினால் அவன் ஓடோடி வருவான். அண்டத்துக்கே அதிபதியாய் இருந்தாலும் அவனொன்றும் அணுக முடியாதவன் கிடையாது. நீயே கதி எனப் பணிந்து வேண்டினால் போதும். அவன் நம் கண் முன் வந்து நிற்பான். இதனால் தான் நணுகினம் நாமே என்று நம்மாழ்வார் எழுதுகிறார். தனக்கு நேரில் வந்து தரிசனம் தந்தது போல் நாராயணா நீ எல்லாருக்கும் தர வேண்டும் என்பதால் 'நாமே' என்கிறார். பக்தர்கள் அனைவரும் இதற்கென முயற்சி செய்ய வேண்டும் என்பது இதன் உட்குறிப்பு.
காண விழைவது நாம்; காண வைப்பவன் அவன்.
> முந்தைய அத்தியாயம்: உயிரின் உயிரே உயிரின் உயிரே | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 31
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT