Published : 03 Apr 2025 12:24 PM
Last Updated : 03 Apr 2025 12:24 PM
இறைவனின் வடிவத்தால் ஆட்கொள்ளப்படுவதைக் காட்டிலும் அவனது கல்யாண குணங்களால் ஆட்கொள்ளப்படுவதே சிறந்தது என கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், அவன் அருங்குணங்களுக்குப் பற்றுக்கோடாய் இருப்பது அவன் திருவடிவம். அந்த வடிவத்தின் துணையின்றி இறைவனின் குணங்களை நம்மால் முழுமையாகத் துய்த்து மகிழ முடியாது.
இதை நன்கறிந்திருந்த நம்மாழ்வார் முதலில் திருமாலின் குணக்கடலில் தோய்ந்தாடி பின்னர் அவன் வடிவழகில் நீராட விரும்பினார். உண்மையில் இறைவனின் திவ்யாத்ம ஸ்வரூபத்தைத் தான் நம்மாழ்வார் வர்ணிக்கிறார். அதைத் திருவடிவம் என்று கூறுவது ஓர் உபசார வழக்கு.
மனன் அகம் மலமற மலர்மிசை எழுதரும்
மனன் உணர் அளவிலன், பொறியுணர்வு அவையிலன்
இனன் உணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனன் இலன் எனனுயிர், மிகுநரை இலனே
மலங்கள் என்பவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் போன்ற தீக்குணங்கள். மனத்திலே உண்டாகும் இந்தத் தீய குணங்களைத் தொடர் யோகப்பயிற்சியின் மூலம் தான் அகற்ற முடியும். அந்தப் பயிற்சியின் முடிவில் அழுக்குகள் நீங்கப்பெற்று தன் தூய ஆத்மாவைத் தானே தரிசிக்கும் பேறு ஒருவருக்குக் கிடைக்கும்.
இது தூய உணர்வே (Pure Consciousness) வடிவான நிலை. இதனை 'ஆத்ம ஞானம்' என்றும் கூறுவர். ஆனால், அந்த ஞானத்தினால் கூட இறைவனை நீங்கள் உணர முடியாது. 'மனன் உணர்வு அளவு இலன்' என்ற நான்கு சொற்கள் இதைச் சுட்டுகின்றன. சீவாத்மாவுக்கு ஓருடல் தான். ஆனால், பரமாத்மாவாகிய பரந்தாமனுக்கு இந்தப் பிரபஞ்சமே உடல்.
அந்த பரமாத்ம ஸவ்ரூவன் ஞானாந்த வடிவானவன். இதைத் தமிழில் மிக அழகாய் 'முழுநலம் உணர்வினன்' என்று நம்மாழ்வார் மொழிபெயர்க்கிறார். பாசுரத்தின் யாப்பு கருதி இனன் உணர் முழு நலம் என இது வரிசை மாறியிருக்கிறது. இங்கே இனன் என்றால் இத்தகையவன் என்று பொருள். ''முழுநலம்' என்றால் எந்தக் குற்றமும் சாராதிருத்தல். இந்த 'இனனை' நம் கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐந்து பொறிகளால் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது.
பொறிபுலன்களுக்குள் சிக்காத 'அவனுக்கு' நேற்று, இன்று, நாளை என மூன்று காலங்களிலும் நிகரென யாரும் இல்லை. ஆதலால் அவன் 'இனன் இலன்'. ஒப்பார் யாரும் இல்லாததைப் போலவே அவனை மிக்காரும் எவருமில்லை. எனவே, அவன் 'மிகுநரை இலன்'.
மனன் உணர்வு அளவிலனாய், பொறியுணர்வு அவையிலனாய், முழு நலன் உணர் இனனாய், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலனாய், மிகுநர் இலனாய் இருக்கும் பெருமாளாகிய பேரிறைவன் என் உயிருக்கு உயிராய் இருக்கிறான் என்கிறார் நம்மாழ்வார். 'எனனுயிர்' என்ற சொல்லின் பொருள் அதுவே.
இலக்கண விதிப்படி என், நல், உயிர் ஆகிய மூன்று சொற்கள் எனன்னுயிர் என்று புணரும். ஆயின், யாப்பமைதிக்காக எனனுயிர் என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.
ஆறறிவால் அறிந்து கொள்ள முடியாத, ஐம்பொறிகளால் உணர்ந்து கொள்ள முடியாத, அண்ட சராசரங்களையெல்லாம் ஆட்டுவிக்கும் ஒருவன் என் உயிருக்கு உயிராய் இருந்து பார்த்துக்கொள்கிறான் என்னும் அனுபூதியைப் போல ஓர் ஆனந்தம் இல்லை. அந்த ஆனந்தத்தால் தான் பெருமாளை 'நல்லுயிர்' என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
உலகத்து உயிர்களுக்கெல்லாம் உயிராய் இருக்கும் இந்த இறைவனைத் தவிர வேறு எவரை 'நல்லுயிர்' என்று சொல்லிவிட முடியும்?
முந்தைய அத்தியாயம்: எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT