Published : 31 Mar 2025 04:15 PM
Last Updated : 31 Mar 2025 04:15 PM
திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. திருவாய்மொழி என்பதைத் திருமால்மொழி என்று சொன்னாலும் தகும். மதுரகவியாழ்வாரின் குரு நம்மாழ்வார் என்றால் நம்மாழ்வாரின் குரு ஸ்ரீமந்நாராயணன். தன் குரு ஏன் உயர்ந்தவர் என்பதைத் தனது முதல் பாடலிலேயே நம்மாழ்வார் சொல்லிவிடுகிறார்.
உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
'உ' ஒரு மங்கல எழுத்து. 'உ' என்பது திருமகளையும் குறிக்கும். 'உயர்வற' எனத் தொடங்குவதன் மூலம் தாயாரின் பரிந்துரையின்றிப் பெருமாளை நெருங்க முடியாது என்பதை நம்மாழ்வார் உணர்த்துகிறார்.
தன்னை விட உயர்ந்தோர் யாரும் இல்லாத காரணத்தால் என் குருபரனாகிய திருமால் மிக மிக உயர்ந்தவர் என்பதை உணர்த்த 'உயர்வற' என்ற சொல்லை நம்மாழ்வார் பயன்படுத்துகிறார். பெருமாளுக்கிருக்கும் மங்கல குணங்களின் வீரியம் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் அவர் ஓங்கி வளர்ந்து கொண்டே செல்கிறார். 'உயர்நலம்' என்ற வினைத்தொகை அதைத் தான் குறிக்கிறது. நலம் என்றால் இங்கே குணம்.
உயர்வற உயர்நலம் உடையதால் மட்டும் பெருமாள் உயர்ந்தவரன்று. மயர்வற மதிநலம் அருளுவதாலும் அவர் உயர்ந்தவர்.
ஒன்றைப் பற்றி எதுவுமே தெரியாதிருக்கும் அறியாமை, ஒன்றை வேறொன்றாகப் புரிந்து கொள்ளும் மயக்கம், இதுவா அதுவா என்ற ஐயம், தெரிந்ததை மறத்தல் ஆகிய நான்கும் மயர்வு என்னும் சொல்லுக்குள் அடக்கம். இவை நான்கையும் நீக்கி மதிநலம் அருள்பவன் அந்த மாதவன் என்கிறார் நம்மாழ்வார்.
மதி என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளையும் நலம் என்ற சொல்லுக்கு பக்தி என்ற பொருளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வைணவ ஆசாரியர்களின் அறிவுரை. மதிநலம் என்பதை ஞானம் கனிந்த பக்தி என விரிவாக்கம் செய்யலாம். ஞானம் எய்துவதைக் காட்டிலும் பெரிது, பக்தியால் உள்ளம் கனிந்து கண்ணீர் சொரிதல் என்பது இதன் தாத்பரியம்.
சம்சார வாசனை என்பதே இல்லாமல் வைகுண்டத்தில் திருமாலுக்கு எந்நேரமும் தொண்டு புரியும் ஆதிசேஷன், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யசூரிகள் அயர்வறும் அமரர்கள். அவர்கள் ஒருபோதும் பெருமாளை மறக்காதவர்கள். ஒரு காலத்தில் பெருமாளை மறந்திருந்து பின்னர் அவரை இடையறாது நினைந்திருந்து வைகுண்டம் எய்தியவர்கள் அயர்வுறும் அமரர்கள்.
இறைவனின் வடிவத்தால் ஆட்கொள்ளப்படுவதைக் காட்டிலும் அவனது குணங்களால் ஆட்கொள்ளப்படுதல் இன்னும் சிறப்பு. நம்மாழ்வார் அவ்வாறு ஆட்கொள்ளப்பட்டார் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த சான்று.
யவன் என்பது யாவன் என்பதன் விகாரம்.
'உயர்வற உயர்நலம் உடையவன் யாவன்?'
'மயர்வற மதிநலம் அருளியவன்'
'மயர்வற மதிநலம் அருளியவன் யாவன்?'
'அயர்வறும் அமரர்களின் அதிபதி'
'அந்த அதிபதியின் ஒளி மிக்க திருவடிகளைத் தொழு மனமே'
'உனது துயரங்களெல்லாம் நீங்கும்'
இந்த வரிசையில் பாடலைப் படித்தால் பொருள் எளிதாக விளங்கும் என ஆசாரியர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
எப்போதும் ஒளிரும் அவனது கழலிணையைப் பற்றிக்கொண்டால் துன்பம் தரக்கூடிய அறியாமை என்னும் பேரிருள் விலகும். அறியாமை நீங்கினாலே நாம் தன்னால் உயர்வோம். தொழுதெழு என்னும் நுட்பமான சொல் தெரிவின் காரணம் அதுவே.
அவன் துயரறு சுடரடி என்னும் போது பெருமாளுக்குத் துயருண்டா என்ற சந்தேகம் எழலாம். இந்தச் சொற்றொடரை துயரறு அவன் சுடரடி என்று வரிசை மாற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், பக்தர்களின் துயரங்களைத் தன் துயரமாகக் கருதுவதால் 'அவன் துயர்' என்று புரிந்துகொண்டாலும் பாதகமில்லை என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து.
முந்தைய அத்தியாயம்: களர்நிலத்தை விளைநிலமாக்கும் காருண்யன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 29
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT