Published : 13 Mar 2025 06:32 AM
Last Updated : 13 Mar 2025 06:32 AM
இந்தியாவின் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களான கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, பரதநாட்டியம், நாமசங்கீர்த்தனம் உள்ளிட்டவற்றை, துறைசார்ந்த நேர்த்தியான கலைஞர்களின் பங்களிப்போடு நிகழ்ச்சி காணொலிகளை, உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பயனடையும் வகையில் சமூக வலைதளமான யூடியூபில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டுவந்தனர் `ஸ்பிரிட் ஆஃப் மார்கழி உத்சவ்' அமைப்பினர்.
இந்த அமைப்பின் நிறுவனர் பிரியா முரளியின் முன்முயற்சியில், நேரடியான முதல் நிகழ்ச்சியை சென்னை, பெசன்ட் நகரில் இருக்கும் ஸ்பேசஸ் அரங்கில் அண்மையில் நடத்தினர்.
முழுக்க முழுக்க கர்னாடக இசைக் கச்சேரியாக இல்லாமல், அதே நேரத்தில் கர்னாடக இசையின் சம்பிரதாயமான இலக்கணங்களை மீறாமல் வித்தியாசமான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இசை நிகழ்ச்சியை வழங்கினார் கர்னாடக இசைக் கலைஞர் சந்தீப்நாராயண். அவருக்குப் பக்கபலமாக, லலித் டல்லூரி புல்லாங்குழலும், அக்ஷய் யசோதரன் அகோஸ்டிக் கிடாரும், எஸ்.கிருஷ்ணா கடமும் வாசித்தனர்.
இறை அனுபூதியையும் லௌகீக அன்பையும் ஒரே புள்ளியில் சங்க மிக்க வைப்பதாக அன்றைய இசை நிகழ்ச்சி அமைந்தது. இறை அனுபூதிக்கு உதாரணம், சின்னஞ் சிறிய குழந்தை ஒன்று தியாகராஜ சுவாமியின் `நன்னு விடச்சி' பாடலை விரும்பிக் கேட்டது. லௌகீக அன்புக்கு உதாரணம், ஜெயதேவரின் அஷ்டபதி பாடலில் ராதா - கிருஷ்ணனின் சிருங்கார பக்தியை உருக்கமாக சந்தீப் நாராயண் பாட, அதை நெகிழ்ச்சியோடு சந்தீப்பின் ராதே ரசித்தது!
`நாத தனுமனிசம்' என்னும் தியாகராஜ சுவாமியின் பாடல் தொடங்கி, `ராமனை பஜித்தால் நோய்வினை தீருமே' என்று பாடப்பட்ட நிகழ்ச்சியின் நிறைவுப் பாடல்வரை, சந்தீப்பின் குரலோடு இரண்டறக் கலந்து, பாடலைக் கேட்பவர்களை கிறங்கடித்தது லலித்தின் குழலிசை! அருணகிரிநாதரின் திருப்புகழ், தியாகராஜ சுவாமியின் கீர்த்தனைகள், ஜெயதேவரின் அஷ்டபதி, கபீர்தாஸின் பாடல் இவர்களோடு மகா ரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிகள் அருளிய சில பாடல்களையும் அன்றைய நிகழ்ச்சியில் ரசிகர்களின் செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தாக்கினார் சந்தீப் நாராயண்.
"எங்களின் ஸ்பிரிட் ஆஃப் மார்கழி உத்சவின் அறிமுக நேரடி நிகழ்ச்சி எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். எங்களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது சந்தீப் நாராயண் குழுவினரின் இசை நிகழ்ச்சி" என்றார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பிரியா முரளி.
"அகோஸ்டிக் கிடார், புல்லாங்குழல் துணையோடு, உப பக்கவாத்தியமான கடத்தின் லய உதவியோடு நடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியை `ஃப்ரீ-ஸ்டைல் கர்னாடக இசை' என்று சொல்லலாமா?" என்று சந்தீப் நாராயணிடம் கேட்டபோது, "நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.
வயலின் இருக்கிறதா, மிருதங்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாம். ஒட்டுமொத்தமாக, வாத்தியங்களிலிருந்து எழும் ஒலி நிறைவாக இருந்தது. இது ஒரு வித்தியாசமான ரசிகானுபவமாக இருந்திருக்கும்!" என்றார்.
(படம்: எஸ்.சத்தியசீலன்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT