Last Updated : 13 Feb, 2025 04:08 PM

 

Published : 13 Feb 2025 04:08 PM
Last Updated : 13 Feb 2025 04:08 PM

நாம் காணும் கண் நம்மைக் காணுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 17

இரணியனுக்கு மகனாகப் பிறந்தாலும் இறுதி வரை திருமாலின் திருப்பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய அசுரக் குழந்தை பிரகலாதன்.

என்னைத் தான் கடவுளாக வழிபட வேண்டும் என்று தந்தை தொடர்ந்து வற்புறுத்திய போதும் சொல்லொணாக் கொடுமைகளுக்குத் தந்தை உட்படுத்திய போதும் பிரகலாதன் தடம் மாறவில்லை. பரந்தாமனின் மீதான அவனது பக்தியும் குறையவில்லை.

பிரகலாதனை வதைத்த இரணியனை வதம் செய்வதற்காக, நரசிம்மராகத் திருமால் தோன்றிய கதையை நாம் அனைவரும் அறிவோம். அதனை எட்டாம் பாசுரத்தில் நினைவுகூர்கிறார் திருப்பாணாழ்வார்.

பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு

அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து

கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்

பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே

நரசிம்மாவதாரத்தின் கதையைச் சுருங்கச் சொல்லி, திருமாலின் குணங்களைச் சொல்லி, அவன் கண்கள் என்னைப் பித்துக்கொள்ளச் செய்கின்றனவே என்று பாசுத்தை முடிக்கிறார்.

இந்தப் பாசுரத்தைச் சிங்கத்தில் தொடங்கி பெருமாளின் அங்கத்தில் போய் திருப்பாணாழ்வார் முடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

மற்ற சமயங்களில் வைகுண்டம் இருக்கும் திசை நோக்கிக் கூடத் திரும்பாமல், சோதனை வரும் போது மட்டும் வைகுண்டத்திற்குப் படையெடுப்பது அமரர்களுக்கு வாடிக்கை. அதுவும் கூட ஒருவகை அகங்காரமே. அத்தகைய அமரர்களுக்கு அரி அரியவன். அதாவது எளிதில் அகப்படாதவன்.

ஆனால் இன்பமோ துன்பமோ , எது வந்தாலும், எப்போதும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பிரகலாதன் போன்ற ஒரு பக்தனுக்காக ஓடோடி வருபவன். பிரகலாதன் வேண்டுவதற்கு முன்னமே அவன் துயரைத் துடைப்பவன்.

ஆதிப்பிரான் என்ற சொல்லைத் திருப்பாணாழ்வார் பயன்படுத்துவதற்கு அதுவே காரணம்.

“பிரான் எனில் பேருதவி புரிபவன். ஆதிப்பிரான் எனில் முந்தி வந்து உதவி புரிபவன்” என்பது பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் உரை விளக்கம். ஆதி காலத்திலிருந்து இந்தப் பிரபஞ்சத்தில் தன்னை நம்பிய பெயர்களை ஒருபோதும் ஏமாற்றாமல் காப்பாற்றி வருபவன் அவன் மட்டுமே. ஆதலால் அவன் ஒருவனே ஆதிப்பிரான்.

அடியவருக்கு ஒன்றென்றால் துடிதுடித்துப் போய் ஓடி வந்து பெரிய பெருமாள் உதவுவது அவனது திருக்கருணையின் வெளிப்பாடு. அதன் அடையாளச் சின்னம் அவனது கண்கள்.

கரிய நிறமுடைய, அகன்று விரிந்த, காது வரை நீள்கின்ற, ஒளிரும் தன்மை கொண்ட, செவ்வரி ஓடிய அழகிய கண்கள்.

நிலம் பார்க்காது மழை பொழியும் கரிய நிற மேகங்கள் போல பேதம் பார்க்காமல் கருணை காட்டும் கண்கள் அவனுடையவை. அசுரன் என்று பிரகலாதனை அவை ஒதுக்கவில்லை. அந்தக் கண்களிலிருந்து கருணை வெள்ளம் பொங்கித் ததும்பி வழிந்தபடியே இருக்கும். அதற்கு மேலிமை கீழிமை என்ற எல்லைகள் இல்லை.

அவன் காதுகளில் பக்தர்களின் குறைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றைத் தீர்க்கும் பொருட்டு அவன் கண்கள் காது வரை நீள்கின்றன. அவன் கருணைக்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

பக்தர்கள் வந்து எப்போதும் தன் முன் முறையிட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதால் அவன் தன் கண்களை மூடுவதில்லை. பக்தர்களுக்கு உதவுவதைப் போல அவனுக்கு ஆனந்தம் வேறில்லை. அதனால் அவன் கண்கள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். காணும் பக்தர்களையும் ஒளிரச் செய்யும்.

சரண் புகுந்த எவரையும் அருளும் செம்மையான கண்கள் அவனுடையவை. அதன் குறியீடாகத் தான் அடியில் செவ்வரி ஓடுகிறது.

உதவி கோருவதன் ஊடே அந்தக் கண்களைப் பார்க்கும் பக்தனுக்கு அந்தக் கண்களின் அழகை அனுபவித்து முடியாது. பூவில் அமிழும் வண்டென அவன் அதில் காலாகாலத்துக்கும் அமிழ்ந்து விடுவான். எத்தனை பிறவி எடுத்தாலும் அந்தக் கண்கள் கொடுக்கும் தெய்விக பித்து நிலையிலிருந்து அவனுக்கு விடுதலை இல்லை.

அந்த உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்ட திருப்பாணாழ்வார் திண்டாடுகிறார். ஆயினும் கொண்டாடுகிறார்.

நாம் பெருமாளின் கண்களைப் பார்ப்பது சாதாரணம்.

ஆனால், பெருமாளும் நம் கண்களைப் பார்ப்பது சாதாரணம் அல்லவே!

முந்தைய அத்தியாயம்: உலகங்களை உண்ட உய்யக்கொண்டான் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 16

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x