Published : 13 Feb 2025 06:47 AM
Last Updated : 13 Feb 2025 06:47 AM
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம், காயத்ரி மந்திரம், ஐந்து கரத்தனை, ஆறெழுத்து மந்திரமான சரவணபவ, ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய உள்ளிட்டவற்றை, `மந்திரா மீட்ஸ் கிளாஸிக்' (Mantra meets Classic) என்னும் தலைப்பின்கீழ் கடந்த 2015-ல் அகபெல்லா ("a cappella") இசை வகைமையில் பதிவு செய்ததோடு, மேற்கத்திய சேர்ந்திசை (Choir) பாணியில் உலகம் முழுவதும் இருந்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ரசிகர்களின் முன்னிலையில் நேரடி நிகழ்ச்சியாகவும் நடத்தியிருப்பவர் கணேஷ் பி. குமார்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சிம்பொனி இசை வடிவத்தை எழுதியிருக்கும் இந்தியர்களில் இவரும் ஒருவர். `ஸ்பிரிட் ஆஃப் ஹ்யூமானிடி' ((Spirit of Humanity) என்னும் தலைப்பில் ரைஸ் (RISE - Symphony in D minor), தி ஜர்னி (THE JOURNEY - From Despair to Hope - A Symphonic Poem) ஆகிய இரண்டு வடிவங்களை இவர் எழுதியிருக்கிறார். தற்போது உள்ளூர் வாத்திய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களைக் கொண்டு `ஓம் கடவுள்தான் காக்க வந்தே' என்னும் இசைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டிருக்கிறார் கணேஷ் பி. குமார்.
கணபதி வந்தனத்துடன் தொகுப்பின் முதல் பாடல் தொடங்குகிறது. அடுத்து, பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் குமாரஸ்தவம் உச்சாடனை மந்திரமாக பாடப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, பாம்பன் சுவாமிகள் அருளிய திருவலங்கற்றிரட்டு முதற்கண்டத்தில் அமைந்துள்ள சில காப்புப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.
நான்காவதாக, பாம்பனடிமை வீ. முத்துக்குமார குருசாமி இயற்றிய `இறையருள் விழைதல்' பாடப்பட்டிருக்கிறது. ஐந்தாவதாக, அருணகிரிநாதர் அருளிய `கந்தரனுபூதி'யிலிருந்து `உருவாய் அருவாய் உளதாய் இலதாய்' என்னும் பாடல் பாடப்பட்டிருக்கிறது. ஆறாவதாக, பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தின் 30 பாடல்களும் பாடப்பட்டிருக்கின்றன.
பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து மனிதர்களை காக்க வேண்டும். துர்சக்திகளிடமிருந்து காக்க வேண்டும் என்னும் வேண்டுதலை முருகனிடம் வைக்கும் பாடல்களின் தொகுப்புதான் சண்முக கவசம்.
உயிரெழுத்துகள் 12. உயிர்மெய் எழுத்துக்கள் 18. என முறையே இந்த எழுத்துகளை முதன்மையாகக் கொண்டு முப்பது பாடல்களை சண்முக கவசத்தில் எழுதியிருப்பார் பாம்பன் சுவாமிகள். அகரத்தில் தொடங்கி ஔகாரம் வரை வரிசைக்கிரமமாக பாடல்கள் இருக்கும். தொடர்ந்து இதே வகைமையில் பாடல்கள் பாடப்பட்டிருக்கும்.
இந்த இசைத் தொகுப்பு குறித்து பேசிய இசையமைப்பாளர் கணேஷ் பி. குமார், "நிறைவான பாடலில் தொண்டர் இனத்தோடு என்னை சேர்க்கும் செட்டி காக்க என்றும், தனிமையிலும் கூட்டத்திலும் அனுபூதி அருளிய அருணகிரிநாதரின் தலைவன் காக்க என்றும் கூறி, இந்த `சண்முக கவசத்தை' உள்ளம் உருகிச் சொன்ன இந்த தாசனின் கடவுளாம் பரமன் என்னிடம் வந்து காக்குமாறு வேண்டி இந்த மகாமந்திரமான சண்முக கவசத்தை பாம்பன் சுவாமிகள் நிறைவு செய்திருப்பார்.
நெகிழ்ச்சியான இந்தப் பாடலுக்கு இசையமைத்ததும் ஒலித்தொகுப்பாக வெளியிட்டதற்கும் முருகனின் அருளும் பாம்பன் சுவாமிகளும் அருளுமே முழுமுதற் காரணம்" என்றார்.
`ஓம் கடவுள்தான் காக்க வந்தே' இசைத் தொகுப்பைக் காணவும் கேட்கவும்: https://www.youtube.com/watch?v=MSNs4rIEcjw
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT