Published : 06 Feb 2025 04:30 PM
Last Updated : 06 Feb 2025 04:30 PM
இறைநிலை இரண்டு வகைப்படும். ஒன்று, ஏதும் செய்யாமல் சும்மா இருக்கும் நிலை. இரண்டு, கருணை எனப்படும் அருளாற்றலை வெளிப்படுத்தி இடையறாது தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் நிலை. முதலாம் நிலையை நிர்க்குண பிரம்மம் என்றும் இரண்டாம் நிலையை சகுண பிரம்மம் என்றும் கூறுவர். இவ்விரண்டு நிலைகளும் சேர்ந்தது தான் இந்தப் பிரபஞ்சம்.
மால் என்பது செயலற்றிருக்கும் இறைநிலை. திரு என்பது செயலுற்றிருக்கும் இறைநிலை. இவ்விரண்டு நிலைகளும் கொண்ட பரம்பொருளை 'திருமால்' என்று வைணவம் போற்றி வழிபடுகிறது. சக்தி இல்லையேல் சிவமில்லை என்பது போல, திரு இல்லையேல் மாலும் இல்லை. இதைத்தான் கவித்துவமாக "தாயாரின் பரிந்துரை இல்லாமல் எந்த வேண்டுதலையும் பெருமாள் நிறைவேற்றமாட்டார்" என்று வைணவம் குறிப்பிடுகிறது.
திருமகள், லட்சுமி, தாயார் என்று பல பெயர்களால் போற்றப்படும் 'திரு'வின் மகிமையை திருப்பாணாழ்வார் உணர்ந்துணர்ந்து பூரித்துப் போகிறார்.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே
பெருமாளை வைகுண்டநாதனாக, உலகளந்த பெருமாளாக, திருவேங்கடமுடையானாக, ராமபிரானாக முதல் நான்கு பாசுரங்களில் சேவித்த திருப்பாணாழ்வார், இந்தப் பாசுரத்தில் ரங்கநாயகியின் நாயகனாகப் பாடிப் பரவுகிறார். அரங்கனின் அருட்பெரும் ஆற்றலை எண்ணி எண்ணிச் சொல்லிழந்து நிற்கிறார்.
"ரங்கா, முதலில் 'நான்' என்னும் அகங்காரத்தை அழித்தாய். பிறகு 'என்', 'எனது' என்ற மமகாரங்களையும் அழித்தாய். இப்பிறவியில் மட்டுமல்லாது முற்பிறவிகளில் புரிந்த மொத்த வினைப்பயன்களையும் கூட முற்றாக அழித்துவிட்டாய். தீச்செயல் புரிய வேண்டும் என்ற இச்சையை நீக்கி உன் அருளால் என்னை உன் அன்புக்குரியவன் ஆக்கி ஆட்கொண்டாய். உன் அருளுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்" என்று உருகி உருகி அழுகிறார்.
இந்த உருக்கத்தால் அடியேன் என்ற சொல் இப்பாசுரத்தில் மிக முக்கியமானதொரு சொல்லாகிறது. மூன்றாம் பாசுரத்தில் வரும் அடியேன் என்ற சொல் பெருமாளின் அழகுக்கு அடிமையாதல். ஐந்தாம் பாசுரத்தில் வரும் அடியேன் என்ற சொல் பெருமாளின் அருளுக்கு அடிமையாதல். அரியின் அருளுக்கு பாத்திரமாதல் தான் வைணவ சம்பிரதாயத்தில் லட்சுமி கடாட்சம் எனப்படுகிறது.
இந்தப் பாசுரத்தின் மூன்றாவது அடியில் வரக்கூடிய "கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்" என்ற வரியில் சொக்கிப்போய் ஆசாரியர்கள் சுவையான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். அதிலும் "செய்தனன்" என்ற சொல் அவர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது.
செய்தனன் என்ற சொல்லைத் தன்மை வினைமுற்றாகக் கொண்டால்
'நான் என்ன தவம் செய்தேன் என்று அறியேன் ' என்று திருப்பாணாழ்வார் சொல்வதாகப் பொருள். படர்க்கை வினைமுற்றாகக் கொண்டால் 'என்னை உய்விக்கப் பெருமாள் என்னே தவம் செய்தார் ' என்று திருப்பாணாழ்வார் பாடுவதாகப் பொருள்.
நம் பாவங்களைப் போக்குவதற்காக பெருமாள் தவம் செய்கிறார் என்னும் பொருள், அவரது பேரருளின் பேராற்றலையும் அதன் முன்னே நிற்கும் மனிதனின் இயலாமையையும் ஒருசேரக் காட்டுகிறது. ஒரு மனித மனம் மொழியின் எல்லையைத் தொட்டு, சொற்களின்றி வெறும் உணர்வாகி நிற்கும் நிலை.
'அறியேன் அரங்கத்தம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை ஆட்கோண்டதே' என்னும் வரிக்கு ஒரு சிறப்பான பொருளுண்டு. 'நான் தவம் செய்திருக்கிறேன். ஆனால் பாவ சிந்தனை கொண்ட என் மனத்தை சிறிதும் யோசிக்காமல் தன் வசிப்பிடம் ஆக்கியிருக்கிறானே அந்த வரதன்.
அவன் அருட்கொடைக்கு கைகளைக் கூப்பி அழுவதைத் தவிர நான் என்ன பதில் கூற முடியும். நான் எப்போதும் அவனுக்கு அடிமை தான். ஆனாலும் அதை உணராமல் இருந்தேன். அவனது அருள் தான் அதை எனக்கு உணர்த்திற்று' என்பது இந்த வரிகளில் உள்ள திருப்பாணாழ்வாரின் மனக்குரல்.
பொருட்செல்வத்தைத் தேடி இந்த உலகம் அலைகிறது. கிடைத்ததும் பொருட்செல்வம் தொலைகிறது. ஆனால் அருட்செல்வம் நம்மை அரிதினும் அரிதாய் வந்தடைகிறது. அடைந்தால் நிரந்தரமாய் நம்முடன் இருந்து விடுகிறது.
> முந்தைய அத்தியாயம்: ஓட்டி விளையாடும் இறைவன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 14
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT