Published : 23 Jan 2025 01:16 PM
Last Updated : 23 Jan 2025 01:16 PM
ஸ்ரீரங்கப்பெருமானை அழகிய மணவாளனாகவே கண்டு, அவர் அடியிணையின் வடிவழகில் தோய்ந்து, பற்பல பற்பல பாடல்களைப் பாடிப் பாடி இன்புற்றவர் திருப்பாணாழ்வார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஸ்ரீரங்கநாதனை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்று கொள்ளைப் பிரியம்.
ஆனால், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலுக்குள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்று பயம். அதனால் ஒவ்வொரு நாளும் காவிரிக்கரையில் யாழும் கையுமாக நின்று, பெருமாள் இருக்கும் திசை நோக்கித் தொழுது, மனமுருகப் பாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
அரங்கநாதனுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்யும் லோக சாரங்க முனிவர் என்னும் அந்தணர் தலைவர், ஒரு நாள் காவிரியில் நீரெடுத்து வரச் சென்றபோது தனக்கெதிரே திருப்பாணாழ்வார் பாடுவதைக் கண்டுவிட்டார். 'விலகிச் செல்' என்று லோக சாரங்க முனி பலமுறை பணித்தும் திருப்பாணாழ்வாரின் காதுகளில் விழவில்லை. அவர் பாற்கடல் நாயகனை எண்ணி பாக்கடலில் மூழ்கியிருந்தார்.
இந்தச் செய்தி இதர அந்தணர்களை எட்டியது. அவர்கள் வந்து ‘போ போ’ என்று இரைந்த போதும் ஆழ்வார் அங்கிருந்து அகலவில்லை. இதனால் சினங்கொண்ட அந்தணர்கள், ஆழ்வாரின் மேல் கல்மாரி பொழிந்தனர். ஆழ்வாரின் கண்ணீர் சிவந்த நிறத்தில் மண் மீது கொட்டியது. அப்போதும் கூட வலி எதையும் உணராதவராய், மால் மீது மாலுற்ற அடியவராய், ஒரு சித்திரமாய், திருப்பாணாழ்வார் சமைந்திருந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த அதே சமயத்தில் திருவரங்கநாதனின் நெற்றியிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. பதறிப்போன அர்ச்சகர், கோயில் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். செய்தி, மன்னன் வரை சென்றது. மன்னனாலும் ரத்தப்பெருக்கை நிறுத்த முடியவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் தவித்த போது, எல்லாம் வல்ல ஸ்ரீரங்கப்பெருமான், லோக சாரங்க முனியின் கனவில் தோன்றினார். பக்தி என்பது குலத்தில் இல்லை. அவரவர் உளத்தில் இருக்கிறது என்று உபதேசித்து, “நீ உன் முதுகில் திருப்பாணாழ்வாரை ஏற்றிக்கொண்டு என் முன் வந்து நில்” என்று உத்தரவிட்டார்.
முதலில் லோக சாரங்கரின் முதுகில் ஏறக் கூச்சப்பட்ட திருப்பாணாழ்வார், இது அரங்கனின் அன்புக்கட்டளை எனத் தெளிந்த பின்பு, கோயிலுக்கு வர மனம் இசைந்தார். நம்பெருமாளைக் கண்டதும்,
அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்
கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
என்று பாடத் தொடங்கினார். 'அமலனே, விமலனே, நிமலனே, நின்மலனே, ஆதிபிரானே, விண்ணவர் கோனே, வேங்கடவனே, நீதி வானவனே, திருவரங்கத்தின் தலைவனே - உன் திருக்கமலப் பாதங்கள் என் கண்களோடு கலந்துவிட்டனவே' என்பது இந்தப் பாசுரத்தின் பொருள்.
அமலன், விமலன், நிமலன், நின்மலன் ஆகிய சொற்கள் அனைத்திற்கும் மலமற்றவன் என்பது தான் பொதுப்பொருள். ஆனால், இவற்றினிடையே சில நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.
மலம் என்றால் குற்றம் அல்லது தோஷம். ஆணவம், கன்மம், மாயை என்றவை மூன்று. மனிதன் பிறக்கும்போதே இந்த மும்மலங்களுடன் தாம் பிறக்கிறான். ஆனால், இறைவன் தன்னியல்பிலேயே இந்த மலங்களேதும் அற்றவன். அதனால் அவன் அமலன்.
ஒரு தூய பொருளும் தூய்மையற்ற பொருளும் ஒன்றுடன் ஒன்று கலந்தால் தூய பொருளும் தூய்மையற்றதாகிவிடும். ஆனால், திருவரங்கத்து கோவில் சந்நிதியில் இயற்கைக்கு மாறான ஒரு காட்சி அரங்கேறுகிறது.
"பெருமாளே, நான் தாழ்த்தப்பட்ட குலத்தவன். மும்மலம் என்னும் குற்றம் உடையவன். நீ நனிதூயன். ஆனால் அசுத்தனாகிய என்னை உன்னோடு சேர்த்துக் கொண்ட போதும் நீ சுத்தனாகவே இருக்கிறாய். அடியார்களுக்கு என்னை ஆட்படுத்தி மேலும் ஒளிர்கிறாய். இது எப்படி?" என்று திருப்பாணாழ்வார் வியக்கிறார். அசுத்தத்தோடு சேர்ந்த பிறகும் சுத்தமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் சுத்தம் கூடிப் பெருமாள் திகழ்கிறான். மலத்துடன் சேர்ந்தும் அவன் மலமற்றவனாக இருப்பதனால் அவன் விமலன்.
தன்னைத் தஞ்சம் புகுந்தவர்களை அவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. "மலமற்ற நான் மிக உயர்ந்தவன். மலமுற்ற நீ மிகத் தாழ்ந்தவன்" என்ற ஆணவ மலம் அவனிடம் இருப்பதில்லை. ஆதலால், அவன் நிமலன்.
தன் அடியார்களிடத்தில் குணமும் குற்றமும் நிறைந்திருந்தாலும் அவர்களின் குற்றத்தைப் பார்க்காமல் குணத்தை மட்டுமே பார்க்கும் பெருந்தயாளன் அந்தப் பரமேட்டி. குற்றத்தைக் காணும் குற்றத்தை அவன் செய்யாததால் அவன் நின்மலன்.
அமலன், விமலன், நிமலன், நின்மலன் ஆகிய சொற்களுக்கிடையில் உள்ள நுண்ணிய வேறுபாடுகளை விளக்கிச் சென்றவர்கள் வைணவ ஆசாரியர்களும் உரையாசிரியர்களும். அவர்கள் மட்டும் இல்லையேல் அகராதியைக் கண்டு குற்றமற்றவன் என்ற பொதுப்படையான பொருளில் தான் அந்த 'நான்கு' சொற்களையும் புரிந்துகொண்டிருப்போம்.
> முந்தைய அத்தியாயம்: ஒரு பாசுரத்தில் மூன்று பாச்சரங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 10
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT