Published : 20 Jan 2025 12:58 PM
Last Updated : 20 Jan 2025 12:58 PM
ஒன்பது பாசுரங்களைப் பாடியும் கண் மலராத பெருமாளின் மீது, தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு ஒரு மெல்லிய கோபம் ஏற்படுகிறது. அதனால் தன் சொல் ஒவ்வொன்றையும் கூர் தீட்டுகிறார். திருப்பள்ளியெழுச்சியின் நிறைவுப் பாசுரமான பத்தாம் பாசுரம் அவரிடமிருந்து பிறக்கிறது.
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே
“சூரியன் உச்சிக்கு வந்து நிலைகொண்டுவிட்டான். மணம் மிகுந்த தாமரைப்பூக்கள் மலர்ந்துவிட்டன” என்று முதலிரண்டு அடிகள் சொல்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட இதே கருத்தை முதல் பாசுரத்திலேயே தொண்டரடிப்பொடியார் சொல்லிவிடுகிறார்.
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
முதல் பாசுரம் போலே இறுதிப் பாசுரமும் அமைந்திருப்பது ஒரு நல்ல பிரபந்தத்துக்கான இலக்கணம் என்று கூறப்பட்டாலும், ஆழ்வார் இந்த உத்தியை மேற்கொண்டதற்கு ஆசாரியர்கள் ஒரு சுவையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
கீழ்த்திசையில் சூரியன் வந்துவிட்டான் என்ற சேதியறிந்த சந்தோஷத்தில் தாமரை உள்ளிட்ட நாள்மலர்கள் சற்றே மலர்கின்றனவாம். அதனால் அவற்றிலிருந்து தேன் கொஞ்சம் ஒழுகுகின்றதாம். அதே சூரியன் உச்சிக்கு வந்த பிறகு முழுவதுமாக மலர்ந்து தங்கள் திவ்விய மணத்தை அவை காற்றெங்கும் வீசுகின்றனவாம்.
ஆனால், இதன் பின்னே ஒரு நுண்பொருளும் உள்ளது. தாமரை மலர்ந்தது என்றால் அந்தத் தாமரையில் வாசம் செய்கிற திருமகளும் கண்ணுறக்கம் நீங்கிவிட்டாள் என்று பொருள். “தாயாரே கண் விழித்துவிட்டாள். நீ இன்னும் கண்ணயர்ந்திருப்பது நியாயமா?” என்று பெருமாளைக் கேட்கிறார் தொண்டரடிப்பொடியார். மால் என்பவன் இறைவன். திரு என்பது அந்த இறைவனின் அருளாற்றல். அதனால் தான் ஸ்ரீ நாராயணனைத் திருமால் என்று நாம் அழைக்கிறோம். இது ஆழ்வார் ஏவிய முதல் பாச்சரம். இந்தச் சரம் பட்டும் பெருமாள் கண் மலரவில்லை.
அதனால் துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் என்று அடுத்த பாச்சரத்தை எய்கிறார்.
ஆன்மாவுக்கு ஆணவம், சினம், சோம்பல், மறதி, பொறாமை உள்ளிட்டவை தாம் ஆடைகள். இவற்றைத் துறந்தால் தான் இறைவன் நம்மை ஆட்கொள்வான். இவற்றைத் துறத்தலே உண்மையான நிர்வாணம்.
இந்தத் தத்துவத்தை உணர்த்தவே, கண்ணன் கோபிகைகளின் ஆடைகளைக் களவாடி, தலைமேல் கைகளைக் கூப்பி வணங்கச் சொன்னான் என்கிற கதை பன்னெடுங்காலமாக இங்கே சொல்லப்பட்டு வருகிறது.
“ரங்கநாதா, நீ மதுராபுரியில் வாழும் கோபிகைகளிடம் தான் லீலை நிகழ்த்துவாயா? நாங்கள் ஶ்ரீரங்கத்தில் பாயும் காவிரியில் நீராடி ஆடையும் அணிந்துகொண்டுவிட்டோம். எங்களிடம் நீ திருவிளையாடல் புரிய மாட்டாயா? அதன் பொருட்டாவது நீ கண் விழிக்க மாட்டாயா?” என உடுக்கை போன்ற இடையும் சுருண்ட கூந்தலும் கொண்ட ஶ்ரீரங்கத்து பெண்கள் ஏங்குகிறார்களாம்.
இந்தச் சரம் பட்டும் அனந்தசயனன் அசரவில்லை. அதனால் தொண்டரடிப்பொடியார்,
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே
எனப் பாசுரத்தின் இறுதியில் தனது இறுதிப் பாச்சரத்தைச் செலுத்துகிறார்.
“தொண்டரடிப்பொடியென்னும் அடியனை” என்னும் வரிக்கு தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகிய என்னை என்று பொருள் கொள்வதைக் காட்டிலும் இன்னொரு விதமாகப் பொருள் கொள்ளுதல் சிறப்பு என்கிறார்கள் ஆசாரியர்கள்.
“பெருமாளுக்குச் சாத்துவதற்காக ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட துளசி மாலைகள் நிரம்பிய பூக்கூடைகளைத் தொண்டர்கள் தங்கள் தோள்களில் ஏந்தியிருக்கிறார்கள். அதனால் அவர்களின் தோள்கள் ஒளியுடன் பொலிகின்றன. அத்தகைய மெய்யடியார்களின் (பாகவதர்களின் ) அடிப்பொடியாக, அதாவது காலடித்துகளாக இருக்கும் என்னை அங்கீகரித்து, அவர்களின் அடியவனாக்கி, என்னை நீ அருளுக்குப் பாத்திரமாகச் செய்தருள வேண்டும் நாராயணா. அதற்காகக் கூட கண் திறந்து பார்க்கக் கூடாதா?” என்று ஆழ்வார் இறைஞ்சி நிற்கிறாராம்.
“பெருமாளுக்கு அடிமையாய் இருப்பது கீழ்ப்படியில் இருப்பது. பெருமாளின் அடியார்களுக்கு அடிமையாய் இருப்பது மேற்படியில் இருப்பது” என்று இந்த வரிகளின் சாரத்தை ஆசாரியர்கள் விளக்குகிறார்கள்.
இந்த மூன்று சரங்களால் தாக்கப்பட்ட பிறகும் பெருமாள் இன்னும் இறுக்கமாகக் கண்ணை மூடிக்கொண்டு தூங்கியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
> முந்தைய அத்தியாயம்: நீங்கள் அறுகால் பறவையா, இருகால் பறவையா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 9
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT