Last Updated : 22 Dec, 2024 03:45 PM

 

Published : 22 Dec 2024 03:45 PM
Last Updated : 22 Dec 2024 03:45 PM

செங்கப்படை ஸ்ரீசென்னகேசவ பெருமாள் கோயிலில் 67 ஆண்டுகளாக அணையாத ஜோதி!

20 ஆயிரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலை ஊஞ்சலில் ஆட்டுவிக்கப்படும் காட்சி.

திருமங்கலம் செங்கப்படை சென்னகேசவ பெருமாள் கோயிலில் 67 ஆண்டுகளாக ஜோதி ஒன்று அணையாமல் எரிந்து வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள கள்ளிக்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது செங்கப்படை கிராமம். இக்கிராமத்தின் மேற்கு பகுதியின் குளக்கரையில்  தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஒருகால பூஜை நடக்கிறது. 67 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாத ஜோதி ஒன்று எரிந்து கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

இங்குள்ள பெருமாளை வணங்கினால், திருமணம் தடை உள்ளிட்ட குறைகளும் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, மார்கழி மாதம் இக்கோயில் விசேஷமாக இருக்கும்.இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏராளமான மாணவிகளுக்கு திருப்பாவை,பெருமாளின் திருநாமம் கற்றுத் தரப் படுகிறது.

இக்கோயில் குறித்து பூசாரி பிஎன்.ஆனந்தக்குமார் தெரிவித்ததாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. 67 ஆண்டுகளாக தொடர்ந்து அணையாத விளக்கு எரிந்து வருகிறது. 5 முகங்களைக் கொண்ட விளக்கில் தினமும் காலை, மாலையில் எண்ணெய் ஊற்றி எரிந்த திரியை எடுத்துவிட்டு, 5 திரிகள் போடப்படும்.

கோயிலுக்குள் ஆண்டு முழுவதும் அணையாமல் எரியும் விளக்கு.

65 ஆண்டுகளுக்கு முன்பு சித்துமுத்து வேலாயுதம் சுவாமி என்பவர்தான் இந்த ஜோதியை அறிமுகம் செய்துள்ளார். அது முதல் தொடர்ந்து எரிகிறது. குறிப்பாக, மார்கழி மாதம் தினந்தோறும் காலையில் பூஜை, ஏகாதசி தினத்தில் அன்னதானமும் நடக்கிறது. சித்திரை மாதத்தில் வரும்  ராமநவமி தினத்தன்று மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட 20 ஆயிரம் பூக்களால் ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் ஆட்டுவிக்கப்படும்.

மார்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இவ்வூரைச் சேர்ந்த போத்திராஜ் நாயுடு என்பவர், கடந்த 1954 சென்னகேசவ பெருமாளுக்கென 1008 நாமம் எழுதியுள்ளார். இதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். மார்கழி மாதம் அதிகாலை 4 முதல் 4.30 வரை திருநாமமும், 4.30 முதல் 5.30 வரை திருப்பாவையும் கற்றுத் தரப்படும். இதன்மூலம் இவ்வூரைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் திருப்பாவை பாடல்களை பிழையின்றி பாடுகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி, தமிழ் வருடப்பிறப்பு போன்ற மாதங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. பெருமாள், தாயார், ஒரே கல்லில் 3 ஆக பிரித்து கூர்ம வடிவத்தில் சிலைகள் இருக்கின்றன. பெருமாளும், தாயாரும் ஒரே பீடத்தில் உள்ளனர். ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகள் 2008-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இறந்தவர்களுக்கு 30-வது நாள் மோட்ச விளக்கு இங்கு ஏற்றப்படும் பழக்கம் தொடர்கிறது. சிறப்பு நாட்களில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மார்கழி முடிந்து, தை 1-ம் தேதி முதல் ஊருக்குள் பெருமாள் பற்றி பஜனை பாடி சென்று கோயிலில் வந்து முடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இது வழக்கமாக ஆண்டுதோறும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x