Published : 13 Dec 2024 03:19 PM
Last Updated : 13 Dec 2024 03:19 PM
அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை ஏற்ற சிவபெருமானிடம் வரம் பெற்ற பருவத ராஜகுலத்தினர் மீன மகரிஷியின் சாபத்தில் இருந்து விடுபட சிவபெருமான் வரம் அருளியதால் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஆண்டாண்டு கால மாக ஏற்றி வருகின்றனர்.
அக்னி பிழம்பாக 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில், கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மாலை
6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கின்றனர். உலகமே வணங்கும் “மகா தீப(ம்)”த்தை, பருவத ராஜ குலவம்சத்தினர் ஏற்றி வருவது சிறப்புக்குரியதாகும். மீன மகரிஷியால் பெற்ற பாவத்தில் இருந்து விடுபட, அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றுவதன்மூலம் மோட்சம் பெறுகின்றனர். இதனால், மகா தீபம் “மோட்ச தீபம்” என்றும் அழைக்கப்படுகிறது.
பருவத ராஜகுல வம்சத்தின் வழி வந்த பருவத மகா ராஜாவின் தவப் புதல்வியாக பார்வதி தேவி அவதரித்தார். அப்போதைய காலத்தில் பிரம்ம மகரிஷிகளின் தவத்தை கலைத்துவிட்டு, மீன் வடிவத்தில் கடலுக்குள் சென்றனர் அசுரர்கள். அப்போது, செம்பொன் வலை கொண்டு அசுரர்களை கரைக்கு இழத்து வந்து வதம் செய்தவர் பருவத மகாராஜா. அப்போது அவரது வலையில், கடலுக்குள் தவம் செய்து கொண்டிருந்த மீன மகரிஷியும் சிக்கிக் கொண்டார். அவரது தவம் கலைந்தது. இதனால் சினம் கொண்ட அவர், ‘உனது ராஜவம்சம் அழிந்து மீன் பிடித்துதான் வாழ வேண்டும் என சாபமிட்டார்.
மீன மகரிஷியின் சாபத்தை கண்டு நடுநடுங்கிய பருவத மகாராஜா, சிவ பெருமானிடம் வேண்டினார். கருணையே வடிவமான சிவ பெருமான், கார்த்திகை திருநாளில் அண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருகிறேன். அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ குல வம்சத்தினர் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடானக் கோடி பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழங்கும்போது, அதன் புண்ணிய மெல்லாம் பருவதராஜகுல வம்சத்தை சென்றடையும் என வரம் அருளினார் என புராணங்கள் கூறுகின்றன. அதன்படியே பருவத ராஜகுல வம்சத்தினர், மகா தீபத்தை இன்றளவும் ஏற்றி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT