Published : 20 Aug 2019 10:04 AM
Last Updated : 20 Aug 2019 10:04 AM
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
ஒரு நாளைக்குச் சராசரியாக 60 ஆயிரம் எண்ணங்கள் நம் மனத்தில் வந்து போகும் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை சரியா என்று வரும் எண்ணங்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா என்ன? என்னைக் கேட்டால் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் தலைமுறைக்குத் தலைமுறை அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. கணக்கு என்னவாக இருந்தாலும் அதிக எண்ணங்கள் ஆரோக்கியமானவையல்ல. காரணம் நம் எண்ணங்களில் பெரும்பாலானவை எதிர்மறையானவை.
ஒரு குழந்தை வளரும் முதல் ஆறு ஆண்டுகளில் பெற்றோரிடமிருந்து வரும் செய்திகளில் 80 சதவீதம் எதிர்மறையானவை என்கின்றனர் உளவியலாளர்கள். அத்தனை பாசமும் பரிவும் கொண்ட பெற்றோர்களே தாங்கள் உயிராகக் கருதும் குழந்தை குறித்து உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், தங்களை அறியாமல் எதிர்மறை செய்திகளைத்தான் அதிகம் தருகிறார்கள்.
எப்படி? “நீ சாப்பிடலேன்னா பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்” என்று ஆரம்பித்து ஒவ்வொரு செயலையும் செய்ய வைக்க அச்சத்தைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நிர்வாக வழிமுறையும் அச்சத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறது. “படிக்கலேன்னா நீ நடு ரோட்டுல நிப்பே”, “கணக்கு தெரியாமல் உருப்பட முடியாது”, “இந்த மார்க்க வச்சிட்டு எந்த கம்பெனியும் வேலை கொடுக்காது”, “ஒரு வீடுகூட இல்லை; எப்படிப் பொண்ணு கொடுப்பாங்க?” இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
வீணான கவலை
இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள். 60 ஆயிரம் எண்ணங்கள் என்றால் 60 அயிரம் தனி எண்ணங்கள் அல்ல அவை. ஒரே எண்ணத்தைதான் பல ஆயிரம் முறை ஓட்டிப் பார்க்கிறோம் என்று சொல்கிறார்கள். கவலையும் குழப்பமும் உள்ள போதுதான் மனம் ஒரே எண்ணத்தை ஓட்டி ஓட்டிப் படம் பார்க்கும். உதாரணத்துக்கு, ஒரு மாணவன் தன் வகுப்பில் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். மேடையில் ஏறி உரை நிகழ்த்துவது என்பது பற்றிய பயமும் பதற்றமும், அது பற்றிய தீவிர யோசனைகளைக் கொடுக்கும்.
“ஆசிரியர் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுவார்”, “தோழிகள் முன்னாடி மானம் போகும்!”, “சகாக்களே காலேஜ் முழுக்கச் சொல்லிக் கலாய்ப்பார்கள்”, “இங்கிலீஷ் வார்த்தை திடீர்னு வராது”, “மைக் பிடிச்சாலே கை நடுங்கும்”, “தப்பிக்க முடியாம மாட்டிக்கிட்டோமே...!” இந்த எண்ணங்கள் இரவு முழுவதும் ஆயிரம் முறை தோன்றும். கடைசியில் கல்லூரிக்கு லீவு போடுவதில் முடியும். பின்னோக்கிப் பார்த்தால், விடியக் விடிய கவலைப்பட்டது அனைத்தும்
வீண்தானே?
எண்ணங்களை குறைக்கும் சூட்சுமம்
ஒரு செய்தி தெரியுமா? கவலைகளில் பல தேவை இல்லாதவை, நடக்காதவை. அர்த்தம் இல்லாதவை. ஆனால், அது தெரியாமல் வாழ்க்கையே ஸ்தம்பிக்கும் அளவுக்குக் கவலைபடுவது மனித இயல்பு. சில வருடங்களுக்கு முன்னால் கவலைப்பட்ட விஷயத்தை இன்று நினைத்தால் சிரிப்புதான் வரும். அதனால், கவலை, குழப்பம், பதற்றம், பயம், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களை திரும்பத் திரும்பக் கொண்டு வந்து குவிக்கும்.
இதற்கு மாறாக நேர்மறையான உணர்வு எண்ணங்களை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தும். ஒருவர் செய்த நல்லதை நினைக்கிறீர்கள். உங்கள் நல்ல எண்ணங்கள் அதிகப்பட்சம் சில நிமிடங்கள் நீடிக்கலாம். ஆனால், ஒருவர் செய்த துரோகத்தை நினைத்துப் பாருங்கள். விடிய விடிய எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும்.
இதை இன்னொரு நிலையில் யோசித்துப் பார்த்தால், மிக மேலான உணர்வு நிலைகள் எண்ணத்தை முழுவதுமாக நிறுத்திவிடும். ஒரு பேரெழில் காட்சி உங்களை ஸ்தம்பிக்க வைக்கும். காதல் வசப்பட்டவுடன் எல்லா நினைவுகளும் அழிந்து போய், அந்த உணர்வே மேலிடும்.
மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசை பேரானந்தத்தைத் தரும், மெய் மறக்கச் செய்யும். மனம் ஒப்பி செய்யும் வேலை வீடு, வாழ்க்கை, வேலை சார்ந்த மனிதர்கள் என எதையும் யோசிக்க விடாது. எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் சிக்காத மேலான உணர்வு மனிதனை விடுதலை தருகின்றன. தீவிர பக்தி இறை சிந்தனை தவிர வேறொன்றும் அறியாதது. தீவிர வாசிப்பு மற்றச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காது. இப்படி ஒரு உணர்வில் அல்லது உணர்வு தரும் செயலில் மனம் லயிப்பதுதான் எண்ணங்களை குறைப்பதன் சூட்சுமம்.
தன்னை மறந்திருப்போம்!
பதஞ்சலி முனிவர் யோகச் சூத்திரத்தில் யோக நிலையை ‘சித்த விருத்தி நிரோதா’ என்று வர்ணிக்கிறார். எண்ணங்களைத் தடுக்கும் வல்லமை கொண்டது யோகா என்று அதற்குப் பொருள். சுழன்று சுழன்று நம்மைத் திணறடிக்கும் எண்ணங்களை நிறுத்த யோகா பயன்படும் என்பதைவிட, எண்ணங்களை முழுமையாக நிறுத்தும் வலிமை கொண்டவை அனைத்தும் யோக நிலைகளே. இளையராஜாவால் அரை மணி நேரத்தில் ஆறு டியூன் போட முடிந்தது, இந்த யோக நிலையில்தான். கண்ணதாசன் டியூனை கேட்ட மாத்திரத்தில் அதற்கேற்ப அற்புத வரிகளைத் தந்தது இந்த யோக நிலையில்தான். உலகின் எல்லாப் படைப்புகளும் பிறந்தது எண்ணங்களற்ற இந்த மனநிலையில்தான். மனம் குப்பைத் போல எண்ணங்களால் நிரம்பி வழிவதை உங்களால் பார்க்க முடிகிறதா? அப்படி என்றால் அதைக் கவிழ்த்து சுத்தம் செய்து வெறுமையாக வைத்துக்கொள்ளும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. உங்களையே நீங்கள் மறக்கும் தருணங்கள் எவை என்று கண்டுபிடியுங்கள். அங்குத்தான் எண்ணங்களை இயக்கும் விசை உள்ளது!
கேள்வி: எனக்கு வயது 22. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதுமே காதல் அல்லது காமம் பற்றிய சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. செயலளவில் எதுவுமில்லை. இவற்றைப் பற்றி சிந்திப்பது தவறு என்று அவற்றைச் சிந்திப்பதைத் தவிர்க்க எவ்வளவு முயற்சித்தாலும் அவையே மேலோங்கி உள்ளன. குற்ற உணர்வுயும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. எப்படி என்னுடைய எண்ணங்களை மாற்றுவது?
பதில்: உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் இயல்பானவை. தீயவை அல்ல. குற்ற உணர்வுக்கு அவசியமில்லை. ஆசையும் இயலாமையும் உங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணங்களை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்குவதற்குப் பதிலாக, வேறு செயல்களில் உங்கள் நேரத்தையும் சிந்தனையையும் செலுத்துங்கள். உடல் உழைப்பைக் கோரும் விளையாட்டுகள் சிறப்பானவை.
(தொடரும்)
கட்டுரையாளர்: மனிதவள பயிற்றுநர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT