Published : 30 Jun 2014 10:03 AM
Last Updated : 30 Jun 2014 10:03 AM

காதல் நல்லது: மகனுக்குத் தந்தையின் அறிவுரை

காதலிப்பதைப் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்வது, அப்படிச் சொன்னால் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற மனத் தடுமாற்றம் இன்றைய இளைஞர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் காதலிப்பதற்காக அப்படி எந்த மனத் தடுமாற்றமும் அடையத் தேவையில்லை என்பதை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜான் ஸ்டெயின்பெக் தன் மகனுக்கு எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கடிதம் எழுதப்பட்ட ஆண்டு 1958. பதின்பருவத்தில் இருக்கும் மகன், உறைவிடப் பள்ளியில் தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பது பற்றிக் கூறியதற்கு ஜான் ஸ்டெய்ன்பெக் எழுதிய பதில் கடிதம்:

அன்புள்ள தாம்,

இன்று காலை உன் கடிதம் எங்களுக்கு கிடைத்தது. நான் அதற்கு என் பார்வையில் இருந்து பதிலளிக்கிறேன். உன் அம்மா, எலைன் அவர் பார்வையில் பதிலளிப்பார்.

முதலில், நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அதுதான் வாழ்க்கையில் அனைவருக்கும் நடக்கிற சிறந்த விஷயம். அதனால், அதை ஒரு சின்ன விஷயமாகவோ, எளிதான விஷயமாகவோ ஆக்குவதற்கு யாரையும் அனுமதிக்காதே.

இரண்டாவது, காதலில் பல வகைகள் இருக்கின்றன. சுயநலம், ஈர்ப்பு, தற்பெருமை காட்டிக்கொள்ளும் வகை ஒன்று. இது காதலை சுய முக்கியத்துவத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும். இது ஒரு மோசமான , முடக்கிவிடும் தன்மையுடைய காதல். அடுத்தது உன்னிடம் இருக்கும் இரக்கம், அக்கறை, மரியாதை போன்ற எல்லா நற்பண்புகளையும் வெளிக்கொண்டுவரும் வகை. உன் நடத்தைகளுக்காகக் கிடைக்கும் சமூக மரியாதையைப் போன்றே ஒரு தனி மனிதரிடம் உனக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் தனித்துவமும் மதிப்பும் வாய்ந்தது. முதல் வகை உன்னை நோயாளியாக்கி, சிறுமைப்படுத்தி, வலிமையற்றவனாக ஆக்கிவிடும். ஆனால் இரண்டாவது, உன்னுள் இருக்கும் வலிமை, துணிவு, நற்குணங்கள், நீ அறிந்திராத அறிவு உட்பட அனைத்தையும் வெளிப்பட வைக்கும்.

நீ இது ‘பப்பி லவ்’ இல்லை என்கிறாய். ஒரு வேளை நீ இந்த உணர்வை அழுத்தமாக உணர்ந்தால், அது நிச்சயமாய் ‘பப்பி லவ்’ கிடையாது.

ஆனால், நீ என் அபிப்பிராயத்தைக் கேட்பதாய் நினைக்கவில்லை. எல்லோரையும்விட உனக்கு அது நன்றாகத் தெரியும். இதை நீ எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று என்னிடம் ஆலோசனை கேட்கிறாய். அந்த உதவியை என்னால் உனக்குச் செய்ய முடியும்.

உன்னுடைய இந்த அன்பின் நோக்கம் சிறந்தது, அழகானதும் கூட.

நீ யாரையாவது காதலித்தால் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

ஏதோவொரு காரணத்தால் நீ எதிர்பார்க்கும் அன்பு உனக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், அதற்காக உன் அன்பைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை.

கடைசியாக, என்னால் உன் உணர்வைப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், நானும் அதைக் கடந்து வந்திருக்கிறேன். உனக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாங்கள் சுசனை (தாமின் காதலி) சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறோம். அவளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். உன் அம்மா, எலைன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். இந்த விஷயத்தில் என்னைவிட உன் அம்மா, உனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கலாம்.

அத்துடன் இழப்பைப் பற்றி எப்போதும் வருந்தக் கூடாது. ஒருவேளை இது சரியானதாக இருந்தால், நிச்சயமாக அது ஈடேறும். இதில் முக்கியமானது, அவசரப்படக் கூடாது. சிறந்தது எதுவும் விலகிப் போகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x