Published : 26 May 2014 03:03 PM
Last Updated : 26 May 2014 03:03 PM
சங்குகள், முத்துச்சிப்பிகள் இரண்டும் மெல்லுடலி வகையைச் சேர்ந்தவை. மென்மையான உடலைக் கொண்டிருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும் பாதுகாப்புக் கவசமாக இயற்கையிலேயே மேல் ஓட்டைப் பெற்றுள்ளன. பிறந்தது முதல் இந்த ஓடு சிறிது சிறிதாக உருவாக்கப்படுகிறது.
சங்குகள்
சங்குகள் (Counch, Cowry shell) கடலடி மட்டத்தில் மணற்பாங்கான பகுதிகளில் கூட்டமாக வசிக்கும். இவை அதிகமாகக் காணப்படும் பகுதிகள் சங்குப் படுகைகள் என்றழைக்கப்படுகின்றன. மணலில் புதைந்திருக்கும் புழுக்களை இவை உண்கின்றன. ஆண் சங்குகளைவிட, பெண் சங்குகள் அளவில் பெரியவை.
இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் சங்கு வெளியிடும் முட்டைக்கூடு, சங்குப்பூ என்றழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டில், குறுக்குவாட்டில் ஒன்றன்மீது மற்றொன்றாக 28 - 34 அறைகள் இருக்கும். இவற்றில் கருத்தரித்த முட்டைகள் இருக்கும். கூட்டின் பக்கவாட்டில் உள்ள பிளவு வழியாகக் கடல் நீர் உள்ளே சென்றுவரும். இதன்மூலம் கருவுற்ற முட்டைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள மன்னார் வளைகுடாவில் வெண் சங்கு, மாட்டுத் தலை சங்கு, தவளைச் சங்கு, வாழைப்பூ சங்கு, விநாயகர் சங்கு, ஐவிரல் சங்கு, தேள் சங்கு போன்ற வகைகள் உள்ளன.
முத்துச் சிப்பிகள்
மன்னார் வளைகுடாவில் நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் அதிகம் இருப்பதால், அவற்றை உண்டு வாழும் முத்துச்சிப்பிகளும் (Pearl) இங்கு அதிகம். முத்தை உற்பத்தி செய்யும் பிங்டாடா ஃபியுகடா (Pinctada fucata) என்ற வகை முத்துச்சிப்பி இங்குள்ளது.
முத்துச் சிப்பிகள் தங்களது ஓட்டுக்குள் நேக்ரியஸ் என்ற மென்மையான அடுக்கைக் கொண்டுள்ளன. இந்த மெல்லுடலிகளின் உடலுக்குள் வேற்றுப் பொருள் செல்லும்போது ரத்தம் அல்லது சீழ் போலிருக்கும் நேக்ரி (Nacre) என்ற திரவத்தை, அந்த நேக்ரியஸ் அடுக்கு சுரக்கிறது. இந்தத் திரவம் அந்த வேற்றுப் பொருளைச் சூழ்ந்து, காலப்போக்கில் கடினமான முத்தாக மாறிவிடுகிறது.
கறுப்பு, வெளிர் சிவப்பு, தங்கம், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் முத்துகள் இருக்கும். வட்ட வடிவ முத்துகள் அதிக மதிப்புடையவை. எடை, நிறம், பளபளப்பைப் பொறுத்து முத்துகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முத்துச்சிப்பிப் பூச்சிகள் கடலில் இருந்து பிடித்து வளர்க்கப்பட்டு, செயற்கையாகவும் முத்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆபத்துகள்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவு, கழிவுநீர், வரைமுறையற்ற மீன்பிடித்தல் போன்றவை காரணமாகச் சங்குப் படுகைகள், முத்துச் சிப்பிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முத்துக் குளி துறை என்று பண்டைக் காலத்தில் இருந்து பெயர்பெற்று விளங்கிய தூத்துக்குடியில், இன்றைக்கு முத்துக்குளித்தலே நடைபெறாத அளவுக்கு முத்துச் சிப்பிகள் குறைந்துவிட்டது நம்முடைய அலட்சியத்துக்கு உதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT