Published : 01 Oct 2019 10:34 AM
Last Updated : 01 Oct 2019 10:34 AM
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
அசாம், மேகாலயாவுக்குச் கடந்த ஆண்டு சென்றிருந்தேன். அவ்வளவு அழகான ஒரு பகுதியை இதுவரை நான் பார்த்ததில்லை. சிரபுஞ்சி செல்ல ஒரு படு சுமாரான வேன் வந்தது. புறப்படும்போதே லேசான மழை.
மலைப்பாதை பல இடங்களில் அபாயகரமானதாக இருந்தது. ஓட்டுநர் அசரவேயில்லை. எதையோ மென்றுகொண்டே ஒவ்வொரு வளைவிலும் சர் சர்ரென்று திருப்பியது பலர் வயிற்றைக் கலக்கியது.
நிறையப் பாடங்கள் கற்பீர்கள்!
எட்டிப் பார்த்தால் பள்ளத்தாக்கு. கண்ணுக்கு எட்டிய பக்கத்தில் எல்லாம் ஒரு அருவி சன்னமாக வழிந்துகொண்டிருந்தது. ஒரு இடத்தில் ஏழு அருவிகள் ஒட்டுமொத்தமாகத் தெரியும் அபூர்வக் கோணம் கிடைத்தது. அனைவரும் இறங்கி மொபைலில் ஒளிப்படங்கள் சுட்டுத் தள்ளினோம். சிரபுஞ்சியில் ஒரு குகைக்கு டிக்கெட் போட்டு அனுப்பினார்கள். குனிந்தும் தவழ்ந்தும் இருட்டில் ஊர்ந்தும் வழுக்கி விழாமல் வெளியே வந்தது படு சுவாரசியமான அனுபவம். வரும் வழியில் காசிப் பழங்குடிகள் மஞ்சள் உள்ளிட்ட பல விளைபொருள்களை ஆகியவற்றை விற்றனர். குளிரும் பசியும் கொண்ட நேரத்தில் அங்கே குடித்தது
தேநீரே அல்ல; தேவாம்ருதம்!
கட்!
பயணக்கதை போதும். இப்போது சொல்லுங்கள். எப்படி உணர்கிறீர்கள்? மனத்தளவில் எங்கு இருக்கிறீர்கள்? என்ன பார்த்தீர்கள்? குறிப்பாகக் கேட்டால் நான் சென்ற வேன் என்ன கலர்? ஓட்டுநருக்கு என்ன வயது? குகையில் எவ்வளவு வெளிச்சம் இருந்தது? மஞ்சள் தவிர வேறென்ன பொருட்கள் விற்கப்பட்டன? தேநீர்க் கோப்பையில் குடித்தேனா கண்ணாடி கிளாஸில் குடித்தேனா? உங்கள் மனத்தில் ஓடிய படத்தில் என்னென்ன பார்த்தீர்கள்? உங்களுடன் இதே கட்டுரையைப் படித்த தோழியிடம் இதே கேள்விகளைக் கேளுங்கள். உங்களுக்குள் ஓடிய படத்தை அவர்கள் படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நிறையப் பாடங்களைக் கற்பீர்கள்.
வாக்கியத்துக்குக் கதை வடிவம்
மனத்தின் வேலை சொற்களைப் படமாக மாற்றுவது. அந்தப் படமாக்க வேலையில் நிறைய எடிட்டிங் நடக்கும். இல்லாதது சேரும். இருப்பதைப் பெரிதுபடுத்தும். அல்லது சிறிதுபடுத்தும். அல்லது முழுவதுமாக நீக்கிவிடும். ஆனால், மன நிலைக்கு ஏற்ப ஒரு படம் தயாராகும். இப்படிப் படமாவதுதான் பின்னணி இசை சேர்ப்பதுபோல் உணர்வுகளைக் குழைத்து உருவேற்றிக்கொள்ளும். பின்னர் அந்தப் படம் ஒரு நினைவாக நெஞ்சில் நிற்கும். அந்த நினைவு தரும் பாதிப்புகளை உடல் வாங்கிக் கொள்ளும்.
பின் செயல்கள் அதற்கு இசைந்து கொடுக்கும். அதனால் நீங்கள் செய்யும் கற்பனைதான் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துகிறது. அஃபர்மேஷன் எனும் நேர்மறை சுய வாக்கியங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டக்கூடியவை. அதன் வீரியம்கூடிட அந்த வாக்கியத்தை ஒரு கதையாய் மனத்தில் கற்பனை செய்து பாருங்கள். இதற்கு Creative visualization என்று பெயர்.
பொய்கூட நிஜமாகும்
உங்களுக்கு மேடையில் பேசப் பயம் என்றால் உங்கள் பயம் நீங்கள் தடுமாறுவதைப் போன்ற கற்பனையைத்தான் தரும். அதற்குப் பதில், “நான் இயல்பாக ரசித்துப் பேசுகிறேன்!” என்று ஒரு அஃபர்மேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைக் கற்பனை சக்தி மூலம் பலப்படுத்தலாம். உங்கள் கற்பனை கீழ்க்கண்டவாறு இருக்கலாம், “நான் மேடை ஏறும்போது கரகோஷம் கேட்கிறது.
நான் உற்சாகமாக ஏறி மைக்கைப் பிடிக்கிறேன். மக்கள் என்னை ஆர்வத்தோடு எதிர் நோக்குகிறார்கள். நான் மிகவும் இயல்பாகப் பேச்சை ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை தானாக வருகிறது. ஒவ்வொரு சிறப்பான கருத்துக்கும் கை தட்டல் கிடைக்கிறது. எனக்குப் பேசப் பேசத் தெம்பு பிறக்கிறது. கூட்டம் என் கட்டில் இருப்பதை உணர்கிறேன். என் பேச்சாற்றல் எனக்குப் பெருமையை அளிக்கிறது!”
இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்தாலும் பொய்க்கும் நிஜத்துக்கும் பேதம் கிடையாது, மனத்தளவில். அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை அடைந்ததுபோலவே கற்பனை செய்யுங்கள். நீங்கள் அதுவாகவே மாறுவீர்கள். சந்தோஷமாக இல்லையா? சந்தோஷமாக இருப்பதைப் போலக் கற்பனை செய்யுங்கள். நடியுங்கள். நம்புங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனம் மாறியிருக்கும்!
“Fake it till you Make it!” என்று இதைச் சொல்வார்கள். இதன் அடிப்படையில் நம்பிக்கையும் கற்பனையும் கலந்த சுய வாக்கியங்கள் கண்டிப்பாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாட அவர் கையாளும் உத்தி என்ன தெரியுமா? விளையாடப் போகும் முன்னரே, அதாவது 15 நிமிடங்கள் முன்னரே, அவர் ஆட வேண்டிய ஆட்டத்தை மனத்தால் கற்பனை செய்து பார்ப்பாராம். அது ஊக்கத்தையும் கவனக் குவியலையும் தரும்! உங்களை வாட்டும் பிரச்சினைக்கு ஒரு கற்பனை சிகிச்சை செய்து பாருங்களேன்!
கேள்வி: எனக்கு வயது 39. இதுவரை முயன்ற எல்லாத் தொழில்களிலும் தோல்வி அடைந்துவிட்டேன். இப்போது மீண்டும் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என் குழந்தைகளுக்கு முன்னால் தோல்வியாளனாகத் தெரிவது எனக்கு அவமானமாக இருக்கிறது. மீண்டும் வியாபாரம் செய்யத் தயக்கமாக உள்ளது. வாழ்க்கையின் இறுதியிலாவது வெற்றி பெற்ற வியாபாரியாகிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தோல்வி பயம்தான் அதிகமாக உள்ளது. எப்படி இதை மாற்றுவது?
பதில்: நீங்கள் தோல்வியாளர் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி உங்களுக்கு வியாபாரம் செய்யப் பிடிக்கிறதா? வெற்றிபெற முடியாமல் போனதற்கான காரணங்கள் புரிந்தனவா? வேலையோ வியாபாரமோ பயம் உங்கள் முயற்சியைத் தடுக்கும். குழந்தைகளுக்காக, ஊருக்காக வாழாமல், உங்கள் ஆர்வத்துக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிறந்தது எது என்பதை ஆலோசித்து அதைச் செய்யுங்கள். தொழில்முறை ஆலோசனையும் உங்களுக்கு உதவலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மனிதவளப் பயிற்றுநர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT