Published : 23 Jul 2019 10:14 AM
Last Updated : 23 Jul 2019 10:14 AM
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
ஒருவரைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி அவர் உணர்ச்சி வசப்படும்போது அவரைக் கவனிப்பதுதான். இதுவும் ஓர் இயற்பியல் ஆய்வு போலத்தான். ஓர் உலோகத்தின் தன்மையை அறிய என்ன செய்ய வேண்டும்? அதை உடைத்துப் பார்க்க வேண்டும். அமிலத்தில் கரைத்துப் பார்க்க வேண்டும்.
தீயில் சுட்டுப் பார்க்க வேண்டும். மொத்தத்தில் அதன் இயல்பு நிலையை மாற்றியமைக்கும் போதுதான் அதன் தன்மை தெரியும். எவ்வளவு வளையும், எந்த வெப்பத்தில் உருகும், எப்படி உருமாறும் என்றெல்லாம் கணிக்க முடியும். இதே விதி மனிதர்களுக்கும் பொருந்தும். அமைதியான சூழலில், நிதானமான உணர்வில், யாவும் நன்கு நடைபெற்றுக்கொண்டி ருக்கும்போது அனைவரும் கிட்டத்தட்ட நன்றாகத்தான் தென்படுவார்கள்.
ஆனால், ஒரு சிக்கல் வந்து உணர்ச்சி வசப்படும் போதுதான் மூடிக்கிடந்த அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்துவார்கள். விமான நிலையத்தில் இதை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. உள்ளே நுழையும்போது கனவான்கள் அனைவரும் ஒன்று போலத்தான் தெரிவார்கள். விமானம் தாமதம் என்றதும் அவர்கள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்படும்.
சிக்கல் ஒன்றுதானே!
“நான் யார் தெரியுமா, கூப்பிடு உன் மேலதிகாரியை!” என்று அதிகாரம் காட்டுவார் ஒருவர். “நம்ம நாடு உருப்படவே உருப்படாது” என்று நமட்டுச் சிரிப்பு சிரிப்பார் இன்னொருவர். “யூ நோ ஏர்லைன்ஸ் இஸ் எ ப்ளீடிங் இண்டஸ்ட்ரி…” என்று விரிவுரை ஆற்றத் தொடங்கும் ஒரு புறம். “நம்ம ராசி அப்படி சார். கனெக்டிங் ஃபிளைட் பிடிச்ச மாதிரித்தான்” என்று நொந்துகொண்டு சிரிக்கும் ஒன்று. தகவல் தெரிந்தவுடனே எதுவும் பேசாமல் ஓரமாய்ப் போய்ப் படுத்து உறங்குவார் ஒருவர். அடுத்த செய்தி வரும்வரை இருப்புக் கொள்ளாமல் பிரசவ அறைக்கு வெளியே உள்ளது போலக் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டே இருப்பார் ஒருவர்.
இங்கே சிக்கல் ஒன்றுதான். அதற்குக் கோபம், பயம், கழிவிரக்கம், நக்கல், சோர்வு என அவரவர் மனநிலைக்கு ஏற்ப நடந்துகொள்கிறார்கள். மனோத்திடம் அதிகம் தேவை யான பணிக்குரிய நேர்முகத் தேர்வில் கண்டிப்பாக மன உளைச்சலைத் தூண்டும் கேள்விகளைக் கேட்பார்கள். Stress interview என்றே இதைச் சொல்வதுண்டு. எவ்வளவு மறைத்தாலும் உடல் மொழியும் பதில்களும் ஒருவரின் மனஉறுதியை அல்லது உறுதியின்மையைக் காட்டிக் கொடுத்துவிடும். என்னைப் பொறுத்தவரை வாழ்வின் ஒவ்வொரு சிக்கலையும் ஒரு stress interview என்று நினைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு சிக்கலின்போது நம் உடலும் மனமும் எப்படி நடந்துகொள்கின்றன என்று கவனிக்க முடியும்.
நேர்முகத் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நமக்கு எல்லா ஞானோதயமும் வரும். “அந்த டென் ஷன்ல வார்த்தை வரல. கொஞ்சம் சொதப்பிட்டேன். அப்புறம் சமாளிச்சு பதில் சொன்னேன். ஏன் அவ்வளவு டென்ஷன்னு இப்ப புரியலை!”
உடலை உற்றுநோக்குங்கள் மனக்கிளர்ச்சியை உருவாக்கும் எல்லாச் சம்பவங்களிலும் உடல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாற்றங் களைத்தான் செய்கிறது. நபருக்கு நபர் இது மாறும். ஒருவருக்கு அதிகமாகத் தலைவலி, சிலருக்கு வயிறு குழையும். சிலருக்கு மார்பு படபடக்கும்- இப்படி உடலில் எந்த இயக்கம் பாதிக்கப்படும் என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் மனக்கிளர்ச்சியின்போது உடல் மாற்றங்களில் ஒரு பொதுத் தன்மை உண்டு. இதை அறிந்தாலே நாளைக்கு உங்களுக்கு வரவிருக்கும் நோய்களைக் கண்டறியலாம். ஆனால், நம் பிரச்சினை என்னவென்றால் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்து கிறோம். அல்லது அமுக்கி வைக்க நினைக்கிறோம். இந்த வலி சொல்லும் செய்தி என்ன என்று யோசிக்காமல், எதைத் தின்று ‘நிவாரணம்’ கிடைக்கும் என்று ஓடுகிறோம். உடல் கிளர்ச்சி, மனக் கிளர்ச்சியின் தொடர்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். உடலை ஒரு உயிரில்லா ஜடப்பொருள் போலப் பகுதி பகுதியாய்ப் பிரித்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். மனப் பிரச்சினைக்கும் உடலில் காரணிகள் தேடுவதைப் போல, உடல் பிரச்சினைகளுக்கு மனதில் காரணிகள் தேடுவதில்லை நம் மருத்துவர்கள்.
உங்களுக்கு வர வாய்ப்பிருக்கும் வியாதிகள் பற்றித் தெரிய வேண்டுமா? ஒரு வேலை செய்யுங்கள். பதற்றம் அடையும்போதெல்லாம் உடலில் எந்தெந்த மாறுதல்கள் ஏற்படுகின்றன என்று கூர்ந்து கவனித்துக் குறித்து வையுங்கள். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, பரவாயில்லை. உங்கள் உடலை உற்று நோக்குங்கள். உங்கள் உணர்வுகளை உங்களுக்குப் புரிய வைக்கும் ஆசான் உங்கள் உடல்.
கேள்வி: எவ்வளவு பொருள் வாங்கினாலும் திருப்தியாக இல்லை. சதா ஷாப்பிங் செல்வதும் செலவு செய்வதும் போதைபோலத் தோன்றுகிறது. எனக்குப் பெரிய சம்பளமும் இல்லை. எதை வாங்க வேண்டும், எதை வாங்க வேண்டாம் என்றும் புரிவதில்லை. எந்தப் பொருள் வசதியும் இல்லாத என் பெற்றோர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். மால்களுக்குச் செல்வது ஒரு விதமான நோயா? பதில்: உங்கள் கேள்வியிலேயே எல்லாப் பதில்களும் உள்ளன. உங்களுக்கு உள்ளே காலியாக இருப்பதை உணர்ந்துதான் பொருட்களாய் வாங்கி நிரப்புகிறீர்கள். அந்த வெற்றிடத்தைக் கவனியுங்கள். இதுவும் போதைபோலத் தான். வாங்கியதைப் பயன்படுத்துவதைவிட அடுத்ததை வாங்கத்தான் மனம் விரும்பும். தேவையில்லாத பொருட்களை வாங்க வைக்கத்தான் ஒரு பெரும் வணிகக் கலாச்சாரம் இங்கு உருவாகியுள்ளது. திருப்தியை விலை கொடுத்து வாங்க முடியாது. திருப்தி அடைந்தால் எதையும் விலை கொடுத்து வாங்கவும் அவசியம் இருக்காது. திருப்தி அடையப் பல உன்னத வழிகள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள்! |
- கட்டுரையாளர்,
மனிதவளப் பயிற்றுநர்
‘மனசு போல வாழ்க்கை-2.0’
பகுதியில் நீங்கள் எதிர்கொண்டு வரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்
டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி,
தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை,
சென்னை-600 002.
மின்னஞ்சல்:
vetrikodi@thehindutamil.co.in
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT