Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM

சச்சின் தலைமையிலான அணியில் பிரெட் லீ

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் அணியில் பிரெட் லீ விளையாட இருக்கிறார்.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் அணிக்கும், ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணிக்கும் இடையே ஜூலை 5-ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் மெல்போர்ன் அணிக்கு சச்சின் தலைமை வகிக்கிறார். ரெஸ்ட் ஆப் தி வெர்ல்ட் அணிக்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தலைமை வகிக்கிறார். இதில் இரு அணிகளிலும் பிரபல முன்னாள், இன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

இப்போட்டியில் விளையாடுவதை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன், இங்கிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இதில் பிரெட் லீ சச்சின் தலைமையிலான அணியிலும், முத்தையா முரளீதரன், பீட்டர்சன் ஆகியோர் வார்னே தலைமையிலான அணியிலும் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட், இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக உள்ள பால் கோலிங்வுட் ஆகியோரும் சச்சினின் அணியில் விளையாட இருக்கின்றனர்.

இப்போட்டியில் பங்கேற்பது குறித்து பிரெட் லீ கூறியுள்ளது: மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் எனக்கு வாழ்நாள் உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது. மேலும் இப்போது மெல்போர்ன் அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் 200–வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நீண்டகாலத்துக்குப் பின் சமகால வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் விளையாடுபவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இப்போட்டி மிகவும் இனிய அனுபவமாக இருக்கும் என்றார். முத்தையா முரளீதரன், கெவின் பீட்டர்சன் ஆகியோரும் இப்போட்டியில் விளையாடுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x