Published : 02 Feb 2023 06:52 AM
Last Updated : 02 Feb 2023 06:52 AM
ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான கால் இறுதி போட்டியில் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஆந்திரா அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி, இடதுகையால் பேட் செய்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேசம் – ஆந்திரா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிக்கி புயி 149, கரண் ஷிண்டே 110 ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்தின் தொடக்க நாளில் ஹனுமா விஹாரி பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. இதனால் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஹனுமா விஹாரி: இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஹனுமா விகாரி மீண்டும் பேட் செய்ய வந்தார். வலது கை பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்ஸ்மேனாக மாறினார். கிட்டத்தட்ட ஒரு கையால் மட்டையை பிடித்தபடி விளையாடி இரு பவுண்டரிகளை அடித்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ஹனுமா விஹாரி இறுதியாக சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு அவர், 26 ரன்கள் சேர்த்தார்.
மீண்டும் ஒருமுறை...: ஹனுமா விஹாரியின் துணிச்சலான முயற்சி, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் அவர் காட்டிய வீரத்தை நினைவுபடுத்தியது. அந்த ஆட்டத்தில் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையிலும் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இணைந்து விஹாரி, நான்குமணி நேரத்திற்கும் மேலாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கடுமையாக போராடி எதிரணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டதுடன் ஆட்டத்தை டிரா செய்ய உதவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT