Published : 19 Dec 2022 03:02 PM
Last Updated : 19 Dec 2022 03:02 PM
கத்தாரில் நடைபெற்ற நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடர் இதுவரையிலான இந்த தொடரின் வரலாற்றிலேயே மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்ட உலகக் கோப்பை என்றும், அதுவும் பிரான்ஸ் - அர்ஜென்டினா மோதிய இறுதிப் போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலேயே ஆல் டைம் கிரேட் என்றும் பரவலாக உற்சாகத்தின் உச்சியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸ் நகரத் தெருக்களில் கூச்சலும் கொண்டாட்டங்களும் கொடிகளும் பறந்தன.
அர்ஜென்டினாவின் மதுபான விடுதிகளில் கியூவில் நின்றபடி மக்கள் மதுக்கோப்பையும் கையுமாக போட்டியை பதற்றத்துடன், உற்சாகத்துடன் ரசித்தது வைரலாகி வருகிறது. அதுவும் மெஸ்ஸி பெனால்டியில் முதல் கோலை அடித்தபோதும், பிறகு ஏஞ்சல் டி மரியா 36-வது நிமிடத்தில் அபார கோலை அடித்தவுடனும் மதுபான விடுதிகளில் டேபிளைத் தட்டும் ஓசையும், உற்சாக அலறல்களும், சந்தோஷ வீறிடல்களும் தொலைக்காட்சியின் வர்ணனை காதில் விழாத அளவுக்கு பேச்சுகளும் நிரம்பி வழிந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சான் டெம்லோ மாவட்டத்தில் உள்ள லா புயெர்ட்டா ரொஜா என்ற மதுபான விடுதியில் போட்டி தொடங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்னதாகவே கூட்டம் சேர தொடங்கி கியூவில் மக்கள் வரிசையாக பாரில் நுழையக் காத்திருந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் அங்குள்ள நிலைமைகளை விவரித்துள்ளன.
ஆனால், இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தங்கள் அணி முன்னிலை பெற்ற காரணத்தால் கொண்டாட்ட குதூகல மனோபாவத்தில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள், பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அடித்த 2 கோல்களினால் ஹிஸ்ட்ரியா பாதிக்கப்பட்டவர்கள் போன்ற மனநிலைக்கு மாறி இருந்ததாக ஓர் அர்ஜென்டின ஊடகம் தெரிவித்துள்ளது. அதுவும் கடைசி கோலையும் பிரான்ஸ் அடித்து 3-3 என்று சமன் செய்த போது வெளிர் நீல ஸ்ட்ரைப் அர்ஜென்டின சட்டைக்காரர்கள் பதற்றத்தின் உச்சிக்கே சென்றதாகவும் சிலர், இனி இதைப் பார்த்தால் ஹார்ட் அட்டாக்தான் வரும் என்று விடுதியை விட்டு வெளியேறியதாகவும் தெரிகிறது.
அர்ஜென்டின அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் பெனால்டி ஷூட் அவுட்டில் 2 பிரான்ஸ் கிக்குகளை பிரமாதமாக தடுக்க, அர்ஜென்டினாவின் தெருக்களில் கொண்டாட்டம் உச்சத்திற்குச் சென்று விட்டது. தெரு முழுவதும் அர்ஜென்டினா ரசிகர்கள் தேசிய விழா போல் வெற்றியைக் கொண்டாடி ‘இதுதான் எங்கள் சொர்க்கம்’, ‘அர்ஜென்டினா மிகப்பெரிய நாடு’, ‘நாம் தான் உலகின் பெரிய நாடு’ என்றெல்லாம் கோஷமிட்டதாக ஊடகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
கோப்பையை மெஸ்ஸி தூக்கியவுடன் அர்ஜென்டின தெருக்களில் இசையும், பாட்டுக் கச்சேரிகளும், இசைக் கருவிகளின் சப்தாவேசமும் ஒரு பெரிய தேசியத் திருவிழாவாக இந்த வெற்றியை மாற்றி விட்டது.
இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றேயாக வேண்டும் என்ற ஒரு அர்ஜென்டின தேசிய மனநிலை உருவாகி வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது. இதற்குப் பல காரணிகள் உள்ளன. நாடு ஒரு பொருளாதார பின்னடைவிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் நேரம், பண நெருக்கடி மிக்க காலம், பணவீக்க விகிதம் ஏறிக்கொண்டே சென்று கிட்டத்தட்ட 100% என்று கூறுகிறது அங்கிருந்து வரும் பொருளாதார வல்லுநர்களின் தரவுகள்.
அதேபோல் உலகையே புரட்டிப் போட்ட கரோனா வைரஸால் உருவான லாக் டவுனில் அதிக நாட்கள் ஊரடங்கு இருந்த ஒரே நாடு அர்ஜென்டினாதான். கடந்த வாரத்தில்தான் அர்ஜென்டினாவின் முன்னாள் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். இது மக்களிடையே வேறுபாடுகளை, பிரிவினைகளை அங்கு ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றி அங்கு அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு மகிழ்ச்சி நிரம்பிய கொண்டாட்டமாக்கியுள்ளது.
இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக தற்போதைய அர்ஜென்டின அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், பிரான்ஸ் அதிபரை டேக் செய்து பதிந்த ட்வீட்டில், “எனதருமை நண்பர் மேக்ரான், உங்கள் மேல் நான் அதிக பாசமும் நேசமும் வைத்திருக்கிறேன். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். ஆனால் ஞாயிறன்று நடக்கும் இறுதிப் போட்டி நீங்கலாக. அர்ஜென்டினா ஒரு பிரமாதமான நாடு. இது லத்தீன் அமெரிக்கா!” என்று ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
Unbelievable, joyous and emotional celebrations in Buenos Aires. Just look what Argentina's World Cup win means.
— Ben Jacobs (@JacobsBen) December 18, 2022
via IG/alepetra_ pic.twitter.com/5oek57Ux45
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT