Published : 21 Sep 2022 05:49 PM
Last Updated : 21 Sep 2022 05:49 PM
துபாய்: வரும் 2023 வாக்கில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை உறுதி செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ஓவல் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். இதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள 9 டெஸ்ட் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு இந்தத் தொடர் நடத்தப்படும். ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் 3 தொடர்கள் சொந்த நாட்டிலும், 3 தொடர்கள் வெளிநாடுகளிலும் நடக்கும்.
லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019-21 காலகட்டத்தில் நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. அதில் நியூஸிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், 2021-23 தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அதனை ஓவலுக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஐசிசி. அதே நேரத்தில் வரும் 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியா இந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்திய அணி இதுவரை நான்கு தொடர்களை விளையாடி முடித்துள்ளது. இதில் இரண்டு உள்நாடு மற்றும் இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் அடங்கும். அதில் 2 தொடர்களை இந்தியா வென்றுள்ளது. 1 தொடர் தோல்வியிலும், 1 தொடர் சமனிலும் முடிந்துள்ளது.
மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் 2 போட்டிகளை சமனிலும் இந்தியா நிறைவு செய்துள்ளது. 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ளன. 2 போட்டிகள் வங்கதேசம் மற்றும் 4 போட்டிகள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் அடங்கும்.
இந்த 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அமையும் என சொல்லப்படுகிறது. அது கூட மற்ற அணிகளின் செயல்பாடுகளை பொறுத்தே உள்ளது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
ANNOUNCEMENT
— ICC (@ICC) September 21, 2022
The venues for the #WTC23 and #WTC25 finals are now confirmed!
Details https://t.co/QFjUnuIw3m
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT