Published : 17 Sep 2022 06:08 PM
Last Updated : 17 Sep 2022 06:08 PM
'Impact Player' எனும் புதிய விதிமுறையை உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஐபிஎல் களத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்தப் புதிய விதி டி20 கிரிக்கெட்டில் புதிய வகையிலான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இது குறித்து அண்மையில் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேசி இருந்தார்.
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து உள்ளூர் அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் இந்த விதி அமலுக்கு வரும் என தெரிகிறது. ஐபிஎல் அரங்கிலும் வரும் சீசன் முதல் இது அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்த விதி குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
தற்போதுள்ள விதி: ஒரு அணிக்கு 11 வீரர்கள் வீதம் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது. டாஸ் வீசும் போது இந்த 11 வீரர்கள் குறித்த விவரத்தை அந்தப் போட்டியில் விளையாடும் அணிகள் வெளியிடும். இந்த 11 வீரர்கள் பேட் செய்யவும், பந்து வீசவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த 11 வீரர்களில் ஃபீல்டிங் செய்யும் போது மட்டும் ஓய்வு வேண்டும் என்றால் சப்ஸ்டிடியூட் வீரர்களை ஃபீல்ட் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது உள்ள விதி இதுதான்.
புதிய விதி: பிசிசிஐ தற்போதுள்ள விதியில் தான் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது டாஸின் போது அறிவிக்கப்படும் 11 வீரர்கள் பட்டியல் உடன் நான்கு சப்ஸ்டிடியூட் வீரர்களின் பெயரையும் அணிகள் அறிவிக்க வேண்டும். அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை அணிகள் இம்பாக்ட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகள் இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல். அதன் போது ஆடும் லெவனில் உள்ள ஒரு வீரரை விடுவித்து, அவருக்கு மாற்றாக இம்பாக்ட் வீரரை சேர்க்க வேண்டும்.
இது குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் பிசிசிஐ அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி கிரிக்கெட் உலகிற்கு புதிது கிடையாது. பல்வேறு பெயர்களில் லீக் தொடர்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சர்வதேச களத்தில் இந்த விதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.
பிக்பேஷ் லீக், நேற்று இந்தியாவில் தொடங்கிய லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போன்ற லீக் தொடர்களில் வெவ்வேறு பெயர்களில் இந்த விதி பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது டி20 கிரிக்கெட்டில் பார்வையாளர்கள், ஆடும் வீரர்கள் என எல்லோர் மத்தியிலும் சுவாரசியத்தை கூட்டும் என தெரிகிறது.
இதன் மூலம் அணிகள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை பெற முடியும். கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டில் சப்ஸ்டிடியூட் வீரர்களை களம் இறக்கி விளையாட செய்வார்கள் அல்லவா அது போன்றதொரு விதி இது. அதன் பெயருக்கு ஏற்ற வகையில் ஆட்டத்திலும் தாக்கம் இருக்கும்.
UPDATE: Ravindra Jadeja was hit on the helmet in the final over of the first innings of the first T20I.
— BCCI (@BCCI) December 4, 2020
Yuzvendra Chahal will take the field in the 2nd innings as a concussion substitute. Jadeja is currently being assessed by the BCCI Medical Team. #TeamIndia #AUSvIND pic.twitter.com/tdzZrHpA1H
12 வீரர்களுடன் விளையாடியுள்ள இந்தியா!
கடந்த 2020 டிசம்பர் வாக்கில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட் செய்து 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருப்பார். அந்த இன்னிங்ஸில் ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கி இருக்கும். அதில் நிலைகுலைந்து ஜடேஜா களத்தில் சரிந்து விழுந்திருப்பார். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு மாற்றாக சஹால் அணியில் விளையாடி இருப்பார். அதனை கன்கஷன் சப்ஸ்டிடியூட் என சொல்லி இருந்தனர். அந்த போட்டியில் சஹால், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பார். அவர்கள் இருவரும் இந்திய அணி வெற்றி பெற உதவி இருப்பார்கள். கிட்டத்தட்ட அது போன்றதொரு நகர்வு தான் இதுவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT