Published : 21 Jun 2014 10:15 AM
Last Updated : 21 Jun 2014 10:15 AM

சர்வதேச அலை சறுக்குப் போட்டியில் சென்னை மீனவர்கள் பங்கேற்பு: இந்திய வீரர்கள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை

சென்னை கோவளத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இந்தோனேஷியாவில் நடைபெறும் சர்வதேச அலை சறுக்கு (சர்பிங்) போட்டியில் கலந்துகொள்கின்றனர். இந்தியர் கள் சர்வதேச போட்டியில் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

அலை சறுக்கு - பணம் படைத்தவர்களின் விளையாட்டு என்ற கருத்து நிலவுவதால், இந்தியாவில் இந்த விளையாட்டு அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால், கடலோடு நெருங்கி உறவாடும் கோவளத்தை சேர்ந்த மீனவர்கள் அலை சறுக்கை திறமையாக விளையாட முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு, கோவளத்தில் நடைபெற்ற தேசிய அலை சறுக்குப் போட்டியிலும் அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அந்த போட்டியை சிறப்பிக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கலந்து கொண்டார்.

‘ஏசியன் சர்பிங் சாம்பியன்ஷிப்’ என்ற அமைப்பு இந்தோனேஷி யாவின் பாலி நகரத்தில் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் இந்த போட்டியை நடத்துகிறது. இதில் இந்தோனேஷியா, ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அலை சறுக்கு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பாக கோவளத்தைச் சேர்ந்த விஜயகுமார் விக்னேஷ், மேகவன் மூர்த்தி மற்றும் பக்கிரி வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மேகவன் மூர்த்தி கோவளத்தில் அலை சறுக்கு விளையாட்டை, குறிப்பாக மீனவ குடும்ப இளைஞர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக, ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். இதற்கான நிதியை டி.டி.லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது மீனவர்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் இந்த நிறுவனமே ஸ்பான்சர் செய்கிறது.

அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் வாசு கூறுகையில், “இந்தியர்கள் சர்வதேச அலை சறுக்குப் போட்டியில் பங்கேற்பது இதுதான் முதல்முறை.

இதன் மூலம், அலை சறுக்கு என்ற விளையாட்டை பிரபலப்படுத்துவது மட்டுமல்லா மல், அதை ஒரு மாற்று வாழ்வாதாரமாகவும் மீனவர்கள் எடுத்துக் கொள்ள முடியும்.

மூர்த்தி கோவளத்தில் நடத்தும் பள்ளியில் 60 மாணவர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பள்ளியிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, கோவளம் கிராமத்தின் கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x