Published : 12 Jun 2014 12:42 PM
Last Updated : 12 Jun 2014 12:42 PM

உலகக் கோப்பை கால்பந்து: சிறப்புத் துளிகள்

முதல் ஆட்டத்தில் பிரேசில்-குரேஷியா மோதல்

சாவோ பாவ்லோவில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பிரேசிலும், குரேஷியாவும் மோதுகின்றன.

சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கும் பிரேசில் அணி, குரேஷியாவை வீழ்த்தி வெற்றியோடு போட்டியை தொடங்குவதில் தீவிரமாக உள்ளது. சர்வதேச தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் குரேஷியா, சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பிரேசிலுடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

பிரேசில் அணி எவ்வித சிரமமுமின்றி எளிதாக வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரேசில் அணிக்கு முன்கள வீரர்கள் நெய்மர், பிரெட், மிட்பீல்டர்கள் ஆஸ்கர், வில்லியன், கேப்டன் தியாகோ சில்வா ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ் கின்றனர். குரேஷிய அணியைப் பொறுத்த வரையில் லூகா மோட்ரிக், இவான் மோசினிச் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

போட்டி நேரம்: அதிகாலை 1.30

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்



சாதனையை நோக்கி மிராஸ்லாவ் க்ளோஸ்

ஜெர்மனியின் ஸ்டிரைக்கர் மிரோஸ்லாவ் க்ளோஸ் இதுவரை 2002, 2006, 2010 ஆகிய 3 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 14 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் பிரேசிலின் ரொனால்டோவுக்கு (15 கோல்கள்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் மிராோஸ்லாவ் க்ளோஸ், இந்த உலகக் கோப்பையோடு விடைபெறவுள்ளார். கடைசி உலகக் கோப்பையில் விளையாடும் 36 வயது க்ளோஸ் இரு கோல்களை அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.3,400 கோடி பரிசுத் தொகை

உலகக் கோப்பை போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3,400 கோடியாகும். சாம்பியனாகும் அணிக்கு ரூ.207 கோடியும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.148 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.

பிரேசிலின் கனவு நனவாகுமா?

பிரேசில் இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்றுவிட்டாலும், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியன் ஆனதில்லை. இதற்கு முன்னர் 1950-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்திய பிரேசில், அதில் இறுதிச்சுற்று வரை முன்னேறி உருகுவேயிடம் தோல்வி கண்டது. எனவே சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லாத குறையை இந்த முறை தீர்த்துவிட வேண்டும் என்பதில் பிரேசில் அணி தீவிரமாக உள்ளது.

சென்னையில் மாதிரி உலகக் கோப்பை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அதேபோன்று மாதிரி உலகக் கோப்பை போட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பச்சையப்பாஸ் ஹாரிங்டன் கால்பந்து அகாடமி மற்றும் சென்னை கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் உலகக் கோப்பை போட்டியின் சின்னத்தைக் குறிக்கும் வகையிலான 15 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரேசில்-குரேஷியா என பெயர் சூட்டப்பட்ட இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. பிரேசில் அணிக்காக பச்சையப்பாஸ் அகாடமி வீரர்கள் ஆடுகின்றனர். இந்த அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டனாக உள்ளார். குரேஷிய அணிக்காக ஊடக அணியினர் ஆடுகிறார்கள். இதுதவிர உலகக் கோப்பையைக் குறிக்கும் வகையில் 4 அஞ்சல் தலைகள் வெளியிடப்படுவதோடு, பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கௌரவிக்கப்படுகிறார்கள்.



இதுவரை சாம்பியன்கள்:

1930: உருகுவே

1934: இத்தாலி

1938: இத்தாலி

1950: உருகுவே

1954: மேற்கு ஜெர்மனி

1958: பிரேசில்

1962: பிரேசில்

1966: இங்கிலாந்து

1970: பிரேசில்

1974: மேற்கு ஜெர்மனி

1978: அர்ஜென்டீனா

1982: இத்தாலி

1986: அர்ஜென்டீனா

1990: மேற்கு ஜெர்மனி

1994: பிரேசில்

1998: பிரான்ஸ்

2002: பிரேசில்

2006: இத்தாலி

2010: ஸ்பெயின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x