Published : 16 Mar 2022 04:59 PM
Last Updated : 16 Mar 2022 04:59 PM

கள வீரர் டு வர்ணனையாளர் - 2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை விடுவித்த நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் அவரின் பங்களிப்பு வேறு விதத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த முக்கியமான வீரர் சுரேஷ் ரெய்னா. சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் அவரை எடுக்க முன்வரவில்லை. ஐபிஎல் லீக்கில் 5,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஆறு வீரர்களில் ஒருவர், 205 ஐபிஎல் போட்டிகளில் 5,528 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையால், 'மிஸ்டர் ஐபிஎல்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவந்த ரெய்னா ஏலம் போகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஃபார்மில் இல்லை என்பதால்தான் எந்த அணி நிர்வாகமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இதனால், ஐபிஎல் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்றுவந்த ரெய்னா, முதல்முறையாக அந்தத் தொடரை மிஸ் செய்ய இருந்தார். ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் வேறுவிதமாக தனது பங்களிப்பை செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக ரெய்னா பணிபுரியலாம் எனத் தெரிகிறது. வர்ணனையாளராக ரெய்னாவை தொடர போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அணுகியதாகவும், அதற்கு ரெய்னா சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரெய்னா உடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியும் மீண்டும் வர்ணனையாளராக திரும்பலாம் எனத் தெரிகிறது. அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து வர்ணனை பணியை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்தி மொழிக்கான வர்ணனையாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x