Published : 09 Jun 2014 02:29 PM
Last Updated : 09 Jun 2014 02:29 PM
இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டது தனக்கு உண்மையில் நிம்மதியை அளிக்கிறது என்றும், இங்கிலாந்து வீரர்கள் அறை மகிழ்ச்சி தரும் இடமல்ல என்றும் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள பத்தியில் இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
நான் இல்லாமல் இங்கிலாந்து அணி வரும் வியாழக்கிழமை டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது குறித்து எனக்கு கோபமோ, வருத்தமோ, எதிர்மறை எண்ணங்களோ எதுவும் இல்லை. நான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
14 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆஃப் ஸ்பின்னராக, என் வாழ்க்கை எங்கு செல்லும் என்று தெரியாமல் இருந்தேன். இங்கிலாந்துக்குச் செல்லலாம் என்று எண்ணினேன் ஆனாலும் எனது முயற்சியில் நான் வெற்றி அடைவேனா என்பது சந்தேகமாகவே இருந்தது.
இப்போது நான் 104 போட்டிகளில் ஆடியுள்ளேன், உலகின் அனைத்து மைதானங்களிலும் ஆடியது என் அதிர்ஷ்டம் என்று கூறவேண்டும். இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவேனா என்றால் நிச்சயம் ஆடுவேன், ஆனால் வியாழக்கிழமை இங்கிலாந்து அணி இறங்கும்போது நான் இல்லையே என்று நினைத்தால் பொறாமையும், எதிர்மறை எண்ணங்களுமே தலைதூக்கும்.
இங்கிலாந்து அணி என்னை நீக்கியதிலிருந்து என் மனம் வெகுதூரம் கடந்து வந்து விட்டது. 13,500 ரன்கள் அடித்திருக்கிறேன், இதற்கு மேல் ஆசைப்படுவது பேராசையே, ஆகவே நான் எனக்கு கொடுக்கப்பட்டதுடன் ஒத்துப்போக விரும்புகிறேன்.
ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து வீரர்கள் அறை மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் தோற்றுக் கொண்டிருந்தோம் என் பார்வையில் ஓய்வறை நாராசமாக இருந்தது. இதை நான் மட்டும் கூறவில்லை ஆஷஸ் தொல்விக்கு பிறகு மனம் திறந்து இதையே அணியின் சில நண்பர்களும் தெரிவித்தனர்.
நாங்கள் வந்தவுடனேயே ஆஸ்திரேலிய ஊடகங்கள் எங்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டியது. அது வேடிக்கைதான், ஆனால் மற்ற வீரர்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை.
மிட்செல் ஜான்சன் பொறிபறக்க வீசினார், மைக்கேல் கிளார்க் அவரை திறமையாகப் பயனபடுத்தினார். கிளார்க் ஒரு புத்திசாலியான சிறந்த கேப்டன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எதிர்கொண்டதில் மிட்செல் ஜான்சன் தான் மிகவும் ஆக்ரோஷமாக பவுலர் என்று கருதுகிறேன். தொடர் முடிந்தவுடன் நாங்கள் இருவரும் பியர் அருந்தியபோது இதை அவரிடமே தெரிவித்தேன்.
அதன் பிறகு ஆண்டி பிளவர் நான் அணியில் இருப்பதை விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன். அவர் நானா இல்லை பீட்டர்சனா என்ற ரீதியில் கேட்டதாக செய்தித்தாள்களில் வந்தது. அவர் அதை பிறகு மறுத்தாலும் ஏற்கனவே சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது.
தொடரை 5-0 என்று இழந்த அன்று இரவு நாங்கள் அனைவரும் மது அருந்தினோம். ஆகவே வீரர்களிடையே எனக்கு பிரச்சனை இல்லை.
ஆஷஸ் தொடரில் எனது சொந்த பேட்டிங் பற்றிக் கூறவேண்டுமெனில் நான் என் பாணியில் ஆடுவேன், இயல்பூக்கம் செலுத்தும் வழியில் நான் ஆடுவேன், இனியும் அப்படித்தான் ஆடுவேன். இந்தத் தொடரில் நான் அவுட் ஆன பந்துகளை நான் இனிமேல் எதிர்கொண்டாலும் அதனை அடித்து நொறுக்கவே விரும்புவேன்.
பெர்த் டெஸ்ட் போட்டியில் நான் அவுட் ஆன விதமே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நேதன் லயன் பந்தை இரண்டாவது சிக்ஸ் அடிக்கச் சென்று லாங் ஆனில் கேட்ச் அவுட் ஆனேன். ஆனால் அதே பநதை இப்போது ஆடினாலும் சிக்ஸ் அடிக்கவே செல்வேன். அவர் பிளைட் செய்தவுடனேயே ஒரு ஆறு உண்டு என்றே எண்ணினேன். மக்கள் அதனை பொறுப்பற்ற ஆட்டம் என்று கூறுவார்கள். ஆனால் அதில்தான் நான் வெற்றி கண்டுள்ளேன்.
2005 ஆஷஸ் தொடரில் 158 ரன்கள் அடித்த போது பிரெட் லீ-யின் 95 மைல்கள் வேகப்பந்தை மிட்விக்கெட் ஸ்டாண்டிற்குத் தூக்கி அடித்தேன். அதே ஷாட் மேலே ஏறி கேட்ச் கூட ஆகியிருக்கலாம். ஆனால் நான் ஆடும் விதம் அப்படித்தான்.
மும்பையில் 2012ஆம் ஆண்டு 186 ரன்கள் எடுத்தபோது அயல்நாட்டு வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ் என்று கூறப்பட்டது.
நான் இன்னும் கொஞ்சம் தடுத்தாடி எனது கிரிக்கெட் கரியரை நீட்டியிருக்கலாம். என்னை அது இன்னும் சிறந்த வீரராக மாற்றியிருக்குமோ? இல்லை. நான் ரிஸ்க் எடுக்கும் ஒரு பேட்ஸ்மென் மட்டுமல்ல, வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதே எனக்குப் பிடிக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT