Published : 27 Jun 2014 03:44 PM
Last Updated : 27 Jun 2014 03:44 PM

முழங்கையில் அடிவாங்கி வெளியேறிய தவான் நலமாக இருப்பதாக தகவல்

லீசெஸ்டர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் நேற்று துவக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்தே வெளியேறியுள்ளார்.

100 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் முழங்கையில் காயமடைந்து பெவிலியன் சென்றார். ஆனால் அவருக்கு பெரிதாக காயம் ஏதும் ஏற்பட்டு விடவில்லை நலமாக இருப்பதாக இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உணவு இடைவேளையின் போது இந்தியா 106/1 என்று இருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அடிஃப் ஷெய்க், இவர் ஒரேயொரு முதல்தரப் போட்டியில் விளையாடியவர் என்றாலும் அதில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். இவர் தவானின் விலாவுக்கு ஒரு பந்தை எழுப்ப முயன்றார்.

அதிர்ச்சியடைந்த தவான் பந்தை ஆடாமல் ஒதுங்கினார், ஆனால் ஒதுங்கினாலும் பந்து விடாமல் அவரைத் துரத்தி வலது முழங்கையை லேசாகப் பதம் பார்த்தது. பிறகு, கடும் வலி ஏற்பட அவர் பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணி நிர்வாகம் பிறகு தவான் காயம் கவலைப்படும் அளவுக்கு இல்லை, அவர் நலமாக உள்ளார் என்று தெளிவு படுத்தியது.

2வது நாள் ஆட்டம் மழை காரணமாக இன்னும் தொடங்கவில்லை. இந்தியா 333/4. ரஹானே 47, ரோகித் சர்மா 43 நாட் அவுட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x