Published : 19 Jun 2014 08:57 PM
Last Updated : 19 Jun 2014 08:57 PM
டாக்காவில் நடைபெற்ற இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பின்னி தேர்வு செய்யப்பட்டார்.
டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்தியா 34.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
இன்று மீண்டும் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பியது. மோர்டசா, அல் அமின் ஹுசைன் மற்றும் இளம் புயல் தஸ்கின் அகமட் ஆகியோர் இந்திய பேட்ஸ்மென்களுக்கு அதிக தொல்லைகளைக் கொடுத்தனர். ராபின் உத்தப்பா 5 ரன் எடுத்து மோர்டசாவின் மிகவும் வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அல் அமின் ஹுசைன், ரஹானேயிற்கு இங்கிலாந்தில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறிவுறுத்தும் விதமாக வீசினார். ஒரே ஓவரில் தொடர்ந்து 4 முறை பந்து அவரது மட்டையைக் கடந்து சென்றது. கடுமையாகத் தடுமாறினார் ரஹானே. இவர் வீசிய எழும்பிய பந்து ஒன்று லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுன்ஸ் ஆக ரஹானே லெக் திசையில் திருப்பி விட முயன்றார் ஆனால் பந்தோ மட்டையின் வெளி விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. 18 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த ரஹானேயின் துன்பம் முடிவுக்கு வந்தது.
ராயுடுவுக்குத் துன்பம் கொடுக்க இளம் புயல் தஸ்கின் அகமட் வந்தார். பந்து உள்ளே வந்து எழும்பியது. அவரோ எளிதாக தேர்ட்மேன் திசையில் தட்டிவிடலாம் என்று ஆடினார் ஆனால் கூடுதல் பவுன்ஸினால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு முஷ்பிகுரிடம் கேட்ச் ஆனது.
மனோஜ் திவாரி வந்தார், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 2 ரன்களில் அல் அமின் ஹுசைன் பந்தை தேவையில்லாமல் தொட்டு 2வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 17/4.
கேப்டன் ரெய்னா இறங்கி அல் அமின் ஹுசைனின் ஒரே ஒவரில் 3 பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை ஊட்டினர். புஜாரா திணறியபடியே அவுட் ஆகாமல் இருந்தார் 37/4 என்ற நிலையில் மீண்டும் மழை வந்தது. பிறகு ஆட்டம் 40 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது.
ரெய்னா 25 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பந்து கையுறையில் பட்டு லெக் திசையில் கீப்பரிடம் செல்ல முஷ்பிகுர் அபாரமாக கேட்ச் பிடித்தார். புஜாரா கடைசியாக மோர்டசா பந்தை பவுண்டரி அடித்தார். சாஹா இறங்கி இரண்டு பவுண்டரிகளுடன் புத்துயிர் கொடுத்தார். இவரும் 16 ரன்களில் ஷாகிப் பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.
அடுத்ததாக 63 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த புஜாரா வேதனை முடிவுக்கு வந்தது. ஷாகிப் பந்து ஒன்று நன்றாகத் திரும்ப புஜாராவின் பின்னங்காலில் பட எல்.பி. ஆகி வெளியேறினார். கடைசியில் அன்று பவுலிங்கில் கலக்கிய ஸ்டூவர்ட் பின்னி இன்று 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இந்தியா 119/9 என்று முடிந்தது.
தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி கூறுகையில், “எனக்கு இந்த வாய்ப்பை அளித்த எனது அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை, ஆனால் இளம் வீரர்களாக இங்கு வந்து நிரூபித்துள்ளோம். இந்த ஆட்டத்தில் 140 ரன்களுக்குத் திட்டமிட்டோம், 140 ரன்கள் எடுத்தால் சவால் அளிக்கலாம்” என்றார்.
கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், “அணியின் ஆட்டம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன், குறிப்பாக ஸ்டூவர்ட் பின்னி. இவர் மோகித் சர்மா, உமேஷ் யாதவுடன் இணைந்து சிறப்பாக வீசினார். இங்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஆட வந்தபோது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட் எங்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவார். இப்போது அவரது பந்து வீச்சைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் வீரர்கள் நல்ல திறமையைக் காண்பித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT