Published : 17 Jun 2014 04:24 PM
Last Updated : 17 Jun 2014 04:24 PM

இந்தியாவை 105 ரன்களுக்குச் சுருட்டியது வங்கதேசம்

டாக்காவில் இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்தியா 25.3 ஓவர்களில் 105 ரன்களுக்குச் சுருண்டது.

அறிமுக வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட் 8 ஓவர்கள் வீசி 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிகபட்சமாக ரெய்னா 27 ரன்கள் எடுத்தார். இவரை ஸ்டூவர்ட் பின்னி ரன் அவுட் செய்தார். 2வது ரன்னிற்கு கேப்டன் அழைத்தால் ஓட வேண்டியதுதான் பேட்ஸ்மெனின் கடமை. ஆனால் அவர் வேண்டாம் என்று நிற்க ரெய்னா மீண்டும் ரன்னர் முனைக்குத் திரும்புவதற்குள் மோர்டசா ரன் அவுட் செய்து விட்டார்.

மொத்தம் 4 வீரர்களே இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டினர். அதன் பிறகு எக்ஸ்ட்ராஸ்தான் 11 ரன்கள். மீதி வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கியில் வெளியேறினர்.

மழை காரணமாக ஆட்டம் 41 ஓவர்கள் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற முஷ்பிகுர் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

பந்துகள் மோர்டசாவுக்கு ஸ்விங் ஆனது. முதல் ஓவர் 2வது பந்தில் மோர்டாசா இன்ஸ்விங்கரை வீச அதனை முன்னங்கால் பேடில் வாங்கி எல்.பி. ஆனார். ரஹானே. நேராக வரும் பந்தை மட்டையை சட்டென இறக்குவதில் அவருக்கு தாமதம் ஏற்பட்டது. ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

5.2 ஓவர்களில் 14 ரன்கள் இருந்தபோது மழை குறுக்கிட ஆட்டம் இந்திய நேரம் 3.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.

அப்போது வங்கதேசத்தின் புதிய வேகப்புயல் தஸ்கின் அகமட் அவுட் ஸ்விங்கர் ஒன்றை வீச எழும்பிய பந்தை அவர் தவறாக புல்ஷாட் ஆட முயன்றார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கேட்ச் ஆகிறது. உத்தப்பா 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ராயுடு வந்தார் 1 ரன் எடுத்திருந்த நிலைஇல் தஸ்கின் அகமட் வீசிய இன்ஸ்விங்கருக்கு நன்றாக முன்னே வந்து ஆடாமல் மட்டையைக் கொண்டுவந்தார். பந்து உள்ளே வந்து பேடைத் தாக்க நேராக எல்.பி. ஆனார்.

புஜாராவின் திணறல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 34 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த அவர் தஸ்கின் அமகட் வீசிய அபாரமான இன்ஸ்விங்கருக்கு மட்டையை விரைவாக கீழே இறக்க முடியவில்லை. பந்து பின்னங்கால் பேடைத் தாக்க நேராக எல்.பி. ஆனார்.

விருத்திமான் சாஹா, மஷ்ரபே மோர்டாசாவின் ஃபுல் லெந்த் பந்தில் 5 ரன்னிற்கு எல்.பி. ஆகி வெளியேறினார். ரெய்னாவை ரன் அவுட் செய்த ஸ்டூவர்ட் பின்னி ஆடியிருக்கவேண்டும். ஆனால் அவரோ 3 ரன்களில் தஸ்கின் அகமட் வீசிய வெளியே சென்ற பந்தை ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இடையில் அஸ்கர் படேல் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்து பவுல்டு ஆனார்.

அமித் மிஸ்ரா 4 ரன்களில் தஸ்கின் வீசிய ஃபுல் பந்தை பிளிக் செய்ய முயன்றார் ஆனால் நேராக கால்காப்பில் வாங்கினார். அவுட் ஆகி வெளியேறினார். தஸ்கின் அகமட் தன் அறிமுக ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நல்ல உயிர்ப்புடன் வீசுகிறார். அளவு மற்றும் திசை நேர்த்தியாக இருக்கிறது.

கடைசியில் உமேஷ் யாதவ் ஒரு அதிர்ச்சிகரமான புல் ஷாட்டில் சிக்ஸ் ஒன்றையும் பவுண்டரி ஒன்றையும் அடித்து 17 ரன்கள் எடுக்க இந்தியாவின் ரன் எண்ணிக்கை 3 இலக்கங்களைத் தொட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x