Published : 04 Jun 2014 02:56 PM
Last Updated : 04 Jun 2014 02:56 PM
எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சேனநாயகே மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
அவரது பந்து வீச்சு முறை விட்டெறிவது போல் இருப்பதாக ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று இங்கிலாந்து ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ரன் அவுட் செய்ததாக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தன்னை முறையற்றப் பந்து வீச்சிற்காக புகார் தெரிவித்ததால் பழிதீர்ப்பதற்காக அவர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ரன்னர் முனையில் ரன் அவுட் செய்ததாக இங்கிலாந்து குழாமில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து முதலில் பேட் செய்தபோது 42வது ஓவரில் சேனநாயகே இருமுறை பந்து வீச வந்து நிறுத்தி விட்டு பந்து வீசும் முன்னரே அதிக தூரம் கிரீஸை விட்டுச் செல்லும் கிறிஸ் பட்லரை எச்சரித்தார். பட்லரோடு சேர்ந்து ஜோர்டானுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
ஏனெனில் பந்து வீசும் முன்னரே கிரீஸை விட்டு கொஞ்ச தூரம் கடந்து வந்து விட்டால், விரைவாக சிங்கிள் ஓடி விடலாம் அல்லது ஒரு ரன்னை இரண்டு ரன்னாக மாற்றலாம்.
இது தெரிந்துதான் சேனநாயகே எச்சரிக்கை விடுக்கிறார். ஆனால் 44வது ஓவரில் மீண்டும் ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு பந்து வீசும் முன்னரே நகர இந்த முறை சேனநாயகே ரன்னர் முனை பைல்களை அகற்றி அவுட் செய்தார்.
1992ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தென் ஆப்பிரிக்க வீரர் பீட்டர் கர்ஸ்டன் இப்படித்தான் ஊருக்கு முன்பாக கிரீஸை விட்டுச் சென்ற போது கபில்தேவ் எச்சரித்தார். அவர் தொடர்ந்து அப்படியே செய்ய கபில்தேவ் ஓடி வந்து பந்து வீசாமலேயே பைல்களை எடுத்து ரன் அவுட் செய்தார்.
அதன் பிறகு இப்போதுதான் இவ்வாறான ரன் அவுட் செய்யப்படுகிறது. சேனநாயகே கிரிக்கெட் விதிமுறைகளுக்குட் பட்டுத்தான் இந்த ரன் அவுட்டைச் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இங்கிலாந்து குழாமில் இது குறித்து அதிருப்தி நிலவுகிறது. மைக்கேல் வான் கூறுகையில், “ஜோஸ் பட்லர் நீண்ட தூரம் செல்லவில்லை, அவரை அப்படி ரன் அவுட் செய்ய வேண்டிய அவசியமில்லை, கேப்டன் மேத்யூஸ் மீண்டும் அழைத்திருக்கலாம் என்றும், சங்கக்காரா கிரிக்கெட் ஆட்ட உணர்வு பற்றி பேசுகிறார் ஆனால் அவரும் ஜோஸ் பட்லரை இவ்வாறு ரன் அவுட் செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்தார்” என்று சாடியுள்ளார்.
இந்த ரன் அவுட்டினால் இங்கிலாந்து 50 ஓவர்கள் முடியும் முன்னரே 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை 222 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றதோடு ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது. தொடர் நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT