Published : 29 Jun 2014 03:34 PM
Last Updated : 29 Jun 2014 03:34 PM
லீசெஸ்டர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால், இந்தியப் பந்துவீச்சு நன்றாகக் 'கவனிக்கப்பட்டது. 'குறிப்பாக இஷாந்த் சர்மா மிக மோசமாக வீசினார்.
தற்போது இங்கிலாந்தின் துவக்க வீரராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் சாம் ராப்சனின் சகோதரர் ஆங்கஸ் ராப்சன் மற்றும் கிரெக் ஸ்மித், இருவரும் இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார் ஆகிய இந்தியப் பிரதானப் வேகப் பந்து வீச்சாளர்களைப் புரட்டி எடுத்தனர்.இருவரும் அதிவேக 221 ரன்களைச் சேர்த்ததோடு,இருவருமே கிட்டத்தட்ட 100 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தனர்.
ராப்சனும் ஸ்மித்தும் இணைந்து 30 ஓவர்களில் 178 ரன்களை விளாசினர். குறிப்பாக ஜாகீர் கான் இல்லாத நேரத்தில் இந்தியாவின் பவுலிங் கேப்டன் என்று பார்க்கப்பட்ட இஷாந்த் சர்மா பந்துவீச்சு எடுபடாமல் போனது. தொடர்ந்து நோபால்கள், மோசமான லெந்த் என்று முதல் 4 ஓவர்களிலேயே 40 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தார்.
மைதானத்திலிருந்த மிகச் சிறிய இந்திய ரசிகர்களே இஷாந்த் பந்து வீச்சை கடுமையாகக் கேலி செய்தனர், அவர் ஒவ்வொரு முறை பந்துவீசத் துவங்கும் போதும் அவரை கடும் கேலி செய்ததாகவும், ஃபீல்டிங் செய்ய பவுண்டரி அருகே சென்றபோதெல்லாம் அவரைப் பார்த்து சில ரசிகர்கள் முதுகை வளை, நல்ல முயற்சி செய் என்று அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.
கடைசியில் இஷாந்த் ஆக்ரோஷம் காட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவரது இந்த மோசமான பந்துவீச்சால் முதல் டெஸ்ட் போட்டிக்கு அவரின் தேர்வு சந்தேகமே.
வானிலை மேக மூட்டமாக ஸ்விங் பந்து வீச்சிற்கு சாதகமாகவே இருந்தது. இதில் பங்கஜ் சிங் அருமையாக வீசி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். மொகமட் ஷமி நல்ல கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்கிறேன் என்பதை அறிவுறுத்துவதைப் போல வீசினார். பிறகு வருண் ஆரோன் இவரும் நல்ல வேகத்தில் வீசினார். இவர்கள் பந்து வீச்சில்தான் பேட்ஸ்மென்கள் கொஞ்சம் திணறினர்.
லீசெஸ்டர் அணி 63 ஓவர்களிலேயே 349 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. புவனேஷ் குமார் டியூக் (சிவப்பு நிற) பந்தை இதுவரை பார்த்ததில்லை என்று தெரிந்தது. 7 ஓவர்களில் 46 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார். இந்தியத் தேர்வுக்குழுவினால் கடந்த 4 ஆண்டுகளாக வாய்ப்புத் தராமல் ஒழிக்கப்பட்ட பங்கஜ் சிங் நல்ல வேகத்துடன் ஸ்விங் செய்தார். இதனால் அவர் 11 ஓவர்களில் 3 மைடன்களுடன் 46 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இஷ்சாந்த் 9 ஓவர்களில் 64 ரன்கள் 2 விக்கெட். மொத்தம் 10 வீச்சாளர்கள் வீசினர். ஆனால் விழுந்த விக்கெட்டுகளோ வெறும் 5. ராப்சன் 146 பந்துகளில் 26 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்தார். கிரெக் ஸ்மித் 17 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 102 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார்.
வரும் செவ்வாயன்று டெர்பிஷயர் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் ஜூலை 9ஆம் தேதி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT