Published : 13 Jun 2014 07:58 PM
Last Updated : 13 Jun 2014 07:58 PM
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் இளம் வீரர் ஜோ ரூட் 200 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இரட்டைச் சதம் எடுக்கும் 3வது இளம் இங்கிலாந்து வீரர் ஆவார் இவர்.
மேலும் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸில் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத் தக்கது.
முதல் நாளில் எடுத்த 344/5 என்ற ரன்களுடன் இன்று துவங்கியது இங்கிலாந்து. முதலில் 400 ரன்களை எட்டியது. சுமார் 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி 400 ரன்களைப் பார்த்துள்ளது.
உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து ஆக்ரோஷமாக அதிரடியாட்டம் ஆடியது. இலங்கை பந்து வீச்சை மெதுவாக்கினாலும் 24 ஓவர்களில் 129 ரன்களை உணவு இடைவேளை வரை அடித்து நொறுக்கியது.
ஸ்டூவர்ட் பிராட் 38 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள். பிளன்கெட் 39 ரன்களை எடுத்தார். ஜோ ரூட் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் 150 ரன்களை எட்டினார்.
பெல் விக்கெட்டை நேற்று வீழ்த்தும்போது இங்கிலாந்து 120/4 என்று தட்டுத் தடுமாறியது. அதிலிருந்து ஆட்டத்தின் பிடியை இழந்தது இலங்கை. பிரையரை 86 ரன்கள் அடிக்கவிட்டது பெரும் தவறாக முடிந்தது. பிரையரும், ஜோ ரூட்டும் இணைந்து 40 ஓவர்களில் 171 ரன்களைச் சேர்த்தனர்.
இன்று 402/7 என்று ஆன போதும், பின்கள வீரர்களை விரைவில் வீழ்த்தமுடியாமல் இலங்கைத் திணறியது. அதன் பலன் ஜோ ரூட்டின் இரட்டைச் சதம் மற்றும் கடைசி 3 விக்கெட்டுகள் சேர்ந்து 173 ரன்களைச் சேர்த்ததும் ஆகும்.
இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, எரங்கா 163 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடது கை ஸ்பின்னர் ரங்கன்னா ஹெராத்திற்கு நேரம் சரியில்லை. அவர் 37 ஓவர்களில் 136 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இலங்கை முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னவும், ஜே.கே.சில்வாவும் களமிறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT