டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி நிர்ணயித்த 179 என்ற கடின இலக்கை விரட்ட சென்னையின் ஸ்மித் மற்றும் மெக்கல்லம் ஜோடி களமிறங்கியது. இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கான சிறந்த அஸ்திவாரத்தை அமைத்தனர். இந்த இணை 68 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தது.
12-வது ஓவரில் சுக்லாவின் பந்தில் மெக்கல்லம் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்த ரெய்னா, ஸ்மித்திற்கு இணையாக அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். 38 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தபின்னும் ஸ்மித் டெல்லி பந்துவீச்சாளர்களை பந்தாடினார்.
51 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்த ஸ்மித், 79 ரன்களுக்கு பார்னெல் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தோனி களமிறங்கினார். உனத்காட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா 1 ரன் அடிக்க, அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் தோனி. அடுத்த இரண்டு பந்துகளில் முறையே 2 ரன்களும் ஒரு பவுண்டரியும் வர, 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, சென்னை 181 ரன்களை எடுத்து, டெல்லியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது சென்னை அணி.
முன்னதாக, ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி, டாஸில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் டி காக் மற்றும் முரளி விஜய் ஆரம்பத்தில் நிதானித்து, பின் அதிரடியாக ஆடத் துவங்கினர். டி காக், 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த டெல்லியின் கேப்டன் பீட்டர்சன், மோஹித் சர்மாவின் பந்துவீச்சில், டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் பின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் நிலையை சீராக்கியது. 35 பந்துகளில் அரை சதம் கடந்த கார்த்திக் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அஸ்வின் சுக்லாவை 1 ரன்னுக்கு வீழ்த்த, ஜடேஜாவின் பந்துவீச்சில், முரளி விஜய் 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
15 ஓவர்களுக்குள் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணிக்கு, டுமினி நம்பிக்கை அளித்தார். மோஹித் சரமா வீசிய 18-வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளோடு 17 ரன்களை அவர் எடுத்தார். மறுமுனையில் ஆடிய ஜாதவ்வும் அதிரடியில் இறங்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. டுமினி 17 பந்துகளில் 28 ரன்களுடனும், ஜாதவ் 18 பந்துகளில் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
WRITE A COMMENT