Published : 11 May 2014 11:30 AM
Last Updated : 11 May 2014 11:30 AM
சென்னையில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் சச்சின் தலாலும், மகளிர் குண்டு எறிதல் பிரிவில் நவ்ஜீத் கௌரும் தேசிய சாதனை படைத்ததோடு, ஆசிய மற்றும் உலக ஜூனியர் போட்டிகளில் பங்கேற்கவும் தகுதி பெற்றனர்.
12-வது பெடரேஷன் கோப்பை போட்டிக்கான தேசிய ஜூனியர் தடகளப் போட்டி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் ஹரியாணா வீரர் சச்சின் தலால் , தனது முதல் முயற்சியிலேயே 58.11 மீ. தூரம் வட்டு எறிந்தார்.
இதன்மூலம் தங்கப் பதக்கத்தை உறுதி செய்த சச்சின், ஆசிய மற்றும் உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். இதுதவிர 4 ஆண்டுகால தேசிய சாதனையையும், போட்டி சாதனையையும் (மீட் ரெக்கார்டு) முறியடித்தார். முன்னதாக 2010-ம் ஆண்டு மே மாதம் புணேவில் நடைபெற்ற போட்டியில் கிரிபால் சிங் 58.10 மீ. தூரம் வட்டு எறிந்ததே சாதனையாக இருந்தது. அந்த 4 ஆண்டுகால சாதனையை இப்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் சச்சின். சச்சினுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் வீரர் பிரவீண்குமார் (54.76 மீ. தூரம்), ஹரியாணா வீரர் பிரவீண் குமார் (52.69 மீ.) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
நவ்ஜீத் கெளர் அபாரம்
மகளிர் குண்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் கௌர் 15.89 மீ. தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்றதோடு, ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றார். மேலும் 5 ஆண்டுகால தேசிய சாதனையையும் முறியடித்தார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை தேசிய சாதனைக்கு (15.44 மீ.) சொந்தக்காரராக இருந்த பஞ்சாபின் மன்பிரீத் கௌர் 13.53 மீ. தூரம் குண்டு எறிந்து 2-வது இடத்தையே பிடித்தார். ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதி தூரத்தையும் அவர் எட்டவில்லை. மற்றொரு பஞ்சாப் வீராங்கனை ராமன் பிரீத் (13.50 மீ.) 3-வது இடத்தைப் பிடித்தார்.
ஆடவர் டெக்கத்லான் பிரிவில் ஹரியாணாவின் அங்கித் சைனி 6600 புள்ளிகளுடன் தங்கம் வென்றதோடு, ஆண்டுகால போட்டி சாதனையை முறியடித்து ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதிபெற்றார். அதேபிரிவில் அமோலக் சிங் (மகாராஷ்டிரம், 6332 புள்ளிகள்), முகமது ஹப்ஸ் (கேரளம், 6192) ஆகியோர் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தனர்.
மற்ற போட்டிகளில் முதல் 3 இடம்
ஆடவர் 400 மீ. ஓட்டம்: அர்ஜூன் கோஹார் (ஹரியாணா, 48.17 விநாடிகள்), கம்பீர்தீப் (பஞ்சாப், 48.73), மோகன்குமார் (தமிழ்நாடு, 48.75).
ஆடவர் 10000 மீ. விரைவு நடை: கரண் ரதீ (ஹரியாணா, 46 நிமிடம், 18.54 விநாடிகள்), சைலேஷ் குமார் (மத்தியப் பிரதேசம், 46:20.63), மன்ஜித் சிங் (பஞ்சாப், 48:54.30).
மகளிர் 10000 மீ. விரைவு நடை: நீனா (கேரளம், 54:58.59), பிரியங்கா (உத்தரப் பிரதேசம், 56:48.02), பின்ஸி (கேரளம், 59:25.74).
மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதல்: எமிதா பாபு (கேரளம், 3 மீ. தூரம்), பவித்ரா (கர்நாடகம், 2.60 மீ.), கோபிகா நாயர் (2.60 மீ.). மகளிர் 400 மீ. ஓட்டம்: விஜயகுமாரி (கர்நாடகம், 56.67 விநாடிகள்), ஜிசா (கேரளம், 57.06), அர்ச்சனா (மகாராஷ்டிரம், 57.73).
மகளிர் மும்முறைத் தாண்டுதல்: பாய்ராபி ராய் (மேற்கு வங்கம், 12.78 மீ. தூரம்), பூமிகா தாக்குர் (பஞ்சாப் 12.67 மீ.), ஆதிரா சுரேந்தர் (கேரளம், 12.49 மீ.). ஆடவர் நீளம் தாண்டுதல்: அன்புராஜா (தமிழ்நாடு 7.34 மீ.), சிதேந்தர் (ஹரியாணா, 7.03 மீ.), சதீஷ் ஆரோன் (ஜார்க்கண்ட் 7 மீ.).
4*100 மீ. தொடர் ஓட்டம்: தமிழகம் (புகழேந்தி, முகமது நிசான், மனோஜ், அருண், 42.85 விநாடி), ஹரியாணா (42.92), கேரளம் (43.36).
தமிழகம் முதலிடம்
மகளிர் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் தமிழக அணி (தனலட்சுமி, தீபிகா, வினோதினி, அர்ச்சனா) 48.25 மீ. தூரத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றபோதும், ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறவில்லை. அதே நேரத்தில் 13 ஆண்டுகால போட்டி சாதனையை (மீட் ரெக்கார்டு) முறியடித்துள்ளது. இந்தப் பிரிவில் கேரளம் 2-வது இடத்தையும், டெல்லி 3-வது இடத்தையும் பிடித்தன.
குக்கிராமம் டூ உலக சாம்பியன்ஷிப்
வெற்றி குறித்துப் பேசிய சச்சின், “இந்தப் போட்டியில் 58.11 மீ. தூரம் வட்டு எறிந்ததுதான் எனது “பெர்சனல் பெஸ்ட்”. ஹரியாணாவில் நான் வசிக்கும் குக்கிராமமான மதினாவில் பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ஆனாலும் இந்த அளவுக்கு வர முடிந்ததற்கு எனது பயிற்சியாளர் ராஜேஷ்தான் காரணம்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளால் இல்லை. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்காக இன்னும் ஒரு வாரத்தில் சோன்பட்டில் பயிற்சியைத் தொடங்கவிருக்கிறேன்.” என்றார்.
தீபிகாவுக்கு மகிழ்ச்சியும், ஏமாற்றமும்...
மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தீபிகா 14.19 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதி நேரத்துக்குள் இலக்கை கடந்தபோதும், வயது காரணமாக அவரால் தகுதி பெறமுடியவில்லை. மேற்கண்ட இரு போட்டிகளிலும் 1995 மற்றும் அதற்கு பிறந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் தீபிகா 1994 செப்டம்பர் 19-ம் தேதி பிறந்திருப்பதால் தகுதிபெற முடியாமல் போனது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான போட்டியில் தங்கம் வென்றவரான தீபிகா 14.19 விநாடிகளில் இலக்கை எட்டியது அவருடைய “பெர்சனல் பெஸ்ட்” ஆகவும் அமைந்தது. தங்கப் பதக்கமும், பெர்சனல் பெஸ்டும் பெற்றது தீபிகாவுக்கு மகிழ்ச்சியாக அமைந்தாலும், ஆசிய, உலக தடகளப் போட்டிகளுக்கு தகுதிபெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.
அவருடைய பயிற்சியாளர் நாகராஜ் கூறுகையில், “தீபிகா 14.3 விநாடிகளில் இலக்கை எட்டுவார் என எதிர்பார்த்தேன். போட்டி கடுமையாக இருந்ததால் 14.1 விநாடிகளில் இலக்கை கடந்துவிட்டார். அவரின் செயல்பாடு ஆச்சர்யமளிக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT