Published : 24 May 2014 03:50 PM
Last Updated : 24 May 2014 03:50 PM

’சயீத் அஜ்மல் த்ரோ’ செய்கிறார்’ -பிராட் கருத்தால் புதிய சர்ச்சை

பாகிஸ்தானின் புதிர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தை த்ரோ செய்கிறார் என்று ஸ்டூவர்ட் பிராட் ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கனவே அஜ்மல் பந்து வீச்சு மீது சந்தேகம் எழுந்து கடும் பரிசோதனைகளூக்குப் பிறகு ஐசிசி அவரது பந்து வீச்சு முறையை அங்கீகரித்தது.

இந்த நிலையில் ஐசிசி முறையாக பவுலிங் வீசுபவர் அஜ்மல் என்று கூறிய பிறகு ஸ்டூவர்ட் பிராட் மோசமாகக் கருத்து தெரிவித்திருப்பது அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதை வலியுறுத்துவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீரென சயீத் அஜ்மல் பவுலிங் மீது இத்தகைய கருத்து எழுவதற்குக் காரணம், அவர் தற்போது இங்கிலாந்து அணியான வொர்ஸ்டர்ஷயருக்கு ஆடி வருகிறார். இதில் ஒரு இன்னிங்ஸில் 19 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஜ்மல், மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது ட்விட்டரில் “பந்து வீசும்போது நீங்கள் உங்கள் முழங்கையை 15 டிகிரி வரை மடக்கலாம்” என்று அஜ்மல் படத்தை வெளியிட்டு கேலியாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்டூவர்ட் பிராட் “பரிசோதனைச் சாலையில் ஒரு வீரரை வீசச் செய்யும்போது ஒழுங்காக வீசிவிடுவர். ஆனால் மைதானத்தில் விக்கெட்டுகள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறதே” என்று மைதானத்தில் அஜ்மல் த்ரோ செய்வார் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் மைய வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் ஒருவர் மற்றொரு வீரர் பற்றி மரியாதை குறைவான கருத்தைத் தெரிவிப்பது கூடாது. இதனால் பிராடிற்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஷேன் வார்ன் போன்று இன்னொரு ஸ்பின்னரை ஆஸ்ட்ரேலியாவினால் உருவாக்க முடியாது. இங்கிலாந்தினால் ஸ்பின்னர்களை உருவாக்கவும் முடியாது, ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக அவர்கள் பேட்டிங் தடுமாற்றமும் தொடரவே செய்யும். இந்த நிலையில் ஆசிய சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி மேற்கத்திய கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள் மோசமாக எழுதி வருவது பேசிவருவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x