Published : 14 May 2014 12:42 AM Last Updated : 14 May 2014 12:42 AM
யுவராஜ் சிங் விளாசலில் டெல்லியை மூழ்கடித்தது பெங்களூரு
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூரு அணியின் வீரர் யுவராஜ் சிங், 29 பந்துகளில் 68 ரன்களைக் குவித்து வலுவான இலக்கை நிர்ணயிக்க முக்கியக் காரணமாய் இருந்தார்.
187 ரன்கள் இலக்கை விரட்ட டெல்லியின் முரளி விஜய் மற்றும் டி காக் களமிறங்கினார். முதல் ஓவரிலேயே விஜய் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டி காக் 6 ரன்களுக்கு வீழ்ந்தார். ஆரம்பத்திலேயே பாதை மாறிய டெல்லியின் பேட்டிங்கை அகர்வால் மற்றும் பீட்டர்சன் இணை மீண்டும் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்தது. இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 63 ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோர் 9.1 ஓவர்களில் 73 ரன்களை எட்டியது.
அகர்வால் 31 ரன்களுக்கும் பீட்டர்சன் 33 ரன்களுக்கும் பெவிலியன் திரும்ப மீண்டும் பெங்களூரின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த டுமினி மற்றும் ஜாதவ் இணை வெற்றிக்காக போராட ஆரம்பித்தனர். டுமினி 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருக்கையில் வீழ்ந்து, அரை சதத்தையும் தவற விட்டார். அடுத்து வந்த சுக்லாவுடன் சேர்ந்த ஜாதவ் கடினமாக முயன்றும் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியால் 170 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மழையின் காரணமாக ஆட்டம் 50 நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. பெங்களூரு அணியின் துவக்க வீரர் கெயில், ஒரு சிறிய அதிரடிக்குப் பின் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலி 10 ரன்களுக்கும், படேல் 29 ரன்களுக்கும் டி வில்லியர்ஸ் 33 ரன்களுக்கும் வீழ்ந்தனர். 15-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 108 ரன்களை பெங்களூரு எடுத்திருந்தது. சென்ற போட்டியைப் போலவே இன்றும் யுவராஜ் சிங் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.
17-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் விளாசிய யுவராஜ் கடைசி ஓவரில் மீண்டும் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் விளாசினார். தனது ஆட்டத்தில் மொத்தம் 9 சிக்ஸர்களையும் 1 பவுண்டரியும் விளாசி 29 பந்துகளை மட்டுமே சந்தித்து 68 ரன்களை யுவராஜ் எடுத்திருந்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் 186 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என பெங்களூரு தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது.
WRITE A COMMENT