Published : 26 Feb 2020 09:16 AM
Last Updated : 26 Feb 2020 09:16 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி வரும் மார்ச் 2-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க உள்ளார்.
2 உலகக் கோப்பை பட்டங்களை வென்று கொடுத்துள்ள 38 வயதான தோனி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இன்னும் திரும்பவில்லை. இதனால் அவரது ஓய்வு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
எனினும் தோனி தனது அடுத்த நகர்வு குறித்து மவுனம் காத்து வருகிறார். இதற்கிடையே வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து கடந்த ஜனவரி மாதம் தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இருப்பினும் தோனி வழக்கம் போன்று ஜார்க்கண்ட் அணியினருடன் இணைந்து அவ்வவ்போது பயிற்சிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தொழில் முறை போட்டியான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்பதற்கு தயாராகும் விதமாக மார்ச் 2-ம் தேதி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தனது பயிற்சியை தொடங்க உள்ளார் தோனி. அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மார்ச் 29-ம் தேதி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், “மார்ச் 2-ம் தேதி முதல் தோனி, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார். அந்த நேரத்தில் கிடைக்கும் வீரர்களுடன் இணைந்து தோனி பயிற்சிகள் மேற்கொள்வார். மார்ச் 19-ம் தேதி முழு அளவிலான பயிற்சி முகாம் தொடங்கும். அப்போது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இணைந்து கொள்வார்கள்” என்றார்.
சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட சில வீரர்களுடன் இணைந்து இரு வார காலத்துக்கு தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சிறிய ஓய்வுக்கு பின்னர் பயிற்சி முகாமுக்கு தோனி திரும்பக்கூடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT