Published : 10 Feb 2020 09:39 AM
Last Updated : 10 Feb 2020 09:39 AM

இந்தியாவை வீழ்த்தியது பெல்ஜியம்

புவனேஷ்வர்

எப்ஐஹெச் புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில் நேற்று முன்தினம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் நேற்று இரு அணிகளும் மீண்டும் மோதின. இதில் ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இதை அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ் கோலாக மாற்ற பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய அணி 15-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. விவேக் பிரசாத் அடித்த பீல்டு கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 17-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மெக்ஸிம் பிளனிவாக்ஸ் பீல்டு கோல்டு அடித்து அசத்தினார். இதனால் பெல்ஜியம் 2-1 என முன்னிலை பெற்றது.

ஆனால் அடுத்த நொடியில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அமித் ரோஹிதாஸ் கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்தது. 26-வது நிமிடத்தில் மெக்ஸிம் பிளனிவாக்ஸ் மீண்டும் ஒரு முறை பீல்டு கோல் அடித்து மிரளச் செய்தார். இதனால் பெல்ஜியம் 3-2 என முன்னிலை வகித்தது.

இதன் பின்னர் கடுமையாக போராடிய போதும் இந்திய அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேவேளையில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்திய அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x