Published : 08 Feb 2020 10:26 PM
Last Updated : 08 Feb 2020 10:26 PM
நான் மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவே தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் ஆட்டமிழந்த வீடியோவைப் பார்த்தபின்பு தான் எனக்கு வேதனையாக இருந்தது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷைனி தெரிவித்தார்
ஆக்லாந்தில் நடந்த 2-வது ஒருநாள ஆட்டத்தில் இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கேப்டன் கோலி, ராகுல், மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கேதார் ஜாதவ் ஆகியோர் ஆட்டமிழந்தநிலையில் 8-வது விக்கெட்டுக்கு ஷைனியும், ஜடேஜாவும் நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். ஆனால், ஷைனி ஆட்டமிழந்தபின் ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறிப்போனது. 49 பந்துகளைச் சந்தித்த ஷைனி 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஷைனி கூறுகையில், " நான் ஆட்டமிழந்து சென்றபின் அந்த வீடியோவைப் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். நான் மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், வீடியோவைப் பார்த்த பின்புதான் வேதனையாக இருந்தது.
ஆடுகளம் தட்டையாக இருந்தது, நாங்கள் கடைசி ஓவர் வரை நிலைத்துப் பேட் செய்திருந்தால் ஆட்டத்தை நாங்களே முடித்திருப்போம். எங்களால் போட்டியின் கடைசிவரை எந்த அளவுக்குப் பங்களிப்பு செய்ய முடியுமோ அதுவரை நானும், ஜடேஜாவும் விளையாடினோம். பவுண்டரி அடிக்க முடிந்தால் அடித்துவிடு, இல்லாவிட்டால் சிங்கில், இரண்டு ரன்களை எடுத்துக்கொள்வோம் ஆனால், பொறுமையாகப் பேட் செய், இறுதிவரை போட்டியை எடுத்துச் செல்லவேண்டும் என ஜடேஜா என்னை உற்சாகப்படுத்தினார்.
கடைசி வரிசையில் களமிறங்கும் வீரர்கள் இந்த அளவுக்கு விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு விளையாடுவதுதான் அணியின் கூட்டு முயற்சியாகும். பேட்ஸ்மேன்கள் ஸ்கோர் செய்யமுடியாவிட்டால், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு செய்யாவிட்டால், பேட்ஸ்மேன்கள் உதவ வேண்டும். இது அணியின் கூட்டுழைப்பு.

நீண்ட நாட்களுக்குப்பின் நான் நன்றாக பேட்டிங் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் பவுண்டரி அடித்தவுடனே நானே அதிர்ச்சியடைந்துவிட்டேன். பந்துகள் என் பேட்டை நோக்கி வேகமாக வந்ததால், அடித்து விளையாட வசதியாக இருந்தது. என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர் எனக்கு ஏராளமான டிப்ஸ் கொடுத்தார், என்னை உற்சாகப்படுத்தினார். பேட்டிங்கில் கற்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன, இனிவரும் போட்டிகளி்ல் அதிகமாகக் கற்றுக்கொள்வேன். உள்நாட்டு போட்டிகளில் விளையாடும் ஆடுகளத்தைக் காட்டிலும் இங்கு மாறுதலாக இருக்கின்றன.
இவ்வாறு ஷைனி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT