Published : 02 Feb 2020 08:14 AM
Last Updated : 02 Feb 2020 08:14 AM

பட்ஜெட் 2020: விளையாட்டுத்துறைக்கு ரூ.2,826 கோடி நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி

மத்திய பட்ஜெட்டில் 2020-21-ம்நிதியாண்டுக்கு விளையாட்டுத்துறைக்கு ரூ.2,826.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.50 கோடி நிதி கூடுதலாக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

அப்போது விளையாட்டுத்துறைக்கு ரூ.2,826.92 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் கேலோ இந்தியா விளையாட்டுத் திட்டத்துக்கு ரூ.890.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.578 கோடி மட்டுமே இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு ரூ.312.42 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு ரூ.245 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த நிதி ரூ.300.85 கோடியாக இருந்தது. தற்போது ரூ.55.85 கோடி நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களின் நலனுக்கான நிதி ரூ.111 கோடியில் இருந்து ரூ.70 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியான ரூ.77.15 கோடியிலிருந்து ரூ.50 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கான (சாய்) நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.615 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வரும் நிதியாண்டில் இது ரூ.500 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு முகாம்கள், அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், விளையாட்டுக் கருவிகள் வாங்குதல், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான செலவு உள்ளிட்டவற்றை சாய் அமைப்புதான் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2010-ல் அமைக்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு-சாய் விளையாட்டு மைதானங்கள் புதுப்பிப்புப் பணிகளுக் கான நிதி ரூ.96 கோடியிலிருந்து ரூ.75 கோடியாகக் குறைக்கப் பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலநிதிக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.5 கோடி அதிகமாகும்.

2019-ம் நிதியாண்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.2,216.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த நிதி ரூ.2,776.92 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x