Published : 02 Feb 2020 08:12 AM
Last Updated : 02 Feb 2020 08:12 AM
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியகிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விலகிஉள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் அல்லிபோனை கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை உடற் பயிற்சி நிபுணர் அபிஷேக் கவுசிக்குடன் இணைந்து லண்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் அல்லிபோனை சந்தித்து காயம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் அடிப்படையிலேயே டெஸ்ட் தொடரில் இருந்து பாண்டியா விலகி உள்ளார். முழு உடற் தகுதியை பெறும் வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஹர்திக் பாண்டியா பயிற்சிகளை மேற்கொள்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் பின்னர் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவில்லை. கடைசியாக ஹர்திக் பாண்டியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் விளையாடியிருந்தார். அதேவேளையில் டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்டனில் நடைபெற்ற ஆட்டத்துக்கு பிறகு களமிறங்கவில்லை.
வரும் மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற உள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக மார்ச் 29-ம் தேதிதொடங்கும் ஐபிஎல் தொடரில்ஹர்திக் பாண்டியா கலந்துகொள்ளக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT