Published : 17 Jan 2020 08:20 AM
Last Updated : 17 Jan 2020 08:20 AM
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இதனால் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. தொடக்க நிலைகளில் விளையாடும் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல் ஆகிய 3 பேருமே கடந்த ஆட்டத்தில் களமிறக்கப்பட்டனர். இது இந்திய அணிக்கு எதிர்விளைவையே உண்டாக்கியது.
அந்த ஆட்டத்தில் 4-வது வீரராக தன்னை உருவகப்படுத்திக் கொண்ட விராட் கோலி சிறப்பான தொடக்கம் கிடைத்த போதிலும் அதை பெரிய அளவிலான இன்னிங்ஸாக மாற்றத் தவறினார். வழக்கமாக 3-வது வீரராக களமிறங்கி நடுவரிசை பேட்டிங்கை விராட் கோலி பலம் பெறச் செய்வார். ஆனால் மும்பை ஆட்டத்தில் 4-வது வீரராக களம் புகுந்த விராட் கோலி விரைவாக ஆட்டமிழந்ததும் நடுவரிசை ஆட்டம் கண்டது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி மீண்டும் 3-வது இடத்திலேயே களமிறங்குவதில் முனைப்பு காட்டக்கூடும். பாட் கம்மின்ஸ் பவுன்ஸரில் காயம் அடைந்த (மூளை அதிர்ச்சி) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்றைய ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளார். இதனால் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல்.ராகுல் தொடரக்கூடும்.
மேலும் பேட்டிங் வரிசையில் அவரை 4-வது வீரராக களமிறக்குவது குறித்தும் அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். கே.எல்.ராகுல் 4-வது வீரராக களமிறங்கும் பட்சத்தில் ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஆட்டத்தை போன்று 5-வது வீரராக விளையாடுவார். ரிஷப் பந்த் இல்லாததால் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக மணீஷ் பாண்டே களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷர்துதல் தாக்குர் ஆகியோர் நீக்கப்பட்டு ஷிவம் துபே, யுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதில் ஷர்துல் தாக்குர் கடந்த ஆட்டத்தில் 5 ஓவர்களில் 43 ரன்களை தாரை வார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா இன்னும் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. மும்பை ஆட்டத்தில் 7 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், இழந்த பார்மை மீட்டெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய மண்ணில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றிருந்தது. இந்தியாவில் வெளிநாட்டு அணிகள் அடுத்தடுத்து ஒருநாள் போட்டித் தொடர்களை வெல்வது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த வரலாற்றை ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மாற்றி எழுதுவதில் தீவிரம் காட்டக்கூடும். மும்பை ஆட்டத்தில் 256 ரன்கள் இலக்கை ஆரோன் பின்ச் (110), டேவிட் வார்னர் (128) ஜோடி எந்தவித அழுத்தமும் இல்லாமல் 37.4 ஓவர்களில் எளிதாக எட்டியது.
சிறந்த பார்மில் உள்ள இவர்களுடன் நடுவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷான், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே ஆகியோரும் மட்டையை சுழற்றினால் இந்திய பந்து வீச்சு துறை கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியது வரும். வான்கடேவில் ஆஸ்திரேலிய பந்து வீச்சு துறை இந்திய அணியை 255 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்திருந்தது.
வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களான ஆடம் ஸம்பா, ஆஷ்டன் அகர் ஆகியோரும் இந்திய அணி எந்த ஒரு கட்டத்திலும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க அனுமதிக்கவில்லை. அதிலும் ஆடம் ஸம்பா, ஆஷ்டன் அகர் கூட்டணி நடு ஓவர்களில் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுதியது. மேலும் தேவையான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி திருப்பத்தையும் உருவாக்கியிருந்தது. இதனால் மீண்டும் ஒரு முறை இந்த கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டு பெரிய அளவிலான இன்னிங்ஸை மேற்கொள்வதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் இந்திய பந்து வீச்சை மற்றுமொரு முறை சிதைவுக்கு உள்ளாக்கி, அரிதான முறையில் மீண்டும் தொடரை கைப்பற்றுவதில் ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டக்கூடும். இதனால் இன்றை ஆட்டம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையலாம்.
நேரம்: பிற்பகல் 1.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
சாதனையை நோக்கி கோலி
ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுகர் முதலிடத்தில் உள்ளார். அவரது 20 சதங்கள் சாதனையை சமன் செய்வதற்கு விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவையாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவர், அதை எட்டக்கூடும். உள்நாட்டில் 93 ஆட்டங்களில் விராட் கோலி இதுவரை 19 சதங்கள் விளாசியுள்ளார்
மீண்டெழுமா?
கடந்த 2017-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நாட்டில் பெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் அடுத்த நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றிருந்தது. தற்செயலாக அப்போதைய தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த முதல் ஆட்டம் மும்பையில் நடத்தப்பட்டிருந்தது.
ராஜ்கோட் ராசி எப்படி?
மைதானம் புதுப்பிக்கப்பட்ட பிறகு ராஜ்கோட்டில் இதுவரை இந்திய அணி 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி தோல்வியே கண்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஜனவரி 11-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்திலும், 2015-ம் ஆண்டு அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதேவேளையில் பழைய மைதானத்தில் கடந்த 1986-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 261 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT