Published : 05 Jan 2020 04:12 PM
Last Updated : 05 Jan 2020 04:12 PM
கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனையை அந்த அணியில் நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்று 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
2-வது போட்டி கேப்டவுனில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னங்ஸில் இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ம் நாளான நேற்றையஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. பிலாண்டர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடந்தது. பிலாண்டர் 13, ரபாடா ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் ரபாடா டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த நார்டே 4 ரன்கள் சேர்த்த நிலையில் ஆன்டர்ஸனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
89 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 223 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணித் தரப்பில் ஆன்டர்ஸன் 28-வது முறையாக 5 விக்கெட்டுகளையும், பிராட், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 142 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 5 கேட்சுசளைப் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், ஹம்சா, டூபிளசிஸ், வேன் டர் டூசேன், பிரிடோரியஸ், நார்டே ஆகியோரின் விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்து வீழ்த்தினார். உலக அளவில் ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்த 12-வது வீரர் எனும் முத்திரையை ஸ்டோக்ஸ் பதித்துள்ளார்.
இதற்கு முன் முதல்முறையாக கடந்த 1936-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸி. வீரர் ரிச்சார்ட்ஸன் 5 கேட்சுகளைப் பிடித்தார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இதுவரை 1,019 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 23 முறை ஒரே வீரர் ஒரு இன்னிங்ஸில் 4 கேட்சுகளைப்பிடித்துள்ளார். ஆனால், எந்த ஒரு வீரரும் ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்தது. இல்லை. இங்கிலாந்து அணியின் 142 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்று பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்று வரலாறு படைத்துவிட்டார்
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டர்ஸன் 28-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வினின் 27முறை சாதனையை முறியடித்து 8-வது இடத்துக்கு ஆன்டர்ஸன் முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் இலங்கை முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT